(927)

(927)

அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.

பதவுரை

அமலன்

பரிசுத்தனாய்
ஆதி

ஜகத்காரபூதனாய்
பிரான்

உபகாரகனாய்
என்னை

(இழிகுலத்தவனான) என்னை
அடியார்க்கு

(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த

ஆட்படுத்துகையாலே வந்த

விமலன்

சிறந்தபுகரையுடையனாய்
விண்ணவர் கோன்

நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்துவைத்து

(ஆச்ரிதர்கட்காக)

விரை ஆர் பொழில்

பரிமளம் மிக்க சோலைகளையுடைய
வேங்கடவன்

திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்

ஆச்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆச்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்

அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்

சேஷசேஷி முறைவழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்

உயர்ந்த மதிள்களையுடைய
அரங்கத்து

கோயிலிலே (கண்வளர்ந்தருளுகிற)
அம்மான்

ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக்கமல பாதம்

திருவடித்தாமரைகளானவை
வந்து

தானேவந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கருத்து :- பெரியபெருமாள் திருவடிகளிலழகு மேல்விழுந்து தம்மைப் பரவசமாக்கியவாறு கூறுகின்றார், இதில்.  அமலன், விமலன், நிமலன், நின்மலன் என்ற நான்கு சப்தங்களுக்கும் பொருள் ஒன்றே : தாத்பர்யபேதம் மாத்திரம் கொள்ள வேண்டும். பரமநிஹீநரான தாம் ஸந்நிதிக்குள்ளே புகுவதனால் பெருமாளுக்குப் பெருத்த அவத்யம் உண்டாயிடும என்று அஞ்சியிருந்தவர்.  அந்த நங்கை தவிர்ந்தமை தோற்ற அமலன் என்கிறார்.  ஹேயப்ரதிபடன்-ஹேயவஸ்துஸம்பந்தத்தால் தனக்கொரு கெடுதி விளையப்பெறாதவன் என்கை.

தமது சிறுமையை நோக்காதே தம்மைப் பாகவதர்க்கு ஆட்படுத்தி ஒரு சீரிய பொருளாக ஆக்குகையாலே எம்பெருமானது திருமேனியிற்பிறந்த ஒரு விலக்ஷண தேஜஸ்ஸை அநுபவிப்பார் விமலன் என்கிறார்.  தன்னுடைய ஸ்வம்மான ஒரு சரக்கு மிக்க சிறப்புப்பெற்றால் ஸ்வாமியின் மேனி ஒளிபெற்றுத் தோன்றுமன்றோ.

பிரமன் சிவன் முதலானோரும் அஞ்சி அணுக வேண்டும்படியான ஐஸ்வரியம் மிகுந்திருக்கச் செய்தேயும் குறும்பறுத்த நம்பிக்குக் கூசாதே நித்யஸம் ச்லேஷம் பண்ணலாம்படி தனது ஈச்வரச்சுணையாகிற ஆச்ரயணவிரோதி தோஷத்தை மறைத்து “ …………………………. —அர்ச்சகபராதீ நாகிலாத்மஸ்திதி:” என்றபடி அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையை வெளியிட்டு நிற்குமவன் என்பார்.  நிமலன் என்கிறார். நின்மலன் என்றது-அடியார்களுடைய குற்றங்களைக் காண்கையாகிற குற்றமில்லாதவன் என்றபடி. அடியார் குற்றங்களைக் கண்டாலும் அவற்றை போக்யமாகக் கொள்ளுமவனிறே எம்பெருமான்.

முதலடியில், ஆதி என்றவிடத்துக்கு வியாக்கியான மருளிச்செய்யா நின்ற தேசிகன், “இக்காரணத்வமும் மோக்ஷ ப்ரதத்வமும் சத்ர சாமரங்கள்போலே ஸர்வலோக ஸரண்யனுக்கு விசேஷசிஹ்நங்கள்” என்று அருளிச்செய்திருப்பதைக் கண்டுவைத்தும், ஜகத்காரணத்வத்திலும் மோக்ஷ ப்ரதத்வத்திலும் பிராட்டிக்கும் ஸாக்ஷாத் அந்வயமுண்டென்று சிலர் சொல்லுவர்கள்!.

லோகஸாரங்கமா முனிவரின் திருத்தோளின்மேல் ஏறின திருப்பாணாழ்வார்  ஸேஷிவத்தைக் கொண்டாடினாரேயொழிய ஸேஷத்வத்தைப் பாராட்ட வில்லையே; அப்படியிருக்க “அடியார்க்கென்னை ஆட்படுத்தவிமலன்” என்றது எங்ஙனே?  என்று ஸங்கைபிறக்கக்கூடும்; ஸேஷத்வத்துக்குத் தகுதியாகத் திருவடியிலே யிருக்கவேண்டிய திருத்துழாய் திருமுடிமேலேறியிருந்தால் அவ்வளவாலே அதன் ஸேஷத்வம் குறைபடாதன்றோ; அதுபோலக் கொள்க

பிள்ளைதிருநறையூரரையரைச் சிலர்  “பெரியபெருமாளை அனுபவிக்க இழிந்த இவ்வாழ்வார் திருவேங்கமுடையான் பக்கல்போவானேன்?” என்று கேட்க; “ஆற்றிலே அழுந்துகிறவன் ஒருகாலைத் தரையிலே ஊன்றினால் பிழைக்கலாமோ என்று கால்தாழ்க்குமாபோலே, இவரும் பெரியபெருமாளழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையிலே கால்தாழ்ந்தார்” என்றாராம். “ஒருவனைக் கவிபாடும்போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவிபாடவேணும்; பரமபதத்தில் நின்றும் ஸ்ரீமதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப்போலே ஸ்ரீவைகுண்டத்தில் நின்றும் திருமலையில் தங்கியாய்த்துக் கோயிலுக்கு வந்தது; அவ்வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒருகால் அருளிச்செய்தாராம்.

English Translation

The perfect-first-Lord is the radiant king of the celestials and resident of Venkatam surrounded by fragrant groves. His golden rule is just and blemish less. He made me a slave of his devotees. He is the Lord of Arangam surrounded by lofty walls. O, his auspicious lotus feet have come to stay in my eyes!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top