(3200)
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்
நாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,
வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே, என்று தடவுமென் கைகளே.
பதவுரை
|
என் கைகள் |
– |
எனது கைகளானவை. |
|
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நயாகனே |
– |
வாக்கு மாத்திரமே துதிக்கும்படியாக அதற்கு அருள் செய்கின்ற தேவாதி தேவனே! |
|
நான் இள திங்களை கோள்விடுத்து |
– |
புதிய இளை உதய சந்திரன் போலப் பற்களின் ஒளியைப் பரவிட்டு |
|
வேய் அகம்பால் வெண்ணெய் தொடு உண்ட |
– |
மூங்கிலால் செய்த வீடுகளில் வெண்ணெயைக் களவு கெய்து அமுது செய்த |
|
ஆன் ஆயர் தாயவனே |
– |
கோபால க்ருஷ்ணனே! |
|
என்று தடவும் |
– |
என்று தடவுகின்றன |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தமது கைளுக்கு வாக்கின் வ்ருத்தியிலும் தம் வ்ருத்தியிலுண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார். “வாசகமே யேத்த அருள் செய்யும்” என்றவிடத்து வாசகமே என்ற ஏகாரம்- வாக்கு மாத்திரமே தேவரீரை யேத்தும்படியிருக்க வேணுமோ? (கைகளாகிய) நாங்களும் ஏத்தும்படி அருளலாகாதோ? என்ற கருத்தைக் காட்டும். வானவர்தம் நாயகனே!’ என்ற அடுத்த விளியின் சேர்த்தியையும் நோக்கி நம்பிள்ளை அழகாக அருளிச் செய்கிறபடி பாரீர் – “நித்யஸூரிகள் ஏந்தவிருக்கிற உனக்கு வாக்கு ஏதேனும் பச்சையிட்டதுண்டோ?” என்று ஆழ்வாருடைய திருவாக்கு ஏத்துகிறாப் போலவும் நித்யஸூரிகளின் வாக்கு ஏத்துகிறாப்போலவும் நாங்களும் ஏத்தும்படி யருள் செய்யவேணுமென்று கைகளின் பிரார்த்தனை போலும்.
நாளிளந்திங்களைக் கோள்விடுத்து = இதற்கு ஆபாத ப்ரதீதியில் ஒருபொருள் தோன்றும்; அதாவது சந்திரனுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கின வரலாறு ஒன்று உண்டாதலால் அது இங்கு அநுஸந்திகப்படுகின்றதாக. இந்தப் பொருள் இங்கு ஆபாத ப்ரதீதியில் தோன்றக்கூடுமாயினும், இங்கு இதுவன்று பொருள். “அபிநவ பூர்ணசந்திரகிரகணம் போலே திருமுத்தினொளி புறப்படும்படி திருப்புவனத்தைத் திறந்து” என்பது ஆறாயிரப்படி யருளிச் செயல். இப்பொருளையே ஸகல ஆசார்யரர்களும் அருளிச் செய்துள்ளார்கள். இவே ரஸவத்தரம். இங்கு உபமேயமான வஸ்து சொல்லப்படாதிருப்பினும் திங்கள் என்னும் உபமாநவாசம் திருமுததாகிற உபமேயத்தையே லக்ஷணையினால் தெரிவிக்கும். “தாவி வையங்கொண்ட தடந்தாமரைகேட்கே” என்றவிடமும் காண்க.
நாளிளந்திங்களைக் கோள்விடுத்தது எப்பொழுது என்னில், வேயகம்பான் வெண்ணெய் தொடுவுண்ட காலத்தில் என்க. அதாவது- கண்ணபிரான் படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப் பசுவெண்ணெய் களவுகாணப் புகுமிடத்தில் தன்நிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் வெண்ணெயிருக்குமிடம் தெரியாமல் தடவாநிற்கையில் யாத்ருச்சிகமாகக் கையிலே வெண்ணெய்த்தாழிகள் தட்டின உவப்பினால் பல்லைத் திறந்து சிரிக்க நேரும்;
பூர்ணசந்திரனுடைய கிரணம் போலே திருமுத்துக்களின் ஒளி புறப்படவே அந்த ஒளியையே கைவிளக்காகக் கொண்டு அமுது செய்வன் என்றுணர்க. “உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்று அங்குண்டானை” என்ற பெரிய திருமொழியிலும் ‘ஒளியால்’ என்றதற்கு இங்ஙனமே பொருளுரைக்கப்பட்டது காண்க. கண்ணபிரானுடைய திருமத்துக்கள் நாளிளந் திங்களை யொத்திருக்குமென்பது “செக்கரீடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைப்போல, நக்க செந்துவர்வாய்த் திண்ணைமீதே நளிர் வெண்பல் மூளையிகை’ என்ற பெரியாழ்வார் திருமொழியினாலும் அறியத்தக்கது. கோள் விடுத்து- தேஜஸ்ஸைப் புறப்படவிட்டு என்றபடி.
தொடு உண்ட = களவினால் உண்ட: “மாயை தொடு பட்டிமை வஞ்சனையாகும்” (பிங்கலந்தை – பண்பிற் செயலிற் பகுதி வகை- 135.) என்கிறது காண்க. என்று தடவும் என்கைகள் = அவன் வெண்ணெய் களவு செய்யப் புகுந்தவிடத்தே வழியைக் கட்டிப் பிடித்துக் கொள்ளத் தேடுகின்றன என்கைகள் என்று ரஸோக்தியாகப் பொருள் கூறுவர்.
English Translation
O Lord of celestials blessing this tongue with words! Protector of the cowherd-clan! you ate butter by stealth in the hamlets of the Gopis, then flashed a crescent-moon smile! My hands forever yearn to feel you.
