(3626)
புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,
மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,
தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே.
பதவுரை
|
அ அரி உரு ஆய புக்கு |
– |
அப்படிப்பட்ட சிங்க வடிவையுடையனாய்த் தோன்றி |
|
அவுணன் உடல் கீண்டு உகந்த |
– |
இரணியாசுரனுடைய உடலே இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்த |
|
சக்கரம் செல்வன் |
– |
திருவாழியையுடைய திருமாலைக் குறித்து |
|
குருகூர் சட கோபன் சொன்ன |
– |
ஆழ்வார் அருளிச் செய்த |
|
மிக்க ஓர் ஆயிரத்துள் |
– |
மிகச் சிறந்த ஆயிரத்தினுள்ளே |
|
இவை பத்தும் வல்லாரவரை |
– |
இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்களை |
|
ஏழையா |
– |
திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்கள் |
|
தொக்கு |
– |
திரள் திரளாக விருந்து |
|
பல்லாண்டு இசைத்து |
– |
மங்களாசாஸனம் பண்ணி |
|
கவரி செய்வர் |
– |
சாமரை வீசுதல் முதலிய கிஞ்சி காரங்களைச் செய்பவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (புக்கவரியுருவாய்.) இத்திருவாய்மொழி கற்றார் மதிமுகமடந்தையர் லிரும்பிப் பல்லாண்டு பாடி ஸத்கரிக்கும்படியான பெருமையைப் பெறுவர்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.
புக்கவரியுருவாய்-அவ்வரியருவாய்ப் புக்கு என்று அந்வயிப்பது அகரச்சுட்டு விலக்ஷ்ணப் பொருளது வாசாமகோசரமாம்படி பரம விலக்ஷ்ணமான ஸிம்ஹ விக்ரஹத்தைப் பரிக்ரஹித்தவனாய்; சத்ரு விஷயத்திலே புகுந்து என்றபடி. அவுணனுடல் கீண்டு உகந்த-இரணியனுடலைப் பிளந்தொழித்து ‘சிறுக்கனுடைய விரோதிதொலையப் பெற்றோம்’ என்று திருவுள்ள முகந்தபடி. (சக்கரச் செல்வன் தன்னை) இரணியனுடலைக் கீண்டகாலத்தில் ஸ்ரீஸுதர்சநாழ்வானுடைய பணியொன்றுமில்லையே; அப்படியிருக்க இங்கே சக்கரச் செல்வனென்பானேன்? என்னில்; எந்த ஸமயத்திலும் சக்கரத்தாழ்வானுடைய பணி இருந்தே தீரும். அவனது பணியில்லாமல்
ஒரு காரியமும் நடைறொது; ஸுதர்சந சதகத்தில் சக்திர் யஸ்யேஷு தம்ஷ்ட்ராநகபரமுக வ்யாபிநீ த்த்பிபூத்யாம் என்பதனால் இவ்வர்த்தம் வ்யக்தமாகும். ராமாவதாரத்தில் அம்புகளிலும், வராஹாவதாரத்தில் தம்ஷ்ட்ரையிலும், நரஸிம் ஹாவதாரத்தில் நகங்களிலும், பரசுராமவதாரத்தில் மழுவிலும் இப்படியே ஒவ்வோரவதாரத்தில் ஒவ்வொரு வஸ்துவில் திருவாழியாழ்வானுடைய சக்தியாவேச முளதென்பர்.
ஏழையர் கவரி செய்வர்-ஏழையரென்று ஸ்த்ரீகளுக்குப் பெயர்; சூழ்விசும் பணி முகில் திருவாய்மொழியில் “மதிமுகமடந்தையரேந்தினர்வந்தே” என்னப்பட்ட திவ்யாப்ஸரஸஸீக்கள் இங்கே விவக்ஷிதர்கள். அவர்கள் திரண்டுகொண்டு இப்பதிகம் வல்லார்களைப் பொலிக வென்று மங்களாசாஸனம் பண்ணிச்சாமரை வீசுதல் முதலான கைங்கரியங்களையும் செய்வர்களென்றதாயிற்று.
