(487)

(487)

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

பதவுரை

உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்

உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள
செங் கழுநீர்

செங்கழுநீர்ப் பூக்களானவை
வாய் நெகிழ்ந்து

விகஸிக்க,
ஆம்பல் வாய் கூம்பின

ஆம்பல் மலர்களின் வாய் மூடிப்போயின;

(அன்றியும்,)

செங்கல் பொடி கூறை வெண்பல் தவத்தவர்–

காவிப்பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள்,
தங்கள் திருகோயில் சங்கு இடுவான்

தமது திருக்கோயில்களைத் திறவுகோலிட்டுத் திறக்கைக்காக
போகின்றார்

போகா நின்றனர்;
எங்களை

எங்களை
முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்

முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப்போன நங்கையே!
நாணாதாய்

(‘சொன்னபடி எழுப்பவில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே
நா உடையாய்

(இனிய பேச்சுக் பேசவல்ல) நாவைப் படைத்தவளே!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன்

சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக்கைகளை யுடையவனும்
பங்கயக் கண்ணனை

தாமரைபோற் கண்ணானுமான கண்ணபிரானை
பாட

பாடுகைக்கு
எழுந்திராய்

எழுந்திரு;

ஏல் ஓர் எம் பாவாய்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

ஆய்ச்சியர் தரளுக்கெல்லாம் தலைவியாய், ‘நான் எல்லார்க்கும் முன்னே உணர்ந்து வந்து எல்லாரையும் உணர்த்தக்கடவேன்’ என்று சொல்லிவைத்து, அதனை மறந்து உறங்குவாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது.

உணர்ந்த ஆய்ச்சிகள் எல்லாருமாகத் திரண்டு இவள் மாளிகை வாசலிலே வந்து நெடும் போதாக நாங்கள் உன் வாசலில் வந்து நின்று துவளா நிற்க, நீ எழுந்திரா தொழிவதென்?’ என்ன; ‘பொழுது விடியவேண்டாவோ எழுந்திருக்கைக்கு? பொழுது விடிந்தமைக்கு அடையாளமென்?’ என்று அவள் கேட்க: ‘செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினமை அடையாளமன்றோ?’ என்று இவர்கள் சொல்ல; அதற்கு அவள், ‘அஹஹ! உங்கள் மயக்கமிருந்தவாறு  என்கொல்!  நீங்கள் என் வாசலில் வந்த களிப்பின் மிகுதியால் உங்கள் கண்கள் அலர்ந்து, நீங்கள் என் முகம் பெறாதொழியவே வெள்கி வெறுத்து உங்கள் வாய் மூடிப்போன்மையைச் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினதாக நீங்கள் நினைத்திட்டீர்கள்; இது உங்களுடைய ப்ரமமே யொழிய வேறன்று’ என்ன; அதற்கு இவர்கள், ‘பேதாய்! வாவியிற் செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினமையைச் சொன்னோங்காண் நாங்கள்’ என்ன; அதற்கு அவள், ‘இரவெல்லாம் வயலெங்குமுலாவி மொக்குகளை மலர்த்துவதும் மலர்களை மூடுவிப்பதுமன்றோ உங்களுக்குக் காரியம்’ என்ன; அடு கேட்ட இவர்கள்’ ‘கட்டுங்காவலுமாயுள்ள தோட்டத்து வாவிகளிலிருக்கும்படியைச் சொன்னோங்காண்’ என்ன; அதற்கு அவள், ‘அங்கும் நீங்கள் சென்றதாகத்தான் நான் சொல்லுகிறேன், என்ன; ‘நாங்கள் வந்தோமென்கைக்கு ஸம்பாவனையுமில்லாத உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியிலுள்ள படியைச் சொல்லுகிறோம்’ என்றார்கள்.

புறம்பு நின்று உட்புகுவதற்கு வழிபெறாது துவள்கின்ற இப்பெண்டிர், அவள் வீட்டுப் புழைக்கடையிற்  செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினபடியை அறிந்ததெங்ஙனே? ஏனில்; மற்றுமுள்ள விடங்களிலெங்கும் அவை வாய்நெகிழ்ந்து வாய் கூம்பியிருக்கின்றமையை இவர்கள் நன்கு அறிந்துள்ளவர்களாதலால், இவள் வீட்டுப் புழைக்கடையிலும் அங்ஙனம் நிகழ்ந்திருக்கத் தட்டில்லை என நிச்சயித்துக் கூறுகின்றனர் என்க; எனவே, அநுமானங்கொண்டறிந்து கூறினரென்றபடி.

இவ்வடையாளத்திற்கும் அவள் ஒரு கண்ணழிவுகூற, வேறோரடையாளங் கூறுகின்றனர்; – (செங்கற்பொடிக்கூறை இத்தியாதி.) திவ்யதேசங்களில் ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளித் திறவுகோல் கொடுத்துத் திருக்காப்பு நீக்குவிக்கிற ஸம்பிரதாய முண்டாதலால் இங்ஙனே சொல்லுகிறது.

இவ்வடையாளங் கூற, உள்ளுள்ளவள் கேட்டு, “தோழிகாள்! ‘ஸததம் கீர்த்த யந்தோமாம்’ என்றும், ‘தெரித்தெழுதி, வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது’ என்றுமுள்ள பிரமாணங்களை மறந்தீர்களோ? பரமை காந்திகளான பாகவதர்கள் ஒருகால் பகவதாராதநம் பண்ணி மற்றைப் போது கிடந்துறங்குவரென்று நினைத்தீர்களோ? எப்போதும் அவர்கள் பகவதாராதநத்திலேயே ஊன்றியிருப்பர்களாதலால் அவர்களுடைய பணி விடிவுக்கு அடையாளமாகாது” என்ன; மேல் அதற்கு உத்தரமாகச் சொல்லுகிறார்கள், எங்களை என்று தொடங்கி;  நங்காய்! ‘நான் எல்லாரிலும் முன்பு உணர்ந்தெழுந்து வந்து தோழிகளையெல்லாம் உணர்த்துகிறேன்’ என்று சொல்லிச் சென்ற நீ, இப்போது எழுந்து வந்தவர்களைமயும் மறுத்துப் பேசுவது சால அழகிதாயிருந்தது; இஃதடங்கலும் உனது நிறைவுக்குக் குறையாமத்தனையாதலால் கடுக எழுந்துவா என்கிறார்கள்.

நாணாதாய் – நீ எழுந்து வாராதொழியிலும் ஒழிக; ‘சொன்னபடி செய்திலோமே!’ என்று நெஞ்சிற் சிறிது வெட்கமுங்கொண்டிலையே; அம்மா! உன்னைப்போற் சுணை கெட்டவள் இவ்வுலகத்தில் வேறொருத்தியுமிலள் என்றவாறு.

உடனே நாவுடையாய்! என அன்பார விளிக்க, அதுகேட்ட அவள், ‘தோழிகாள் நீங்கள் எனக்காக மிக வருந்தினீர்கள்; இதோ எழுந்து வருகிறேன், நான் செய்ய வேண்டிய காரியமென்ன? சொல்லுங்கள்’ என்ன; வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையனாய்த் தாமரை போற் கண்ணனான கண்ணபிரானுடைய கீர்த்திகளைப் பாடுதற்காக அழைக்கின்றோ மத்தனைகாண் என்கிறார்கள்.

கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியுந் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகியார் அதுகண்டு அஞ்சி, ‘அப்பனே! இவ்வாயுதங்களை மறைத்துக்கொள், மறைத்துக்கொள்; எழும்பூண்டெல்லாம் அஸுரமயமாயிருக்கப் பெற்ற இந்நிலத்தில் இவை விளங்குவதற்குரியனவல்ல’ என வேண்ட; அவன் அங்ஙனமே அவ்வாயுதங்களை உடனே உபஸம்ஹரித்திட்டானென்று இதிஹாஸபுராணங்கள் இயம்பா நிற்க, இவ்வாய்ச்சிகள் அக்கண்ணபிரானைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல் பொருந்துமாறென்? எனில்; கண்ணபிரான் அவ்வாயுதங்களை மறைத்திட்டது உகவாத பகைவர்கட்காகவே யாதலால் அவர்களை யொழிந்த மற்றை அன்பர்கட்குத் தோற்றத்தட்டில்லை யெனக்கொள்க;  “நெய்த்தலை நேமியுஞ் சங்கும் நிலாவிய, கைத்தலங்கள் வந்து காணீரே” என்று எசோதைப் பிராட்டி அய்ப்பாடியிற் பெண்டுகளை அழைத்துக் காட்டின பாசுரமுங் காண்க.

(ஸ்வாபதேசம்) தொண்டரடிப் பொடிகளுக்கு அடுத்த திருப்பாணாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.  இதில், நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்! என்ற மூன்று விளிகளும் பாண் பெருமாளுக்கு நன்கு பொருந்தும், நங்கை யென்பது குணபூர்த்தியைச் சொல்லுகிறது.  லோக ஸாரங்க மஹாமுனிகள் வந்து என் தோளின்மீது ஏறிக்கொள்ளுமென்ன, அத்யந்த பார தந்திரிய ஸ்வரூபத்தை நினைத்து அதற்கு உடன் பட்டமை குணபூர்த்தி, அங்ஙனம் அந்தணர் தலைவரது தோளின்மீது ஏறியீருக்கச்செய்தேயும் சிறிதும் செருக்குக் கொள்ளாமல் ‘அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் என்றே பேசினவராதலால் நாணாதவர். (நாண் – அஹங்காரம்) ‘பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்’ என்று தேசிகன் பணித்தபடி ஸகல வேதார்த்தங்களையும் பத்துப் பாசுரத்திலே அடக்கிப் பேசின பரம சதுரராதலால் நாவுஐடயார் “கையினார் சுரிசங்கனலாழியர்” என்று சங்கொடு சக்கர மேந்தின வழகை யநுபவித்தமை பற்றியும் ‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்’ என்று கண்ணழகில் ஈடுபட்டும் பேசினமை பற்றியும் ‘சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாட என்றாள்.  இவ்வாழ்வார் தமது சாதி நிலைமைக்கு ஏற்ப வாழ்ந்த விடத்தைக்கருதி உங்கள் புழைக்கடை யித்யாதி அருளிச் செய்யப்பட்டது.  இவரது சரிதையில் ஸம்பந்தப்பட்ட லோகஸாரங்க மஹாமுனிகளின் தன்மையைக் காட்டுவது போலுள்ளது செங்கற் பொடிக்கூறை யித்யாதி. ‘எங்களை முன்ன மெழுப்புவான் வாய் பேசும் நங்காய்’ என்பதில் ஒரு அழகிய பொருள் தொனிக்கும்.  (அதாவது-) எழுப்புவதாவது – தூக்கிக் கொள்வது.  எங்களை என்றது பாகவதர்களை யென்றபடி.  பாண்பெருமாளே!  உம்முடைய முதற் பாசுரத்தில் ‘அடியார்க் கென்னையாட்படுத்தவிமலன்’ என்றசொல் நயத்தை நோக்குங்கால் பாகவதர்களை நீர் தோளில் தூக்கிக் கொண்டாடுபவர் போலத் தெரிகின்றது.  உமது கதையோ அப்படியில்லை.  மஹாபாகவதரான லோகஸாரங்க மஹா முனியின் தோளின் மீதேறி நீர் இருந்ததாகவுள்ளது.  ஆகவே, முந்துறமுன்னம் பாகவத சேஷத்வத்தை நீர் சொல்லிக்கொண்டது வாய்பேசு மத்தனையே போலும் என்று விநோதமாகக் கூறுகிறபடி.

English Translation

The white lily blossoms of the night have closed. The red lotus blossom in the garden pond has opened. The sacred temple ascetic with white teeth and russet cloth has gone to blow the temple conch. Wake up, shameless girl with brazen tongue; you spoke of waking us early! Come; sing the praise of the lotus eyed Lord who bears the discus and the conch of lofty hands.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top