(3537)
வந்திருந் தும்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்,
அந்தர மொன்றுமின்றி யலர்மேலசை யுமன்னங்காள்,
என்திரு மார்வற்கென்னை யின்னாவாறிவள் காண்மினென்று,
மந்திரத் தொன்றுணர்த்தி யுரையீர்வைகல் மறுமாற்றங்களே.
பதவுரை
| வந்து இருந்து |
– |
(ஏற்கனவே என் கண்னெதிரில் வந்திருந்து) |
| உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம் |
– |
உங்களுடைய அழகிய சேவல்களும் (அவற்றுக்கு இனிய) நீங்களும் ஆக எல்லாம் |
| அந்தரம் ஒன்றும் இன்றி |
– |
இடையீறு ஒன்றுமில்லாமல் |
| அலர்மேல் அசையும் |
– |
பூக்களின் மீது உல்லாஸமாக உலாவுகிற |
| அன்னங்காள் |
– |
அன்னப்பறவைகளே! |
| என் திருமார்வற்கு |
– |
லஷ்மீபதியான எமபெருமானுக்கு |
| என்னை |
– |
என்னைப்பற்றி ப்ரஸ்தாவித்து |
| இவள் இன்ன ஆறு காண்மின் என்று |
– |
“இப்பராங்குசநாயகி இவ்வண்ணமானாள் காணும்“ என்று |
| மந்திரத்து |
– |
அவளும் அவனுமான தனி யிடத்திலே |
| ஒன்று உணர்த்தி |
– |
ஒரு பேச்சு அறிவித்து |
| மறு மாற்றங்கள் உரையீர் |
– |
அதற்கு அவன் சொல்லும் மறு மொழிகளை என்னிடத்தே வந்து சொல்லுங்கோள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (வந்திருந்தும்முடைய) மஹாகோஷ்டியிலே எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில் திருவுள்ளம் அந்யபரமாயிருக்குமாதலால் அப்போது சொல்லாதே, திருவோலக்கத்தில் நின்று மெழுந்து திவ்யாந்தபுரத்திலே யெழுந்தருளினால் அங்கே பிராட்டியுடைய திவ்யஸந்நிதானத்திலே திருவுள்ளத்திற்படும்படி என் திறம் விண்ணப்பஞ்செய்து அவனுரைக்கும் மறுமாற்றாங்கொண்டு என்னருகே வந்திருந்து சொல்லவேணுமென்று அன்னங்களைக்குறித்து வேண்டுகிறாள்.
முந்துறமுன்னம் வந்திருந்து என்பது ஆனந்தமாகச் சொல்லுகிற வார்த்தை. “தூது போவார் எங்கே கிடப்பார்“ என்று நான் தேடவேண்டாதே என் ஆர்த்தியைப் பரிஹரிக்க நீங்களே முற்கோலி வந்திருக்கிறீர்களே! ராஜ்யதாரங்களையிழந்து ஸுக்ரீவ மஹாராஜர் விஷண்ணராயிருந்தவிடத்தே வந்து பெருமாள் முகங்காட்டினாப்போலேயிருந்தது உங்களுடைய மஹோபகாரம் என்று உகந்து சொல்லுகிறபடி.
“உம்முடைய மணிச்சேவல்“ என்று சொன்னவிதில் தன்னுடைய மணிச்சேவலை வ்யா வர்த்திக்கன்றதென்று நம்பிள்ளை காட்டியருளுகிறார். “தன்னுடைய மணிச்சேவல் கடக்க விருந்து இவளை உடம்பு வெளுப்பித்துத் தான் குறியழியாதேயிறே யிருக்கிறது“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. சேவல் என்று பொதுவாக நாயகனைச் சொன்னபடி. எல்லாம் – மற்றும் குடும்பங்களுமெல்லாம் என்றபடி.
“என் திருமார்வற்கு என்னை“ என்ற சொற்சேர்த்தியால் திவ்ய தம்பதிகளிருவருமான சேர்த்தியிலே தான் அடிமை செய்ய ஆசைப்பட்டிருக்கிறமை விளங்கும். இன்னவாறு இவள் காண்மினென்று – நான் இருக்கும்படியை உங்களுடைய உடம்பிலே ஏறிட்டுக் காட்டவேணுமென்கிறாள் போலும். மந்திரத்து என்றது மந்த்ராலோசனை செய்யுமிடமான ஏகாந்த ஸ்தலத்திலே என்றபடி. பெரிய ஸதஸ்ஸில் சொல்லவேண்டா, விரோதிகள் பலருமிருக்கவுங்கூடும், பிராட்டியின் சொல்லை ஜீவிக்கும்மிடமான அந்தரங்க ஸ்தலத்திலே என்றபடியாய், ஒன்று என்று அதில் நடுப்பதமான உகாரத்தைச் சொன்னபடியாய், அதிற் சொல்லுகிற அநந்யார்ஹத்தை விண்ணப்பஞ் செய்யுங்கோள் என்பதாகவும் அருளிச் செய்வர்கள். மறுமாற்றம் என்னாமல் “மறு மாற்றங்கள்“ என்றதனால், திருமார்விலிருக்கும் திரு சொல்லுகிற மாற்றமும் திருமார்வன் சொல்லுகிற மாற்றமும் ஆக இவருடைய மறுமொழிகளும் கேட்க ஆசைப்பட்டமை தோன்றும்.
English Translation
O Beautiful swans, nestling amid lotus flowers in the water, -you, your bright spouses and all your kin, -go see my Lakshmi-chested Lord in his chambers and tell him, “This maiden is this and this”, then come back and tell me what he says.
