(926)
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித் துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்
அடியனை அளியனென் றருளியுன் னடியார்க் காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே,
பதவுரை
புனல் சூழ் |
– |
திருக்காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட |
அரங்கா |
– |
ஸ்ரீ ரங்கத்தில் கண்வளர்ந்தருளுமவனே! |
கடி |
– |
பரிமளமுடைய |
கமலம் மலர்கள் |
– |
தாமரைப் பூக்களானவை |
மலர்ந்தன |
– |
(நன்றாக) மலர்ந்துவிட்டன; |
கதிரவன் |
– |
(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன் |
கனை கடல் |
– |
கோஷஞ் செய்கையையே இயல்வாகவுடைய கடலிலே |
முளைத்தனன் |
– |
உதயகிரிலே வந்து தோன்றினான்; |
துடி இடையார் |
– |
உடுக்கைபோன்ற (ஸூக்ஷ்மமான) இடையையுடைய மாதர் |
சுரி குழல் |
– |
(தமது) சுருண்டமயிர் முடியை |
பிழிந்து உதறி |
– |
(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறிவிட்டு |
துகில் உடுத்து |
– |
(தம்தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு |
ஏறினர் |
– |
கரையேறிவிட்டார்கள்; |
தொடை ஒத்த |
– |
ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற |
துளவமும் |
– |
திருத்துழாய் மாலையும் |
கூடையும் |
– |
பூக்குடலையும் |
பொலிந்து தோன்றிய |
– |
விளங்கா நிற்கப்பெற்ற |
தோள் |
– |
தோளையுடைய |
தொண்டரடிப்பொடி யென்னும் |
– |
‘தொண்டரடிப்பொடி’ என்ற திருநாமமுடைய |
அடியனை |
– |
தாஸனை |
அளியன் என்று அருளி |
– |
‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி |
உன் அடியார்க்கு |
– |
தேவரீருடைய நித்யகிங்கரர்களான பாகவதர்களுக்கு |
ஆள் படுத்தாய் |
– |
ஆளாக்க வேணும்; |
(அதற்காக) |
||
பள்ளி எழுந்தருளாய் |
– |
திருப்பள்ளியைவிட்டு எழுந்தருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்க்கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும் “கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக்குடலையும் தோளுமாக வந்துநிற்கிற அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத் திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப்பிரபந்தத்தை தலைகட்டுகின்றனர்.
கதிரவன் கடலில் முளைத்தான் என்பதும் மலையினுச்சியில் முளைத்தான் என்பதும் உபலக்ஷணமெனப்படும்;
[துடியிடையார் இத்யாதி] “கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் …. அணியரங்கன்” என்கிற ஸமாதியாலே சொல்லுகிறபடி. ஆயர்மாதர் விடியற் காலத்திலே எழுந்து * கோழியழைப்பதன் முன்னம் குடைந்து நீராடபோரு கையில் நீயும் அவர்கள் பின்னே சென்று ஒளித்திருந்து அங்கவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு, அரவேரிடையார் இரப்ப “மங்கை நல்லீர்! வந்து கொண்மின்” என்று மரமேறியிருக்க, “தோழியும் நானுந் தொழுதோம்” என்பது, “கோலங்கரிய பிரானே! குருந்திடைக்கூறை பணியாய்” என்பது ஆக இப்படி நிகழும் ரஸாநுபங்களை நீ இழந்தாயாகிறாயே; அவ்வாய்ச்சிகள் நீராடித் தலைதுடைத்துத் துகிலுடுத்துக் கரையேறிவிட்டார்களே என்கிறது.
[கூடையும் பொலிந்து தோன்றிய தோள்.] “ஆழியுஞ்சங்கு முடைய நங்களடிகள் என்று எம்பெருமானுக்கு லக்ஷணமாகத் திரு வாழி திருசங்கு அமைந்தாற்போலே ஆழ்வார்க்கு லக்ஷணமாகப் பூக்குடலை அமைந்தபடி. என்று வநவாஸத்திலே மண்வெட்டியும் கூடையுமிறே இளையபெருமாளுக்கு நிரூபமாகச் சொல்லிற்று.
[உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்.] எம்பெருமானளவிலே நிற்பதோடு ஸம்ஸா ரத்திலே மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தில் கால்தாழ்ந்து நிற்பதோடு ஒரு வாசியில்லை; பகவச் சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவதகைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை நன்கு உணர்ந்தவராதலால் தாம்பெற்ற திருநாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.
[பள்ளி யெழுந்தருளாய்.] தேவரீர் பள்ளிக்கொண்டிருப்பது ஸம்ஸாரிகளைப்போலே சோர்வு சோம்பலாலன்றே; ‘எவனைப் பிடிக்கலாம்? எவனை திருத்தலாம்?” என்று யோகுசெய்யுமுறக்க மித்தனையன்றோ? அந்த யோகநித்திரைக்கு பலன் கைபுகுந்தபின்பும் உறங்கக்கடவதோ? உணர்ந்தருளலா காதோ?’ என்கிறார்.
English Translation
See the lotus blooms in profusion. The Sun has risen from the sea. Slender-hipped dames with curly locks come out of the river drying their hair and squeeze-drying their clothes. O Lord of Arangam surrounded by Kaveri waters, you have graced this lowly serf, Tondaradippodi – bearer of flower-basket, with service to devotees. O Lord wake up!