(3199)

(3199)

நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்

தஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற

நஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய வஞ்சனே,

என்னுமெப் போதுமென் வாசகமே.

 

பதவுரை

என் வாசகம்

எனது வாக்கானது

நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் தஞ்சனே

மனத்தையே பெரிய நகரமாகக் கொண்டு அதிலே தங்கியிருக்கின்ற எனது நற்றுணைவனே!

தண் இலங்கைக்கு இறையை செற்ற நஞ்சனே

தண்ணிதான இலங்காபுரிக்குத் தலைவனாயிருந்த இராவணனைத் தொலைக்கும் விஷயத்தில் நஞ்சானவனே!

ஞானம் கொள்வான் குறள் ஆகிய

(மாவலியிடமிருந்து) பூமியைக் கொள்ளும் பொருட்டு வர்மன் மூர்த்தியான

வஞ்சனே

வஞ்சகனே!

என்னும் எப்போதும்

என்று எப்போதும் சொல்லா நின்றது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- – வாக்கானது எம்பெருமானை நோக்கி ‘ஸ்வாமி! நெஞ்சு தேவரீரை நினைக்க அதற்கு அருள் செய்தாப்போலே நானும் தேவரீரை நினைக்க அருள் செய் வேணும்’ என்று அலற்றாநின்றது என்கிறார். நெஞ்சுக்கு அருள்செய்ததுபோலு எனக்கும் அருள்செய்ய வேணுமென்று வாக்கு விரும்புவதாகப் பாசுரத்தில் எங்குள்ளது? என்னில்; “நெஞ்சமே நீணகராகவிருந்த” என்பதில் இவ்வர்த்தம் உய்த்துணரத்தக்கது. ‘எஞ்ஞான்றும் நெஞ்சிலேயிருந்து பேரமித்தனையோ? என் பக்கலிலும் ஒருகால் இருக்கலாகாதோ?’ என்ற கருத்து இதில் அமைந்துள்ளது. “பிறர் அகத்திற்கே போகின்றவரே!” என்று ஒருவனைக் குறித்துச்சொன்னால் “எம் அகத்திற்கும் ஒருநாள் வந்தாலாகாதோ” என்கிற கருத்துகிடைப்பதுபோல, ‘நெஞ்சமே’ என்ற ஏகாரத்தினால்- வேறு இந்திரியங்களிலும், பரமபதம் திருப்பாற்கடல் முதலியவற்றிலும் எம்பெருமான் விருப்பமற்றிருக்கும் தன்மை பெறுவிக்கப்படும். “கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும், புல்லென்றொழிந்தன கொல் ஏபாவம்- வெல்ல நெடியான் நிறங்கரியான உள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கவுரியது.

என் தஞ்சனே! = இப்பாசுரம் வாக்குறுப்பு சொல்லுவதேயானாலும் நெஞ்சின் உதவியில்லாமல் அது தனியே சொல்ல முடியாததலால் நெஞ்சும் இதில் அந்வயித்திருக்கின்றதென்றே கொள்ளவேணும்; அந்த நெஞ்சின் ஸமாதியாலேர என் தஞ்சனே என்கிறது; அதாவது   தன்னையே நீணகராகக் கொண்டு இருக்கப் பெற்ற உபகாரத்தை நினைத்துச் சொல்லுகிறபடி- என்று சிலர் சொல்லுவார்கள்; அதில் ஸ்வாரஸ்யமில்லை; என் தஞ்சனே! என்றவிதில் என் என்பது வாக்கையே குறிப்பிடும்; அவனையே தான் கூப்பிடும்படி பண்ணின உபகாரத்தை நினைத்துத் தஞ்சனே! என்கிறது. இங்கே ஈடு;- ‘இப்படிக் கூப்பிடப் பண்ணின உபகாரகத்வத்தை நினைத்துச் சொல்லுகிறார்; ஸம்ஸாரிகளில் இப்படிக் கூப்பிடுகிறாரில்லையிறே” என்பதாம்.

இங்கே “அழுநீர் தளும்பைக் கடலும் மலையும் விசும்பும் துழாய் திருமாலென்று எங்கே காண்கேனென்னுமிவரலமாப்பு அவர்களுக்குப் புத்ரவியோகத்திலே” என்ற ஆசார்ய ஹ்ருதயஸூக்தி அநுஸந்தேயம். (இதன் கருத்தாவது- எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினால் கண்ணும் கண்ணீருமாய்க் கடலோடு மலையோடு ஆகாசத்தோடு வாசியற எங்குந்தேடி நெஞ்சு கலங்கி ‘திருமாலே!’ என்று கூப்பிட்டு ‘எங்கே காண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை’ என்று இவ்விதமாக ஆழ்வார்படும் ஆற்றாமையெல்லாம் ரிஷிகளுக்குப் புத்ரவியோகத்திலேயாயிருக்கும்: வஸிஷ்ட பகவான் புத்ரனிறந்த வருத்தத்தினால் மரணத்தை விரும்பு மலையேறி விழுவது நெருப்பிலே குதிப்பது, கழுத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு கடலிலே விழுவது ஆக விப்படியெல்லாம் தடுமாறினாரென்பதும், வேவ்யாஸ பகவான் புத்ரவியோகம் பொறுக்கமாட்டாமல் ‘புத்திரனே!’ என்று வாய்விட்டுக் கூப்பிடு அழுதுகொண்டு காணப்பெறாமையால் அமைந்து திரிந்தாரென்பதும் புராணப்ரஸித்தம்.)

தண்ணிலங்கைக்கு இறையைச்செற்ற நஞ்சனே! = தண்மையானது- குளிச்சியும் ஹீனத்தன்மையும் அறிவில்லலாமையுமாம். இப்பொருள்கள் யாவும் இலங்கைக்குச் சேரும். குளிர்ச்சியைச் சொன்னது போக்யதையைச் சொன்னவாறு; இலங்காபுரியின் போக்யதையை மஹாவிரக்தனான திருவடியே கொண்டாடினான். “ஸவர்க்கோயம் தேவலோகோயம் இந்திரஸ்யேயம் புரீ பவேத், ஸித்திரிவேயம் பரா ஹி ஸ்யாத் இந்யமந்யத மாருதி” என்றது காண்க.

வாக்கானது தண்ணிலங்கைக் கிறையைச் செற்ற நஞ்சனே என்று சொல்லுவதன் கருத்து யாதெனில் மஹாபாபியான இராவணனையும் நோக்கி தேவரீர் ஹிதமான பல வார்த்தைகள் அருளிச் செய்ததுண்டே; அப்படி என்னையும் நோக்கி ஏதேனுஞ் சில ஸூக்திகள் அருளலாகாதோ? என்று குறிப்பாம்.

ஞாலங்கொள்வான் குறளாகிய வஞ்சனே! = மாவலியானே கொள்ளை கொள்ளப்பட்டிருந்த பூமியை மீட்டுக் கொள்ளும் உபாயம் அறியுமவனே! இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி ராவணனைப் போலே தலையை அறுக்காவிட்டது ஔதார்யமென்பதொரு குணலேசமுண்டாகையாலே, இவன் கையிலே ஒரு தர்மாபாஸ முண்டாயிருந்ததென்று இவனையழியாதே ஸர்வாதிகனான தன்னை அர்த்தியாக்கி இந்திரனுக்கு ராஜ்யத்தை வாங்கிக்கொடுத்த விரகு.” என்பதாம். இங்கே “தைத்யௌதார்யேந்தரயாச்நாவிஹதி மபநயத் ஸம்நோர்த் தீ த்வமாஸீ:” (ஸ்ரீரங்கராஜஸ்தவம்) என்ற படட்ர் ஸ்ரீஸூக்தி அநுஸக்தேயம்: ஸ்ரீராமக்ருஷ்ணாதி அவதாரங்களில் ஆச்ரிதர்களுடைய இஷ்டப்ராபணத்திற்கும் அநிஷ்ட நிவாரணத்திற்கும் எம்பெருமான் யாசக வ்ருத்தியை அவலம்பிக்க வில்லையே; இந்த அவதாரத்தில் மாத்திரம் அதை ஏன் அவலம்பித்தார்? என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக இஃது உள்ளது: மஹாபலியானவன் மற்ற அரக்கரசுரர்களைப் போன்றிக்கே ஔதார்யமென்று ஒருசிறந்த குணமுடைவனாயிருந்ததனால் அந்தக் குணங்களையும், இந்திரன் பக்கலிலுள்ள யாகத்வத்தையும் குறிக்கொண்டு அவ்விரண்டையும் ஸபலமாக்குவதற்காக தேவரீர் தாமே பிக்ஷுகராய்ச் சொன்றீர் என்றவாறு.

வாக்கானது ஞாலக்கொள்வான் குறளாகிய வஞ்சனே! என்று சொல்வதன் கருத்து யாதெனில்; மூவடி வேண்டி மாவலியிடம் சென்றபோது தேவரீர் அவ்வசுரனை நோக்கி அழகிய பேச்சுக்கள் பேசிற்றாமே; அங்ஙனே என்னோடும் சிறிது பேசுலாகாதோ என்பதாம்.

என்னும் எப்போதும் என் வாசகமே = எனது வாக்கின் வ்ருத்தி எப்போதும் இதுவேயாயிற்று; வாமனாவதாரத்தின் வஞ்சன சாதுர்யத்தை நினைத்த பின்பு ராமாவதாரத்தின் செவ்வையிலும் செல்லுகிறதில்லை.

 

English Translation

O My refuge, living in the citadel of my heart!  Lord who killed the Lanka king, Lord who came as a manikin and took the Earth!  My tongue incessantly praises you.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top