(488)

(488)

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்

வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

பதவுரை

இளம் கிளியே

இளமை தங்கிய கிளி போன்றுள்ளவளே!
எல்லே

(இஃது) என்னே!
இன்னம்

இத்தனை பெண் பிள்ளைகள் திறண்டுவந்த பின்பும்
உறங்குதியோ

தூங்குகின்றாயோ? (என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
நங்கைமீர்

பெண்காள்!
போதர்கின்றேன்

(இதோ) புறப்பட்டு வருகிறேன்;
சில் என்று அழையேல்மின்

சிலுகு சிலுகென்று அழையாதேயுங்கள்; (என்று உறங்குகிறவள் விடைசொல்ல)

இளங்கிளியே !

வல்லை –

(நீ வார்த்தை சொல்லுவதில்) வல்லமை யுடையவள்;
உன் கட்டுரைகள்

உனது கடுமையான சொற்களையும்
உன் வாய்

உன் வாயையும்
பண்டே

நெடுநாளாகவே
அறிதும்

நாங்கள் அறிவோம்; (என்று உணர்த்தவந்தவர்கள் சொல்ல,)
நீங்கள் வல்லீர்கள்

இப்படிச் சொல்லுகிற) நீங்கள் தான் (பேச்சில்) வல்லமை யுமையீர்

(அன்றேல்)

நானே தான் ஆயிடுக

(நீங்கள் செல்லுகிறபடி) நான் தான் (வல்லவளாய்) ஆகக் கடவேன்; (உங்களுக்கு நான் செய்ய வேண்டுவதென்? என்று உள்ளுறங்குமவள் கேட்க;
நீ

நீ
ஒல்லை

சீக்கிரமாக
போதாய்

எழுந்துவர்
உனக்கு

(தனியே) உனக்கு மட்டும்
வேறு என்ன உடையை

(நீ) வேறு என்ன (அதிசயத்தை) உடையையாயிரா நின்றாய்? என்று  உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
எல்லாரும்

(வரவேண்டியவர்கள்) எல்லாரும்
போந்தாரோ

வந்தனரோ? (என்று உறங்குமவள் கேட்க)
போந்தார்

(எல்லோரும்) வந்தனர்;
போந்து எண்ணிக்கை கொள்

(நீ எழுந்துவந்து) எண்ணிப் பார்த்துக்கொள்;

(என்று உணர்த்தவந்தவர்கள் கூற,) (என்னை ஏதுக்காக வரச்சொல்லுகிறீர்களென்று உறங்குமவள் கேட்க;)

வல் ஆனை

(குவலயாபீட மென்னும்) வலிய யானையை
கொன்றனை

கொன்றொழித்தவனும்
மாற்றாரை

சத்ருக்களான கம்ஸாதிகளை
மாற்று அழிக்க வல்லானை

மிடுக்கு அழிந்தவர்களாகச் செய்தருள வல்லவனும்
மாயனை

அற்புதனுமான கண்ணபிரானை
பாட

பாடுகைக்காக

(ஒல்லை நீ போதாய், என்றழைக்கிறார்கள்)

ஏல் ஓர் எம்பாவாய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எல்லாப் பெண்களுடைய திரட்சியையுங் காணக்கருதிக் கிடப்பாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது.

கீழ்ப் பத்துப்பாட்டிலும் நிகழ்ந்த வினாவிடைகள் இப்பாட்டில் வெளிப்படையாகக் காணப்படும்.  “புள்ளுஞ் சிலம்பினகாண்” என்ற பாட்டுத் தொடங்கிக் கீழ்ப்பாட்டளவுமுள்ள ஒன்பது பாட்டுக்களிலும் உணர்த்துமவர்களுடைய பாசுரமொன்றேயன்றி உறங்குமவளுடைய ஆபோதிரூபமான பாசுரமொன்றும் வ்யக்தமாகக் காணப்படவில்லை; அது, சொற்றொடை நோக்கி அவதாரிகையாக எடுத்துரைக்கப்பட்டது; இப்பாட்டிலோவென்னில்;

முதலடி – உணர்த்தமவர்களின் பாசுரம்; இரண்டாமடி – உறங்குமவளின் பாசுரம்மூன்றாமடி – உணர்த்துமவர் பாசுரம்; நான்காமடி உறங்குமவள் பாசுரம்;

ஐந்தாமடி – உணர்த்துமவர் பாசுரம்; ஆறாமடியில், முற்கூறு – உறங்குமவள் பாசுரம்மேல்முழுதும் – உணர்த்துவர் பாசுரம்.

ஆறாயிரப்படி அருளிச்செயல் :- “திருப்பாவையாகிறது இப்பாட்டிறே, பகவத் விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் *சிற்றஞ் சிறுகாலையிலே* சொல்லுகிறது; பாகவத விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது” என்று.

பாகவத விஷயத்திலிருக்கும்படி இப்பாட்டில் கூறியவாறென்? எனில், “சில பாகவதர் தன்னை வெறுக்கில் ஏதேனுமொரு விரகாலே அவர்களை மை கொள்ளுகிற முகத்தாலே ஈச்வரனை மைகொள்ள வேணுமென்னுமிடம் – “ரூhராணி ச்ருண்சந்வை ததா பாகவதேரி தாந்.  ப்ரணாமபூர்வகம் hந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ஸ:” என்று ஸ்ரீ வைஷ்ணவ லணஞ் சொல்லுகிற பிரமாணத்தில் பிரஸித்தம்” என்று ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அபராத பரிஹாராதிகாரத்தில் தூப்புற்பிள்ளை அருளிச் செய்தபடி – பாதவதர்களால் ஏதேனுமொருபடியாகக் குற்றம் சாட்டப்பொற்றவர்கள், அப்பாகவதர் திருவடிகளில் தலைசாய்த்து, ‘இக்குற்றம் அடியேனுடையதுதான், மித்தருளவேணும்’ எனப் பிரார்த்தித்துப் பொறுப்பித்தல் ஸ்ரீவைஷ்ணவ வணமாதலால், அவ்வாறே இப்பாட்டில் “நானே தானாயிடுக” என்று – பிறர் கூறிய குற்றம் தன்னிடத்தே யுள்ளதாகத் தானிசைந்தமை கூறப்படுதலால், பாகவத விஷயத்திலிருக்கும்படி சொல்லிற்றாகிறது.  “திருப்பாவையாகிறது இப்பாட்டிறே” என்றதும் இவ்வர்த்த விசேஷத்தில் ஊற்றத்தினாலேயென்பது அறியத்தக்கது.

“உங்கள் புழைக்கடை” என்ற பாட்டால் அயல் திருமாளிகைப்பெண்ணை உணர்த்துங்கால் “பங்கயக் கண்ணனைப் பாட” என்றதைக்கேட்ட இவள் அப்பேச்சின் இனிமையை நினைந்து நெஞ்சு குளிர்ந்து அப்பாசுரத்தைத் தன் மிடற்றிலிட்டு நுண்ணிதாகப் பாடின குரலின் மென்மையைச் செவியுற்ற இவர்கள் அவளை “இளங்கிளியே!” என விளிக்கின்றனர்; எல்லே! என்றது – ஸம்போதனக் குறியாகவுமாம்; ஆச்சரியக் குறிப்பிடைச் சொல்லாகவுமாம்.

உணர்த்த வந்தவர்கள் உறங்குமவளை, ‘இளங்கிளியே!’ என விளித்ததும் அவள் நினைத்தாள்; நம் அயலகத்துப் பெண்ணை ‘நாணாதாய்!’ என வெறுத்துரைத்தவிவர்கள் நம்மை நோக்கி ‘இளங்கிளியே!’ என்றால், இதை நாம் மெய்யே புகழ்ச்சியாகக் கருதலாகாது.  உறக்கத்தில் அவளிலும் மேற்பட்டவளாயிராநின்ற நாம் நிந்தைக்கு உரியோமத்தமையன்றிப் புகழ்தற்கு உரியோமல்லோம்; ஆனபின்பு, இப்போது இவர்கள் புகழ்ச்சி தோன்ற விளித்தமைக்குக் கருத்து வேறாகவேணும்? “மாசுடையுடம்பொடு தலையுலறி வாய்ப்புறம் வெளுத்து” என்னும்படி எங்களுடம்பு வைவர்ணியமடைந்து வாயும் வெளுத்திருக்க, உன் உடம்பு கிருஷ்ணஸம்ச்லேஷத்தினால் பசுகுபசுகென்று, வாயும் சிவந்து குறியழியாமே கிடக்கிறபடி வெகு அழகிதாயிராநின்றது! என்ற கருத்துப்பட; ‘இளங்கிளியே!’ என்ற மெல்லிய பேச்சினால் நிந்திக்கின்றனரேயன்றி வேறில்லை; இவ்வளவில் இவர்களுக்கு நாம் ஒரு மறுமாற்றந் தந்தால் வெறுப்பா” மென்று பேசாதே கிடந்தாள்; கிடக்க, இவர்கள் “இன்ன முறங்குதியோ” என்கிறார்கள். நாங்கள் வருவதற்கு முன் உறங்கினாயேலும், எங்களது ஆர்த்தி தோற்றுங் கூக்குரல் செவிப்பட்ட பின்னரும் உறங்குவது தருமமோ? என்றவாறு.

அவள் தான் உள்ளே உறங்குகிறாளல்லளே; பங்கயக்கண்ணனை அநுஸந்தித்துக ;கொண்டன்றோ கிடக்கிறாள்;  அவ்வநுஸந்தாநத்திற்கு இவர்களின் வன்சொற்களெல்லாம் இடையூறாயிருந்தமையால், “சில்லென்றழையேன்மின்” என்றாள்.  சில்ல்லென்றழைத்தல் – நெஞ்சு வெறுப்புண்ணுமாறு அழைத்தல்; சில் என்றவிது – ஒருவகை அநுகாரக் குறிப்பிடைச்சொல்.

அவள் அங்ஙனஞ் சொல்லக்கேட்ட இவர்கள், ‘எங்களைப் பிரிந்து ஒரு கணப்பொழுதும் தரிக்கமாட்டாதிருந்த உனக்கு இன்று எங்கள் காட்சியும் பேச்சும் வெறுப்புக்கு உறுப்பாம்படி உனக்கு வந்த பூர்த்தி என்கொலம்மா!’ என்ன; அதற்கு அவள், ‘என் தன்மையை அறியாமல் என்னிடத்து விபரிதமானதொரு கருத்துக்கொண்டு, இளங்கிளியே! என்று விளிக்கிற நீங்களன்றோ பூர்த்தியுள்ளவர்கள்; வாய் திறவாதிருக்க வல்லீராகில் நான் புறப்படுகிறேன் என்பாள் – “நங்கைமீர் போதர்கின்றேன்” என்றாள்.

அவள் இங்ஙனஞ் சொல்லக்கேட்ட இவர்கள், “ஆ! ஆ!! ‘நங்கைமீர்!’ என்ற உறவற்ற சொல்லாலே எம்மை நீ சொல்லவல்லை என்பதை நாங்கள் இன்றுதானோ அறிகின்றோம்? *சில்லென்றழையேன்மின் என்பது,* நங்கைமீர்! என்பதாய் இப்படி கடுமையாக நீ கூற வல்லை யென்பத யாம் நெடுநாளாகவே அறிகின்றோமம்மா! என்கிறார்கள் மூன்றாமடியால்.

இவர்கள் இங்ஙனஞ் சொல்வதைக் கேட்ட அவள், ‘நீங்கள் உங்கள் குற்றத்தைப் பிறர் தலைமீது ஏறிடா நின்றீர்கள்; வன்சொற்கள் கூறுந்திறமை உங்கள் பக்கலுள்ளதென்றே யன்றி யான ஒரு வன்சொல்லுஞ் சொல்ல வல்லேனல்லேன்’ என்று சொல்லி, உத்தரணந்தன்னிலே வைஷ்ணவ லணத்தை ஆராய்ந்தாள்; பாகவதர் ஒரு வைஷ்ணவனை நோக்கி ஒரு குற்றஞ் சாற்றினராகில், அவன் மெய்யே அக்குற்றமுற்ற வனல்லனேலும் பாகவதர் பேச்சின் கௌரவ்யதை நிமித்தமாக, அவர் கூறிய குற்றத்தைத் தான் இசைந்து கொடுநிற்றல் ஸ்வரூப மென்று புராண நூல்கள் புலப்படுத்தாநிற்க, நாம் “வல்லீர்க்ள நீங்களே” எனமறுத்துப் பேசுவது அஸஹ்யாபசாரத்திலுங் கொடியதாமெனக் கருதி, மீண்டு “நானே தானாயிடுக” என்கிறாள்.

இங்ஙனே அவர்கள் கூறிய குற்றத்தைத் தான் இசைந்து, ‘இங்ஙன் குற்றவாளியாகிய நான் உங்கள் திறத்துச் செய்ய வேண்டியதென்? என்று கேட்க, உணர்த்த வந்தவர்கள் ‘உன் குற்றத்தை நீ இசைந்த பின்பு விளம்பமற இத்திரளில் வந்து பொறுப்பிக்கவன்றோ வேண்டுவது’ என்பார், “ஒல்லை நீ போதாய்” என்றனர்.  அவள் இதனைக் கேட்டதும், ‘இதோ வருகின்றேன்’ என்று புறப்பட்டுவரத் தொடங்கினாள்; உத்தரணத்திலேயே அவள் தம் திரளில் வந்து புகாமையால், நாம் போதாய் என்றவுடனே இவள் அரைகுலையத் தலை குலைய ஓடிவாராதே தாழ்க்கைக்கு அடி என்? நாம் படும்பாடு இவள் படாதொழிவதென்?’ என்று உள்வெதும்பி, “உனக்கென்ன வேறுடையை” என்கிறார்கள்.  பஞ்சலங் குடிற்பெண்களுக்கு மில்லாத உனக்கென்று வேறாக நீ என்ன அதிசயத்தை உடையளா யிராநின்றாய் எங்களுடன் வந்து கூடாமைக்கு? என்றவாறு.  உடையை என்பது – முன்னிலையொருமை நிகழ்காலக் குறிப்பு வினைமுற்று.

இங்ஙனிவர்கள் “உனக்கென்ன வேறுடையை” என க்ஷேபித்துரைத்தமை கேட்கலுற்ற அவள், தோழிகாள்! உங்களோடு கூடுவதிற் காட்டிலும் எனக்கு வேறொரு காரியமுண்டோ? வரவேண்டும் பெண்களனைவரும் வந்தபின் புறப்படலாமென்று கிடக்கிறேனத்தனை; எல்லாப் பெண்களும் வந்து கூடினரா? கண்டு கூறுமின்’ என்ன அதுகேட்ட இவர்கள், ‘க்ருஷ்ண விரஹத்தினால் துவண்ட பெண்களெல்லோரும் உன்னைக் காண்கைக்காக உன் மாளிகை வாசலேறப் போந்து படுகாடுகிடக்கின்றனர்; ஆயினும் இன்னும் ஒருவரிருவர் வராதிருக்கக்கூடும் என நினைத்தியேல் வந்து கணக்கிட்டுக்கொள்’ என்றனர்.  கணக்கிட்டுக் கொள்ளுமாறு விறும்புதற்குப் பல கருத்துக்கள் கூறலாம்; – ஒவ்வொறு பெண்ணும் அவளால் தனித்தனியே காணப்பெறுதல், பேர்சொல்லப்பெறுதல், விரல்தொட்டு எண்ணப்பெறுதல், ஸ்பர்ச ஸுகமநுபவிக்கப் பெறுதல், பஞ்சலங் குடிற்பெண்களாகையாலே எண்ணிமுடிக்குமளவும் அவளைப் பிரியாதே அநுபவிக்கப் பெறுதல் – முதலிய பலபேறுகளைக் கருதினரென்க.

இவர்கள் இங்ஙனங் கூறக்கேட்ட அவள் ‘நாமனைவருங் கூடிச்செய்யவேண்டுங் காரியமேது?’ என்ன; கண்ணபிரானது கீர்த்திமைகளைப் பாட வேணுமென்கிறார்கள், கடையிரண்டடிளால்.

(மாற்றாரை மாற்றழிக்க வல்லானை.) கண்ணபிரான், பகைவரைக் கண்டால் இன்று போய் நாளைவா’ என்ற இராமபிரானைப் போல் ஒரு பேச்சுப்பேசான்; வெட்டொன்று துண்டிரண்டாக்கி முடித்திடுவன்.  குவலயாபீடத்தின் கொம்பை முறித்துக் கொன்று, உட்புகுந்து சாணூர முஷ்டிகாதி மல்லர்களை மடித்து, உயர்ந்த மஞ்சத்தில் வீற்றிருந்த கஞ்சனைக் குஞ்சி பிடித்திழுத்துத் தள்ளி வதைத்து, இப்படியாகச் செய்த சிறுச்சேவகங்கள் பலவற்றை நினைக்க.

இப்படி எதிரிகளைப் படுத்துமவன் ஆய்ச்சிகள் பக்கலில் வந்தால் அவர்களுக்குக் குழைச்சரக்காய்க் கட்டவு மடிக்கவு மிசைந்து நிற்பானாதலால், மாயனை எனப்பட்டது.  பாடஏல், பாடேல்; தொகுத்தல்.

சைவசமய குரவர் நால்வருள் ஒருவராகிய மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தில்,

“ஒண்ணித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?

வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ?

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேதவிழுப் பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்

தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்.”

என்ற நான்காம் பாட்டு, “எல்லேயிளங்கிளியே” என்னும் இப்பாட்டின் பொருள் நடையை அடியொற்றியதென்பதை இங்கு உணர்க.

(ஸ்வாபதேசம்.) பாண் பெருமாளுக்கு அடுத்தவரும் ஸாவகநிஷ்டருமான திருமங்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது. இவ்வாழ்வார் இரண்டு ஆய்ச்சிகளுக்குப் பரஸ்பர ஸம்வாதமாக *மானமரு மென்னொக்கி* என்றொரு பதிகம் அருளிச்செய்தவராதலால் இவரை யுணர்த்தும் பாசுரம் பரஸ்பர ஸம்வாத ரூபமாகவே அமைக்கப்பட்டது.  “கிளிபோல் மிழற்றி நடந்து” மென்கிளிபோல் மிக மிழற்று மென்பேதையே என்று பல பாசுரங்களில் இவர் தம்மைக் கிளியாகச் சொல்லிக் கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும்; அன்றியும், சொல்லிற்றையே சொல்லுவது கிளியின் இயல்பு.  அதுபோல இவர் ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற’ என்றபடி நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை யநுசரித்தே அருளிச் செய்பவராதலாலும் கிளியென்றது.  இரண்டாமடி திருமங்கையாழ்வாருடைய விடையளிப்பு.  (வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்.) இது கலியனை நோக்கி ஆண்டாள் கூறுமது.  ‘வாசிவல்லீரிந்தரிர்! வாழ்ந்தேபோம் நீரே’ என்று நீர் மிகக் கடினமாகப் பேச வல்லீரென்பது எனக்கு, (பண்டே – நீர் அவதரித்துப் பாசுரம் பேசுவதற்கு முன்னமே) தெரியுங்காணும் என்றாள்.  அதுகேட்ட கலியன் வல்லீர்கள் நீங்களே ®  ‘கொள்ளும் பயனென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும், அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்னழலைத் தீர்வேனே’ என்று அற வெட்டிதாகச் சொன்னஉன் பேச்சு கடினமா? என் பேச்சு கடினமா? நீயே பார்க்கலாம் – என்றார்.  என்றவுடனே *நண்ணாதவாளவுணர் *கண்சோர வெங்குறுதி* முதலிய திருமொழிகளில் தாம் அநுஸந்தித்த பாகவத சேஷத்வ காஷ்டையை நினைத்து *நானே தானாயிடுக* என்றார்.  “உனக்கென்ன வேறுடையை” என்றது திருமங்கை யாழ்வார்க்கு அஸாதாரணமான திருமடல் திவ்யப்ரபந்த வக்த்ருவத்தை யுளப்படுத்தியதாகும்.  (எல்லாரும் போந்தராரோ இத்யாதி.) கலியனுக்கு முன்னமே மற்றுமுள்ள ஆழ்வார்கள் அவதரித்து, பன்னிருவர் என்கிற ஸங்கியை இவரோடு நிரம்பிற்று என்று தெரிவிக்கப்பட்டது.

(வல் ஆனை கொன்றானை – மாயனைப் பாட.) ஆனையைக் கொன்ற விஷயத்தை ஒரு ஆச்சரியமாக எடுத்துப் பேசினவர் கலியன்.  “ஆவரிவை செய்தறிவார் அஞ்சன மாமலை போலே” என்ற பெரிய திருமொழி காண்க.  அடிக்கடி கலியன் வாய்வெருவுவதும் வல்லானை.  கொன்ற வரலாற்றையே; “கவள யானைகொம் பொசித்த கண்ணனென்னும்” இத்யாதிகள் காண்க.  (மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட) எம்பெருமான் தன் திறத்தில்; மாறு செய்பவர்களது செருக்கை வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரிதைகளுள் கோவர்த்தநோத்தாரண கதை மிகச் சிறந்தது.  மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு தீங்குமிழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை யடக்கினனிறே.  இக்கதையிலே கலியன் மிக்க வூற்றமுடையவர்; பெரிய திருமொழியை முடிக்கும் போதும் “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” என்றார்; சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றெடுத்த தோளினானை” என்றே தலைக் கட்டினார்.

English Translation

“What is this, Pretty Parrot! Are you still sleeping?” Do not use icy words, Sisters, I am coming”. “You are the harsh tongued one; we have known you long enough”.”Oh, your words are stronger till, just leave me alone!”. “Why this aloofness, come join us quickly”. “Has everyone come?” “Everyone has come. Count for yourself!”. “Let us all join in chorus and sing of the Lord who killed the strong elephant Kuvalayapida in rut, and the demon king Kamsa”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top