(3235)

(3235)

பணிமின் திருவருள் என்னும்அஞ் சீதப் பைம்பூம்பள்ளி,

அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,

துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,

மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.

 

பதவுரை

அம் சீதம் பை பூ பள்ளி

அழகும் குளிர்ச்சியும் விஸ்தாரமுமுள்ள பூம்படுக்கையிலே

திரு அருள் பணிமின் என்னும்

(மாதர்காள்!) கிருபை பண்ணவேணும்’ என்று பிரார்த்திப்பவர்களாய்

அணி மென் குழலார் இன்பம் கலவி அமுது உண்டார்

அழகிய மெல்லிய கூந்தலையுடைய மாதர்களின் சிற்றின் பக்கவலியமுதத்தை அனுபவித்தவர்களானவர்கள்

துணி முன்பு நால

அரைத்துணி (பின் பக்கத்திற்கு எட்டம் போராமல்) முன்புறத்தில்மாத்திரம் தொங்கும்படியான ஏழையையடைந்து

பல் ஏழையர் தாம் இழிப்ப

பல மாதர்கள் இழிவாகக் கூறி யேசும்படி

செல்வர்

(பிச்சையெடுக்கப் போவர்கள்;) (ஆதலால்)

மணி மின்னு மேனி

நீலமணிபோல் மின்னுகின்ற திருமேனியையுடைய

நம் மாயவன்

எம்பெருமானுடைய

பேர்

திருநாமங்களை

சொல்லி

ஸங்கீர்த்தனம் பண்ணி

வாழ்மின்

வாழுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிற்றின்பத்தின் நுகர்ச்சியும் அஸ்திரமாதலால் எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்லி வாழுங்களென்கிறார்.  இப்பாட்டின் முன்னடியை அந்வயிப்பதில் நிர்வாஹ பேதமுண்டு; அம்சீதப்பைம்பூம் பள்ளியிலே திருவருள் பணிமின் என்று அன்புடன் வேண்டுகிறவர்களான அணிமென்குழலாருடைய இன்பக்கல்வி யமுதத்தையுண்டவர்கள்-என்பது பூருவர்களின் நிர்வாஹம்.  இப்போது ‘பணிமின் திருவருளென்னும்” என்பது அணிமென் குழலாருக்கு விசேஷணமாயிற்று. “பணிமின் திருவருள்” என்பதற்கு-கிருபை பண்ணவேணும் என்று பொருள்.  இங்ஙனே ஸ்த்ரீகள் பிரார்த்திக்கும்படியாக இருந்து இன்புற்றவர்கள் என்றதாயிற்று.

“பணிமின்திருவருள்” என்று சொல்லுகிற வார்த்தை ஸ்த்ரீகளினுடையது என்று நிர்பஹிப்பதிற்காட்லும் அநுபோக்தாக்களான புமான்களுடையது என்றே நிர்வஹிப்பது அழகியது என்று திருவுள்ளம்பற்றிய பட்டர் “பணிமின் திருவருளென்னும்” என்பதை “இன்பக்கலவி யமுதுண்டார்க்கு விசேஷணமாக்கி யுரைப்பாராம், கீழே “அடிசேர்முடியினராகி அரசர்கள் தாந்தொழ”  என்று மஹாராஜர்களால் தொழுதிறைஞ்சப்படுமவராகக் கூறப்பட்டவர்களுக்கு ஸ்த்ரீகளால் பணிமின் திருவருளென்னப் பெறுகை ஓர் ஏற்றமல்லாமையாலே, ஸ்த்ரீகளிடத்திலே இவர்கள் ‘பணிமின் திருவருள்’  நன்று என்று பட்டர் திருவுள்ளம் போலும். அவ்வரசர்களின் ரஸிக சக்ரவர்த்தித்வத்தைக் காட்டியவாறு.

“பணிமின் திருவருள்” என்று கை கூப்பிக்கொண்டு விண்ணப்பஞ் செய்பவர்களும் அஞ்சீதப் பைப்பூம்பள்ளி அணிமென்குழலா ரின்பக்கலவி யமுதுண்டவர்களான அரசர்கள்-என்று பொருள் காண்க. “மங்கைமீர்! கிருபை பண்ணியருளவேணும், நங்கை மீர்! அருள் செய்யவேணும்” என்று பல் பன்னிரண்டையும் காட்டிக்கொண்டு விஷயபோகங்களை யநுபவித்தவர்கள், துணிமுன்பு நாலவும் பல்லேழையர்தாமிழிப்பவும் செல்வர்-; (அதாவது) தாம் அனுபவித்த மாதர்களை வேறுசிலர்கைப்பற்றிக் கிடப்பார்கள்; இவர்கள் தங்களுடைய தேஹயாத்திரைக்காக அவர்களிடத்தே போய் யாசிக்கப் புகுவர்கள்: ஏழைமைக் கொடுமையும் உடன்சேர்ந்து அரையின் துணி எட்டம் போராதே கிடக்கும்; முன்பக்கத்திலே மாத்திரம் குஹ்யத்திற்கு ஆவரணமாகச் சிறிது துணி தொங்கா நிற்கும்: இந்த எளிவரவைக்கண்டு அவர்கள் அப்போது தங்களை அபிமானித்திருக்குமவர்களுடைய முகமலர்த்திக்காக ஏளனம் செய்வர்கள்; அதையும் பரம யோக்யமாகக்கொண்டு அவ்விடத்தே நடந்துசெல்வர்களாம்.

ஜீர்யந்திஜீர்யத: கேசா: தந்தாஜீர்யந்தி ஜீர்யத்: சகூஷுச்சரோத்ரே ஜீர்யேதேத்ணைநா நிருபத்ரவா. ஏன்ற ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது. தலை நரைத்தாலும் பற்கள் விழுந்தொழிந்தாலும், கண் இடுங்கிப்போனாலும்: காது செவிடாகி யொழிந்தாலும் நப்பாசை யொன்றுமாத்திரம் குறையொன்று மின்றி வளர்ந்து செல்லும்-என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.

ஆக இவ்வளவாலும் ஹேயமாகச் சொல்லப்பட்ட விஷய போகங்களிலே நசையற்று, விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹம் படைத்த பெருமானுடைய திருநாமங்களைச் சொல்லி அதுவே போதுபோக்காக உஜ்ஜூவியுங்கோளன்கிறார் ஈற்றடியால்

 

English Translation

They who enjoyed sweet union with coiffured dames, -who vied with one another to give favours on soft cool flowery beds, -do now roam wearing a loin-cloth, scorned and laughed at by all, Live by uttering the name of the Lord of radiant gem-hue

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top