(3231)
ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ.
பதவுரை
|
ஒரு நாயகம் ஆய் |
– |
பூமண்டலம் முழுமைக்கும் அத்விதீயப்ரபுவாய் |
|
ஓட |
– |
வெகுகாலமளவும் |
|
உலகுஉடன் |
– |
உலகங்களை யெல்லாம் |
|
ஆண்டவர் |
– |
அரசாட்சி புரிந்தவர்கள் |
|
(ஒரு காலவிசேஷத்திலே தரித்ரர்களாகி) |
||
|
கரு நாய் கவர்ந்த காலர் |
– |
கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும் |
|
சிதைகிய பானையர் |
– |
உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி |
|
பெரு நாடு காண |
– |
உலகமெல்லாம் திரண்டுவந்து (பலிபவத்தை) காணும்படியாக |
|
இம்மையிலே |
– |
இப்பிறவியிலேயே |
|
தாம் |
– |
தாங்களே |
|
பிச்சை கொள்வர் |
– |
பிச்சை யெடுப்பர் |
|
(செல்வத்தின் தன்மை இத்தகையதாதலால்) |
||
|
திரு நாரணன் |
– |
ஸ்ரீ மந்நாராயணனுடைய |
|
தாள் |
– |
திருவடிகளை |
|
காலம்பெற |
– |
விரைவாக |
|
சிந்தித்து |
– |
தியானித்து |
|
உய்ம்மின் |
– |
உஜ்ஜூவியுங்கோள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்களுங்கூட நாளடைவிலே தரித்ரர்களாய்த் தடுமாறும்படியைக் கட்கூடாகக் காணப்பெறலாயிருக்குமாகையாலே நித்ய ஸ்ரீமானான எம்பெருமானைப் பணிவதே பாங்கு என்கிறார்.
உலகங்களெல்லாவற்றிற்கும் ஒருவனே அரசனாயிருக்கும்படி ஸார்லபெனால் என்று பெயர் பெறும் மஹாப்ரபு ஒருவன்கூட இருக்கமுடியாது வைராக்ய பஞ்சகத்தில் அருளிச் செய்தபடியே பூமியில் ஒவ்வொரு மூலைக்கு ஒவ்வொருவன் அரசனாக அமையக்கூடும்: ஆனர்லும் “நிகரில் புகழாய் உலகம் மூன்றுமுடையாய்” என்று போற்றப்படுகின்ற எம்பெருமானாகவே தம்மைப் பாவத்திருக்கும் அவர்களுடைய அபிமானத்தையடியொற்றி “ஒரு நாயகமாய் ஓடவுலகுடனாண்டவர்” என்கிறார். ஊண்மையாகவே அப்படிச் சில அரசர்கள் இருந்தார்களென்றுங் கொள்ளலாம். ஓட என்றது -காலம் நெடுகியோட என்றபடியாய் ‘நெடுங்காலம் வரையில்’ என்று பொருள்படும். இப்படி நெடுங்காலம் உலகை ஆண்டவர்களுக்கும் இழவு ஸம்பவிக்கும்படியை மேலிரண்டடிகளால் விசித்திரமாக அருளிச் செய்கிறார் கருநாய் கவர்ந்தகாலர் என்று தொடங்கி.
நன்றாக வாழ்ந்தவர்களுக்கும் ஒரு காலத்திலே ஏழைமை வந்து சேருமே; ஒரு நாளுணவையொழியென்றாலொழியாத வயற்றின் பசி ஆற்றவொண்ணாதே; ‘நெடுநாள் மதிப்போடே ஜூவித்துக்கிடந்த நாம் பிச்சையெடுத்துப் பிழைப்பது முண்டோ? பட்டினிகிடப்போம்’ என்று கிடக்கமுடியாதே; வயிறு வளர்க்கையிலுண்டான நசையாலே பிச்சையெடுக்கவே புறப்பட வேண்டிற்றாகும்: முன்பு குறைவின்றியே ஜூவித்துப் போந்தவர்களாகையாலே பலருங்காண வெளியில் புறப்படமாட்டாமல் இருட்டு வேளைகளிலே புறப்படுவர்கள்: இருளோடேயிருளாய்க் கறுத்த நாய்கள் தெருவிலேவிழுந்து கிடக்கும்: பிச்சைக்கு இருளிலே செல்லுமிந்த மஹாப்ரபுக்கள் அவைகிடப்பதறியாதே அவற்றின் வாயிலே காலை வைத்திடுவர்கள். ஆதனால் அவை வருந்திக் கடித்திடும்; உடனே அந்தப் பாதை பொறுக்கமாட்டாமல், கையிலிருந்த பிச்சைப் பானையைக் கீழே நெகிழ விடுவர்கள்; நாய் கடித்த வலியைப் பொறுக்ககில்லாதே கதறவேண்டியிருந்தும், ‘கதறினால் நம்மைப் பலரும் கண்டுபிடித்து ஏசுவர்களே’ என்கிற கூச்சத்தினால் வாய் திறவாதிருந்தாலும் பிச்சைப்பானை கீழே விழுந்து உடைந்த வோசை கேட்டும் நாய் கத்தின வொலி கேட்டும் ஓடிவந்து காணத்திரண்டதிரள் எண்ணிறந்ததாகும்; இங்ஙனம் பலரும் திரண்டு கண்டு ஏசும்படியாக இப்பிறப்பிலேயே பிச்சைபுகும்படியான நிலைமை நேர்ந்து விடுகின்றதென்பதை மூன்றடிகளாலே கூறி, இதனால் ஐச்வர்யம் அஸ்திரம் என்பதைக் காட்டி, ஈற்றடியினால் நித்யபுருஷார்த்தமான பகவத்ப்ராப்தியிலேயே ஊன்றிப் போரும்படி உபதேசித்தாராயிற்று.
கருநாய் என்பதற்கு-கருக்கொண்டிருந்த நாய் என்றும் பொருள் கூறுவர் குட்டியிட்டநாய் என்றபடி. என்றும் குட்டியைக் காத்துக் கிடக்கிறதாகையாலே ‘அதுக்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ’ என்று கண்டாரை யோடிக் கடிக்குமாம். ‘வீரக்கழலிட்டகால்’ என்று முன்பு விருதுர்திக் கிடந்தது; இப்போது ‘நாய் கடித்தகால்’ என்னும் படியாயிற்று.
சிதைகியபானையர்-ஒருவர்க்கும் உபயோகப்படமாட்டாத பாத்திரத்தையுடையவர் என்றுமாம். முன்பு பொற்காலத்திலே ஜூவித்தவனுக்கு இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று. யாரேனும் ஒரு பிடிசோறு இட்டாலும் தங்காதே ஒரு மூலையாலே கீழே நழுவிப்போம்படி சிதிலமான பாத்திரமேயாயிற்று கிடைப்பது.
பெருநாடுகாண-முன்பு செங்கோல் செலுத்தாநிற்குமளவில் உபஹாரங் கொண்டு காணவருமவர்கள் ஓராண்டு ஆறுமாதமும் உள்ளே புகவும் பெறாதபடி கிடந்து படுவர்கள்; அவர்கள் இப்போது எளிதாகக் காணலாயிற்று. “முன்பு வெய்கொற்றக்குடையின் நிழலிலே வாழ்ந்தவனுக்கா இக்கதி வந்திட்டது!” என்று சொல்லிக்கொண்டே காண்பதற்கு கூடுங்கூட்டம் மிகப் பெரிதாயிருக்குமென்று காட்டப்படுகின்ற பெருநாடுகாண என்பதனால்.
ஆனது மற்றொரு பிறவியிலே’ என்று நினையாமைக்காக இம்மையிலே என்றார். பிச்சை-பண்டு பலபல ராஜாக்களுக்கு க்ராமபூமிகள் வழங்கின கையாலே ஒரு கவளம் யாசிக்கலாகிறது!. தாம் கொள்வர்-முன்பு ராஜாக்கள் பலர்கொண்டுவரும் உபஹாரங்களைத் தங்கள் கையாலே நேராக வாங்காமல் ஆளிடுவர்கள்; அன்னவர்கள் இப்போது மேல்விழுந்து பிச்சை பிடுங்குகிறபடி. ஆதலால் இடர்கெடுத்த திருவாளினிணைபடியே யடைவது நலம்.
எம்பெருமனார் திருநாரணன்தாள் காலம்பெறச் சிந்தித்துய்ம்மினோ என்கிற விதிலே நோக்காக இத்திருவாய்மொழியைத் திருநாராயணபுரத்துத் திருநாராயணப் பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாக ஸம்ப்ரதாயம்வல்ல பெரியோர் பகர்வர்.
English Translation
Contemplate, quick, the feet of Tirunarayana and arise! For, monarchs who rule the world as one empire, do one day go begging, leg bitten by a black bitch, bowl broken, shamed and scorned by the world
