(3627)

(3627)

ஏழையர் ஆவியுண் ணுமிணைக் கூற்றங்கொ லோவறியேன்,

ஆழியுங் கண்ண பிராந்திருக் கண்கள்கொ லோவறியேன்,

சூழவும் தாமரை நாண்மலர் போல்வந்து தோன்றும்கண்டீர்,

தோழியர் காள்! அன்னை மீர்! என்செய் கேந்துய ராட்டியேனே?

 

பதவுரை

தோழியர்காள்

தோழிமார்களே!

அன்னைமீர்

தாய்மார்களே!

ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம் கொலோ

பெண் பிறந்தாருடைய உயிரை முடிக்கவல்ல இரண்டு ம்ருத்யுக்களோ இவை!

அறியேன்

அறிகின்றிலேன்; (அன்றியே)

ஆழி அம் கண்ணபிரான்

கடல் வண்ணனான கண்ண பிரானுடைய

திரு கண்கள் கொலோ

திருக்கண்கள்தானோ!

அறியேன்

அறிகின்றிலேன்;

தாமரை நாள் மலர் போல்

அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலே

வந்து தோன்றும் கண்டீர்

வந்து தோன்றா நின்றன காண்மின்;

துயராட்டியேன் என் செய்கேன்

துயருறுகின்ற நான் (துயர் தீர்வதற்கு) என்ன செய்வேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(ஏழையராவி.) எம்பெருமானுடைய திருக்கண்களிலிருந்து வந்து தன்னை நலிகின்றபடியைப் பேசுகிறாள். கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே என்று திருப்பாணாழ்வாரைத் துடிக்கப்பண்ணின திருக்கண்கள் தம்மையும் துடிக்கப் பண்ணுகிறபடி சொல்லுகிறார். மற்றுமுள்ள அவயவங்கள் கிடக்க முதலிலே திருக்கண்கள் வந்து நலிவானேன்? என்னில்; ஆசார்யஹருதயத்திலே “அதுக்கு ஹேது ஊழிதோறும் சோம்பாது ஒன்றிப் பொருளென்றளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று நூலுரைத்து யோகு புணர்ந்து கண்காண வந்து ஆள்பார்க்கிறவன் உலகின தியல்வை நல்வீடு செய்ய இணக்குப் பார்வை கேடிக் கழலலர்ஞான முருவின முழுதுமோட்டின பெருங்கண் எங்குமிலக்கற்று அன்பொடு நோக்கான திசையிலே புக்குழன்று மாறிப்படிந்து துளங்குகிறவர் மேலே படப் பக்கநோக்கறப் பண்ணின விசேஷகடாஷம்” என்று பரக்கவருளிச் செய்தபடியும், ஆழ்வார் தாமே (திருவிருத்தத்தில்) “பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர்ப்புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார்” என்றருளிச் செய்தபடியும,; இவரை முதன்முதலாக விஷயீகரித்தவை திருக்கண்களேயாகலால் அந்த வுறவு கொண்டு அவை முதலிலே வந்து தோன்றினபோலும். பெண்களின் உயிரைக் கொள்ளை கொள்கின்ற இரண்டு மருத்யுக்களோ விவை!’ என்று சொல்லுவானேன்? உகந்து அநுபவிக்கலாகாதோ வென்னில்: அவயவியான அப்பெருமானதானே ஸாகூஷாத்தாக வந்து தோன்றினனாகில் உகந்து அநுபவிக்கலாம்; அப்படியில்லையே. அவன்தான் ஒரு விநோதம்

செய்வான்போன்று தனது திவ்யாவயவங்களைத் தனித்தனியே போகவிட்டுக் கூத்து பார்க்கிறானாகையாலே உகப்பின்றிக்கே நலிவேயாயிற்று; அதனால் “ஏழையராவி யுண்ணுமினைக் கூற்றங்கொலோ!” என்று அலறிப் பேசுகிறபடி ஏழையரென்று ஸ்த்ரீகளுக்குப் பொதுவான பெயர்.

ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ—எம்பெருமானுடைய திருகண்களேயிவை என்று ஆழ்வார்க்குத் தெரியாமையில்லை; அது முந்துறமுன்னம் தெரிந்திருக்கச் செய்தேயும் ‘ஏழையராவியுண்ணு மிணைக்கூற்றங்கொலோ’ என்பதும் ‘திருக்கண்கள் கொலோ அறியேன்’ என்பதும் அத்திருக்கண்கள் ஹிம்ஸிக்கிற ஹிம்ஸை சொல்லுவிக்கும் பாசுரமாயிற்று. உயிர்க்கெல்லாம் தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணன் என்று கேட்டிருக்க, அந்தோ! இப்படி கொலை செய்யுங் கண்களாவதே! என்று திருவுள்ளம் நொந்து சொல்லுகிறபடி.

இத் திருக்கண்களுக்குத் தப்பிப் பிழைக்கலாகாதோவென்ன; ஜயோ! அவை ஏதேனுமொரு பக்கத்திலே தோன்றினால் வேறு பசகம் நோக்கி உய்யலாமே; அப்படிக்கில்லாதபடி மூலபலத்தினன்று பார்த்த பார்த்தவிடமெல்லாம் பெருமாளேயானாப்போலே எந்தப் பக்கமாகத் திரும்பி நின்றாலும் இவையேயாய் வேறொரு பொருள் தோன்றாதபடியாயிற்றே; தோழிமார்களே! தாய்மார்களே! உங்களுடைய ஹிம்ஸைக்கு நான் ஆற்றுவேனா? இத்திருக்கண்களின் ஹிம்ஸைக்கு ஆற்றுவேனா? என்ன செய்வேன் சொல்லுங்க ளென்கிறாளாயிற்று.

 

English Translation

Are they two sentinels of death, come to devour the souls of females, or are they the beautiful eyes of the ocean-hued Lord?, -I know not what they are. All around they appear, like day-fresh lotus flowers. Oh, see!  O Sinful me! Sakhis! Ladies!  What shall I do?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top