(3202)
கண்களால் காண வருங்கொலைன் றாசையால்,
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,
பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே.
பதவுரை
|
என் செவிகள் |
– |
எனது காதுகளானவை |
|
கண்களால் காண வரும் கொல் என்று ஆசையால் |
– |
கண்களால் காணும்படி வருவனோ வென்று ஆசையினால் |
|
மண் கொண்ட வாமனன் ஏற |
– |
(மாவலியிடம்) பூமியைக் கவர்ந்த வாமனன் (தன் மீது) ஏறுதலால். |
|
மகிழ்ந்து செல் |
– |
மகிழ்ச்சியோடு செல்கின்ற |
|
புள்ளின் |
– |
க்ருத்மானுடைய |
|
பண்கொண்ட |
– |
ஸாம்வேத ஸ்வரப்ரசுரமான |
|
சிறகு ஒலி |
– |
சிறகின் தொனியை |
|
பாவித்து |
– |
நினைத்து |
|
கிடந்து |
– |
பரவசமாய் கிடந்து |
|
திண்கொள்ள ஓர்க்கும் |
– |
உறுதியாக நிரூபிக்கின்றன. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- காணவும் வேணும், கேட்கவும் வேணுமென்று செவிகள் ஆசைப்படுகின்றன வென்கிறார். இப்பாசுரத்தில் செவிகள் எழுவாயாதலால் முதலடியில் கூறுப்பட்டுள்ள ஆசை செவிகளுக்குண்õடன ஆசையாகவே கொள்ளத்தக்கது. செவிகளானவை தமக்குக் கண்கள் முளைக்கவேணுமென்றும் அவற்றாலே காணவேணுமென்றும் ஆசைப்படுகிறபடி அன்றியே, தாமே கண்களாக மாறிக் காண ஆசைப்படுகிறபடியுமாம். கண்ணாரக் கண்டுகளிக்க எழுந்தருள்வனோ வென்கிற நசையாலே செவிகளானவை, எம்பெருமான் பெரிய திருவடியின் மீது ஏறிக்கொண்டு எழுந்தருள்வதாகவும், எம்பெருமானைச் சுமந்துகொண்டு பெரிய திருவடி மகிழ்ச்சியாலே சிறகுகளையடித்துக்கொண்டு விரைந்து ஓடிவருவதாகவும் பாவனை கொண்டு அந்தச் சிறகொலியைக் கேட்க அதிலேயே ஊற்றமுற்றிருக்கின்றன வென்கிறார்.
மண் கொண்ட வாமனன் ஏற = வாமநமூர்த்தியாவது த்ரிவிக்ரமமூர்த்தியாவது பெரிய திருவடியின் மீது ஏறி யெழுந்தருளினதாக எங்கும் ப்ரஸிக்தியில்லை; அப்படியிருக்க “வாமனன் ஏற” என்று இங்கு அருளிச் செய்தது ஏன்? என்னில், வாமனன் என்கிற வ்யாக்தியில் நோக்காக அருளிச்செய்வதன்று; அவனுடைய செயலில் மாத்திரமே இங்கு நோக்கு; தன்னுடைமையைப் பெறுவதற்குத்தான் இரப்பாளனாய்ச் செல்லுதல் என்னும் குணவிசேஷத்தையுடையனான எம்பெருமான் என்றபடி ‘பெரியதிருவடியின் மீது ஏறிக்கொண்டு எம்பெருமான் ஆங்காங்கு யாத்திரை செய்வதானது தன்னுடைமையைத்தான் இரந்து பெறுதற்கு’ என்று ஆழ்வாருடைய நினைவு போலும்.
செல் என்பது புள்ளுக்கு அடைமொழி; செல்கின்ற புள் என்றபடி.
பண்கொண்ட புள் = வாஹநபரிஷ்காரங்களையுடைய புள் என்றும்,- ப்ருஹத்ரதந்திரம் முதலிய ஸாமங்களை வடிவாகக் கொண்ட புள் என்றும், இருவகையாகப் பொருள்படும். இரண்டாவது பொருள் மிகச் சிறக்கும். வேதாத்மா விஹகேச்வர” என்றார் ஆளவந்தார். ஸுபர்ணோஸி கருத்மாந் இத்யாதி வேதவாக்யத்தினால் கருத்மானுடைய வேதமயத்வம் நன்கு உணரத் தக்கது. பிள்ளைப் பெருமாளையங்காரும் திருவரங்கத்து மாலையில் (88) “சிரஞ்சேதனன் விழிதேகஞ் சிறைபின் சினைபதங்கந், தரந்தோள்களுக்கு வடிவம் பெயரெசுர் சாமமுமாம், பரந்தே தமதடியார்க்குள்ள பாவங்கள் பாற்றியருள, சுரந்தேயளிக்குமரங்கர்த மூர்சித் சுவணனுக்கே.” என்ற செய்யுளினால் விவரித்தனர்.
சிறகு ஒலி பாவித்து = ஆழ்வாருக்கு எம்பெருமான் மீதும் ஞாபகமில்லை. அவனைத் தாங்கி வருகிற பெரிய திருவடியின் மீதும் ஞாபகமில்லை. அப்பெரிய திருவடியின் சிறகின்மீதும் ஞாபகமில்லை; சிறகின் ஒலி யொன்றிலேயே ஞாபகம் செல்லாநின்றது போலும். இங்கு “பூங்கொன் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும், சாரங்கவில் நாணொலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ” என்ற நாச்சியார் திருமொழிப்பாசுரம் அநுஸந்திக்கவுரியது. ருக்மிணிப் பிராட்டிக்கு ஒரு ஒலியிலே ஞாபகம்; ஸீதாபிராட்டிக்கு ஒரு ஒலியிலே ஞாபகம்; பராங்குசநாயகிக்கு ஒரு ஒலியிலே ஞாபகம் என்று அஸ்மதாசார்யா சமத்காரமாக உபந்யஸிந்தருளக் கேட்டிருக்கை. கண்ணபிரானையன்றி மற்று எவனையும் கனவிலும் கருதாதிருந்த ருக்மிணிப் பிராட்டிக்கு சிசுபாலனோடு விவாஹம் நடப்பதாகக் கோடித்து ஸித்தமாயிருந்த ஸமயத்தில் கண்ணபிரானது வரவை எதிர்பார்த்திருந்த அவளது மனம் முறிந்து போய் இனி நாம் உயிர் துறப்பதே நல்லுபாயமென்று நிச்சயித்திருந்த க்ஷணத்தில் கண்ணபிரான் பதறி ஓடிவந்து புறச்சோலையிலே நின்று தன் பாஞ்சஜந்யத்தை ஊதியருள அதன் ஒலி ருக்மிணிப் பிராட்டியின் செவியிற்புகுந்து பேரின்பம் பாய்ந்தது; இராவணன் ஸீதையிடம் வந்து இராமபிரானிறிந்தானாக ஒருபொய்ச் கூற்றுக் கூறி மாயாசிரஸ்ஸைக் காட்டினபோது அப்பிராட்டி வருந்திக்கிடக்கும் க்ஷணத்திலே ராமபிரான் கடற்கரையிலே நின்று தனது சார்ங்கவில்லை ஒலிப்பிக்க, அவ்வொலி எனது ஸீதையின் செவியிற்புகுந்து பேரின்பம் பயந்தது; இவை போல இவ்வவ்வார்க்குப் பெரிய திருவடியின் சிறகொலியே பேரின்பம் பயப்பதாம். சிறகொலிபால பாவித்தலாவது- சிறகின் ஒலியே செவியில் பட்டுக்கொண்டிருப்பதாக நினைத்தலும், சிறகொலி எப்போது செவியில் படும் என்று அதுவே ஞாபகமாயிருத்தலுமாம்.
திண்கொள்ள ஓர்க்கும் = எதிரே நின்று யாரேனும் ஏதாகிலும் பேசிக்கொண்டிருந்தாலும் அதைச் சிறிதும் செவியேற்காமல் புள்ளின் சிறகொலி செவியிற்படுவதையே குறிக்கொண்டிருக்கும்படியைக் கூறியவாறு. வேறொன்றில் நெஞ்சு செலுத்தாமல் ஒன்றிலேயே அவதானம் வைப்பது திண்கொள்ளவோர்த்தலாம். இவ்விடத்து இருபத்துநாலாயிரப்படியில் “பரதாழ்வான் கிலிகிலாசப்தத்துக்குச் செவிமடுத்துக்கொடு கிடந்தாப்போலே” என்றருளியது காண்க.
English Translation
Vying with my craving eyes, my ears perk up in attention, yearning to hear the sweet rustle of the wings of Garuda, would that the brings the Earth-Master Vamana here.
