(486)

(486)

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

புள்ளின் வாய் கீண்டானை

பறவையுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை

கொடியனான இராவணனை முடித்து (அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய
கீர்த்திமை பாடி போய்

லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும்

எல்லாப் பெண்பிள்ளைகளும்
பாவைக் களம் புக்கார்

நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற்புகுந்தனர்;
வெள்ளி எழுந்து

சுக்ரோதயமாகி
வியாழம் உறங்கிற்று

ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான், (அன்றியும்)
புள்ளும்

பறவைகளும்
சிலம்பின

(இறைதேடப்போன இடங்களில்) ஆரவாரஞ்செய்தன;
போது அரி கண்ணினாய்

புஷ்பத்தின் அழகைக் கொள்ளை கொள்ளாநின்ற கண்ணையுடையவளே;
பாவாய்

பதுமைபோன்றவளே!
நீ –

நீ
நல் நாள்

கிருஷ்ணனும் நாமும் கூடு கைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில்
கள்ளம் தவிர்ந்து

(கிருஷ்ணனுடைய குணசேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற) கபடத்தை விட்டு
கலந்து –

எங்களுடன் கூடி
குள்ளக் குளிர குடைந்து நீர் ஆடாதே

உடமபு வவ்வலிடும்படி குளத்திற்படிந்து ஸ்நானம் பண்ணாமல்
பள்ளி கிடத்தி யோ

படுக்கையிற் கிடந்துறங்கா நின்றாயோ?
ஆல்

ஆச்சரியம்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் பிறந்து வளருமூரான் திருவாய்ப்பாடியிலே அவனையே பாடவேண்டியிருக்க அவனைவிட்டுத் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற இராமனைப் பாடுவதும்,  அவனை மனத்துக்கினியானென்பதும் க்ருஷ்ண பக்தர்களுக்கு அஸஹ்யமாகையாலே ஒரு பெரிய கிளர்ச்சி தோன்றியது.  உடனே சில பெரியார்கள் புகுந்து கண்ணனும் இராமனும் ஒரு திருமூர்த்தியே யென்கிற தத்துவத்தை விளக்கி ஸமாதானம்பண்ண, பிறகு ஒருவாறு தேறி அவ்விரண்டு திருமூர்த்திகளையும் சேர்த்து ஆனந்தமாகப் பாடுகிறார்கள்.

புள்ளின் வாய்கீண்ட வரலாறு :- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர்கின்ற கண்ணபிரான்மீது கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியமாறு  நியமிக்கப்பட்ட ஓரஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று யமுனைக் கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இரு கைகளினாலும் பற்றி விரிவாகக் கிழித்திட்டனன் என்பதாம்.

“கிள்ளிக் களைந்தானை” என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.  ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க.  “கீர்த்திமை பாடிப் போய்” என்றது, விரஹத்தாலே துர்ப்பலைகளான பெண்பிள்ளைகள் பகவத் குணகீர்த்தநத்தைப் பாதேயமாகக்கொண்டு வழி கடந்தன ரென்றவாறு “பாதேயம் புண்டரிகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருதம்” என்றது முணர்க.  (பாதேயம் = வழிச்சோறு.)

பிள்ளைகளெல்லாரும் – நாங்கள் சென்று எழுப்பிக்கொண்டு போகவேண்டும்படி சிறுமியராயிருப்பவர்களும் உணர்ந்து போகா நிற்க, நீ கிடந்துறங்குகை மிக அழகிது என்ற கருத்துக் காண்க.

பாவைக்களம் – கண்ணபிரானும் ஆய்ச்சியருமாக நோன்பு நோற்கைக்கென்று குறிப்பிடப்பட்டதோரிடம்: பலா திரளுமிடம் களமென வழங்கப்படும்; ‘நெற்களம்’ ‘போர்க்களம்’ என்பன காண்க.

இவர்கள் இங்ஙனஞ் சொல்லக்கேட்ட அவள், ‘அவர்கள் சிறுப்பெண்களாகையால் எழுந்து போயிருக்கக் கூடும்; அறிந்த நாம் அகாலத்தில் போக வொண்ணாது; சுத்ரோதயமாயிற்றா? பாருங்கள்’ என்ன;  அது கேட்ட இவர்கள், சுக்கிரன் உச்சிப்பட்டான்; குரு அஸ்தமித்தான்’ என்றனர்.  இது கேட்ட அவள், ‘நீங்களும் போகவேணுமென்ற வலிய அபிநிவேச முடயவர்களாகையால் உங்கள் கண்ணுக்குச் சுக்கிரன் உதித்தானாகவும், குரு அஸ்மதித்தானகவுந் தோற்றக் கூடும்; ஆதலால் நீங்கள் சொல்வது பொழுதுவிடிவுக்கு அடையாளமன்று; வேறு அடையாளமுண்டாகிற் சொல்லுங்கள் என்ன; அதற்கு இவர்கள் ‘நாங்கள் இத்தனைபேர் திரண்டுவந்தது அடையாளமாகவற்றன்றோ?’ என்ன; அதுகேட்ட அவள் ‘பிரிந்தவர்கள் திரண்டால் அத்திரட்சி அடையாளமாகும்; நீங்கள் “பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று திரியுமவர்களாகையால் உங்கள் திரட்சி பொழுது விடிவுக்கு அடையாளமாகமாட்டாது; வேறுண்டாகிற் சொல்லுமின்’ என்ன; “புள்ளுஞ் சிலம்பின காண்” என்று பறவைகளின் ஆரவாரங்களை அடையாளமாகக் கூறுகின்றனர்.

இவர்கள் இவ்வடையாளஞ்சொல்லக்கேட்ட அவள், திர்யக் ஜந்துக்களினுடைய வருத்தாந்தத்தைக்கொண்டோ நாம் காலத்தை அறுதியிடுவது! என்று நினைத்துக் பேசாதேகிடக்க: அஃதுணர்ந்த இவர்கள், ‘நீ இப்படி எங்களை அலக்ஷயம் பண்ணக்கிடக்ககைக்கு ஹேது உன் கண்ணழகைப்பெருக்க மதிக்கையன்றோ!’ என்று கருத்துத்தோற்ற, ‘போதரிக்கண்ணினாய்’ என விளிக்கின்றனர்.  இந்த ஸம்போதனைக்கு நால் வகைப்பொருள்கள் கூற இடமுண்டு; – போது – உலாவுகின்ற, அரி கண்ணினாய் – மானினுடைய கண்போன்ற கண்ணையுடையவளே!  என்பது ஒரு பொருள்; (பல பொருளொரு சொல்லாகிய ஹரிஎன்ற வட சொல், அரி எனத் திரிந்தது.) போது – என்று புஷ்பமாய், குவளைப்பூவையும் மான் கண்ணையுமொத்த கண்ணையுடையவளே! என்கை இரண்டாம் பொருள்.  அரி என்று வண்டாய் பூவிற்படிந்த வண்டுபோன்ற கண்ணுடையவளே!’ என்கை மூன்றாம் பொருள்.  அரி என்று சத்ருவாய், புஷ்பத்தின் அழகுக்குச் சத்ருவான கண்ணழகுடையவளே! என்கை நான்காம் பொருள்.

குள்ளக்குளிர – ‘கத்தக்கதித்து’ ‘பக்கப்பருத்து’ ‘தக்கத்தடித்து’ ‘கன்னங்கறுத்து’ ‘செக்கச் சிவந்து’ என்பன போன்ற ஒருவகைக் குறிப்பிடைச்சொல்.  உடம்பு மிகவும் வவ்வலிடும்படி என்றவாறு.  மார்கழி மாதத்தில் உஷ: காலத்தில் நீராடினால் குள்ளக் குளிருமென்கை.

இராமபிரான் தந்தை சொற்கொண்டு வநவாஸஞ் சென்ற பின்னர் நந்திக்ராமத்தில் ராஜ்ய காரியங்களை நிர்வஹித்துப் போந்த பரதாழ்வான், நாம் பொழுது விடிந்த பின்னர் ஸரயுவில் முழுக்கிடச் சென்றால் நம்மைக் கண்ணுறுவாரனைவரும் “அண்ணரைக் காடேறததுரத்தின பாவி போகின்றான்” என விரல்சுடுக்கி வைவர் கொல், என்றஞ்சி அபரராத்ரியிற்றானே சரயுவிற்சென்று நீராடி வருவதுபோல், இவ்வாய்ச்சிகளும் சிலர் கண்பட யமுனையிற்சென்று நீராடில் ‘உபாயாநுஷ்டாநம் பண்ணி ஸ்வரூப நிறத்தைக் குலைத்துக்கொள்ளும் பாவிகள் போகின்றனர்’ என்று கண்டாரனை வரும் வைவர் என அச்சமுற்று, ஒருவர் கண்ணிலும் படாதபடி நீராடி வரவேணுமென்பார், “குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ?” எனப் பொடிகின்றனர்.

(ஸ்வாபதேசம்.) இது ஆண்டாளுக்கு அடுத்த தொண்டரடிப்பொடி யாழ்வாரை யுணர்த்தும் பாசுரம்.  (போது அரிக் கண்ணினாய்!) புஷ்பங்களை ஹரிப்பதிலேயே திருஷ்டியைச் செலுத்துபவரே! என்றபடி.  புஷ்ப கைங்கரிய பராpறே இவ்வாழ்வார்.  “துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி” “தொடை யொத்த துளவமுங் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றவை காண்க.  பாவய்! என்ற விளியும் இவர்க்கு நன்கு பொருந்தும்.  பதிவ்ரதா சிரோமணியைப் பாவை யென்பர்.  இவ்வாழ்வார் அரங்கனொருவ னுக்கே வாழ்க்கைப்பட்டு வேறொருதிருப்பதி யெம்பெருமானை நெஞ்சிலும் நினையாதவராதலால் கற்புச் சிறப்பு குறிக்கொள்ளத்தக்கது.  திருவேங்கடமுடையா னெதிரே ஒருவர் “பதின்மர் பாடும் பெருமாள்!” என்று ஏத்த, அதைக்கேட்ட பெரிய கேள்விஜீயர், ‘சோழியன் கெடுத்தான் காணும்; அந்த ஏற்றம் நம்  பெருமாளுக்கில்லையே; நம்பெருமாளொருவர்க்கே’ என்றார் என்ற ஐதிஹ்யமும் இங்கு நினைக்கத் தக்கது.

(நன்னாளால்) “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்ற திருவாக்கிலேயே இச்சொல்லும் வருகின்றது.  தொண்டடிப்பொடிகள் திருவவதரித்தது மார்கழித் திங்களேயாதலால் நன்னாளென்னத் தட்டுண்டோ? (கள்ளந் தவிர்ந்து) ‘சூதனாய்க் கள்வனாகி’ என்றுமு; ‘கள்ளமேகாதல் செய்து’ ‘கள்ளத்தேனானுந் தொண்டாய்’ என்றும் பலகாலும் தமது கள்ளத்தைப் பேசிக்கொண்டாரிவ்வாழ்பார்.  இவரது சரிதையிலும் பொன்வட்டில் விஷயமான கள்ளம் அடிபட்டுக் கிடக்கிறது.  அது தவிர்ந்து பகவத் பாகவத  கோஷ்டியில் கலந்த படியை ஈற்றடி தெரிவிக்கின்றது.  பெரியாழ்வார் போலவே இவ்வாழ்வாரும் பெரும்பாலும் பூம்பொழில்வாஸ முடையவராதலால் அவ்விடத்து அடையாளமாகப் புள்ளும் சிலம்பினகான் என்பது இப்பாட்டிலும் புகுந்தது.  (குள்ளக் குளிரவித்யாதி.) நீராட்டம் முதலிய நித்ய கர்மாநுஷடானங்களையும் தவிர்த்து சிலகாலம் பள்ளிக்கிடந்தமை இவ்வாழ்வாரது சரிதையிற்காணத்தக்கது.  புள்ளின்வாய் கீண்டானை யென்று தொடங்கிக் கண்ணபிரானுடையவும்  இராமபிரானுடையவும் கீர்த்திமை பாடினபடி சொல்லுகிறது.  இவ்வாழ்வர் திருமாலையின் முடிவில் ‘வள வெழுந்தவளமாட மதுரைமா நகரந்தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலை’ என்று கண்ணபிரானுடைய கீர்த்திமையையும், திருப்பள்ளி யெழுச்சியில் ‘மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறலயோத்தி யெம்மரசே யரங்கத்தம்மா!’ என்று இராமபிரானுடைய கீர்த்தியையும் பாடினமையுணர்க.  ‘பிள்ளைகளெல்லாரும்’ என்றது ஆண்டாள் தனக்கு முந்தின ஆழ்வார்களெல்லாரையும் சொன்னபடி.             (13)

English Translation

All the little ones have reached the place of worship singing the praise of the Lord who killed the demon Ravana and ripped the beaks of the demon bird Bakasura. The morning star has risen and the evening star has set. O Maiden with eyes that excel the lotus bud, do you still lie in bed instead of immersing yourself in the cool waters on this auspicious day? Give up your shamelessness and join us.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top