(3236)
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.
பதவுரை
|
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது |
– |
நன்றாக வாழ்ந்தவர்களென்று நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பேசப்புகுந்தால், |
|
மா மழை மொக்குளின் |
– |
பெருமழையில் தோற்றும் நீர்க்குமிழிபோலே |
|
மாய்ந்து மாய்ந்து |
– |
அழிந்தழிந்து |
|
ஆழ்ந்தார் என்று அல்லால் |
– |
அதோகதியைபடைந்தனர் என்று சொல்லப்படுவது தவிர |
|
அன்று முதல் |
– |
பரஹ்மஸ்டிருஷ்டி காலம் தொடங்கி |
|
இன்று அறுதி ஆ வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை |
– |
வாழ்ந்தவர்கள் ஒரு தன்மையாக வாழ்ந்தேயிருத்தல் கிடையாது; |
|
நிற்குறில் |
– |
நிலைநின்ற வாழ்வடைய வேண்டில் |
|
ஆழ்ந்து ஆர் கடல் பள்ளி |
– |
ஆழமாகி நிறைந்த திருப்பாற்கடலில் துயில்கின்ற |
|
அண்ணல் |
– |
ஸ்வாமிக்கு |
|
அடியவர் ஆமின் |
– |
அடிமைப்பட்டிருங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகில் வைத்யர்களுக்கு ஒரு வழக்கமுண்டு; அதாவது-தாம் சிகித்ஸை செய்தவிடங்களில் நூற்றுக்கணக்கான பேர்கள் மாண்டுபோயிருந்தாலும், தெய்வவசமாக நாலைந்துபேர்கள் தப்பிப் பிழைத்தவாகளிருந்தால் அவர்களை மாத்திரம் விரலிட்டு எண்ணிக்காட்டி ‘அவன் பிழைத்தான், இவன் பிழைத்தான், என்று சொல்வதுண்டு; அது போலவே, இவ்வுலகில் நன்றாக நெடுக வாழ்ந்தவர்களும் பலர் இருக்க அவர்களைவிட்டு முடிந்தவர்களை எண்ணுகிறதென்? நீடுழி ஜீவித்தவர்களும் இல்லையோ? என்ன; அதற்கு விடை கூறுகின்றாரிப்பாட்டில்-ஸ்ருஷ்டி காலந்தொடங்கி இன்றளவும் செல்வம் குன்றுமே ஜீவித்தார் ஒருவரையும் கண்டிலோமென்கிறார்.
வாழ்ந்தவர்களாக உங்களால் நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்த அழகு தெரியாதோ? அவர்கள் வாழ்ந்தாலும் மழைப்பெருக்கிலுண்டாகும் நீர்க்குமிழிபோலே நசித்து நசித்து, ஜீவித்தநாள் பண்ணினபாபத்தாலே அதோகதியிலே விழுந்து ஒழிந்துபோனவத்தனையொழிய, ப்ரஹ்மஸ்ருஷ்டி ஏற்பட்ட காலம்முதல் இன்றளவும் நன்கு ஆராய்ந்து பார்த்துக்கொள்ளலாம்; வாழ்ந்தவர்கள் ஒருபடியாக வாழ்ந்தே போந்தார்கள் என்பது கிடையாது; வாழ்வும் கேடும் கலந்த கட்டியாயிருக்குமே யல்லது ஒரே வாழ்வு என்பது எங்கும் காணக் கிடைக்காது; அங்ஙனன்றிக்கே நிலைநின்ற வாழ்ச்சியை விரும்பியிருந்தீர்களாகில், கூஷீரஸாகரசயனனான பெருமானுக்கு அடியவரென்று பேர்பெற்று வாழப்பாருங்கோள் என்றாராயிற்று.
மாமழைமொக்குளின்-“படுமழைமொக்குளிற் பல்காலுந் தோன்றி” என்ற நாலடியார் (27) செய்யுளுங் காண்க. ஆழ்ந்தார்-தரைப்பட்டார்கள் என்றபடி. மண்ணோடு மண்ணாய்ப் போய்விட்டார்களென்பது கருத்து. நிற்க உறில் -நிற்குறில்; தொகுத்தல்.
ஆழ்ந்தார் கடற்பள்ளி யண்ணலுக்கு அடியவராகுங்கோள் என்றதன்; கருத்து யாதெனில்; எம்பெருமான் தன் தாளுந்தோளும் முடிகளும் சமனிலாத பலபரப்பித் திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருள்வதானது. “குறைவில் தடங்கடல் கோளரவேறித் தன்கோலச் செந்தாமரைக்கண் உறைபவன்போலவோர் யோகுபுணர்ந்த” என்கிறபடியே சேதநர்கள் வழிபட்டாராவதற்கு என்ன வுபாயம் செய்யலாமென்று உபாய சிந்தையோடேயாதலால் அவன் நினைவு பலித்தாம்படி செய்யப்பாருங்கோளென்கை.
English Translation
Those lived well did so like bubbles in a mighty shower. Those who have lived forever are naught, if you wish to live well and remain, serve the Lord who reclines in the deep ocean
