(3189)
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை, பொன்னெடுஞ் சக்கரத் தெந்தை பிரான்தன்னை
பாதம் பணியவல் லாரைப் பணியும் அவர்க்கண்டீர்,
ஓதும் பிறப்பி டை தோறெம்மை யாளுடை யார்களே.
பதவுரை
|
நாதனை |
– |
ஸ்வாமியாய் |
|
ஞாலமும் வானமும் ஏத்தும் |
– |
உபய விபூதியிலுள்ளாரும் ஏத்துதற்குரியவனாய் |
|
நறு துழாய் போதனை |
– |
பரிமளமுள்ள திருத்துழாய் மலர்மாலையை யுடையனாய் |
|
பொன் நெடு சக்கரத்து |
– |
அழகினால் உயர்ந்த திருவாழியை யுடையனான |
|
எந்தை பிரான் தன்னை |
– |
எம்பெருமானை |
|
பாதம் பணிய வல்லாரை |
– |
திருவடிகளில் வணங்கவல்லவர்களை |
|
பணியும் அவர் |
– |
வணங்குமவர்கள், |
|
ஓதம் |
– |
பேசப்படுகிற |
|
பிறப்பிடை தோறு |
– |
ஜன்மங்கள்தோறும் |
|
எம்மை |
– |
எங்களை |
|
ஆள் உடையார்கள் கண்டீர் |
– |
அடிமை கொள்பவர்களாவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார். நாதன் என்பதற்கு யாசிக்கப்படுபவன் என்றும் யாசிப்பவன் என்றும் ‘இருவகையாகவும் பொருள் கொள்ள வியாகரண சாஸ்த்ரம் இடந்தரும். அடியவர்களாலே யாசிக்கப்படுபவனானக இருப்பது போலவே அடியவர்களை எம்பெருமான்தான் யாசிப்பவனாகவும் இருக்கையாலே இருவகைப் பொருளும் பொருந்தும். சரணாகதிகத்யத்தில் * அர்த்திகல்பக* என்கிறவிடத்திற்கு வியாக்கியானமருளின ஆசிரியர்கள் இவ்விருவகைப் பொருளும் வியாக்கியானித் தருளினார்கள்.
ஞாலமும் வானமுமேத்தும் “நறுந்துழாய்ப்போதனை” என்ற ஸமபிவ்யாஹார ஸ்வாரஸ்யத்தால்,தோளும் தோள்மாலையுமான வழகைக் கண்டால் நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியற அனைவரும் புகழும்படியா யிருக்குமென்கிற பொருள் கிடைக்கும். பகவானைப் பழிக்க வேணுமென்கிற கருத்துடையாரும் திருத்துழாய்மாலை யணிந்திருக்குமழகைக் கண்டவாறே ஏத்தாதிருக்க முடியாதன்றோ.
பொன்னெடுஞ்சக்கரத்து எந்தைபிரான்தன்னை =கீழ்ச்சொன்ன திருத்துழாய் மாலையில் ஈடுபடாதவர்களையும் கையுந் திருவாழியுமான வழகாலே ஈடுபடுத்திக் கொள்பவனாயிற்று. “இன்னரென்றறியேன் அன்னே! ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னாரென்றறியேன்” என்று மதிமருளப் பண்ணவல்ல திவ்யாவுதங்க ளெல்லாவற்றிற்கம் உபலக்ஷணம்.
ஆக இப்படிப்பட்ட எம்பெமானுடைய திருவடிகளைப்பணிகின்ற அடியவர்கட்கும் அடியவர்கள் யாவரோ, அவர்களே எக்காலத்தும் நமக்கு சேஷிகள் என்றாராயிற்று.
இப்பாசுரத்தின் ஈட்டில் ஒரு ஐதிஹ்யமுளது- (அதாவது) முற்காலத்தில் பிள்ளையாத்தான் என்பாரொருவர் ஆசார்ய பும்ஸ்த்வப்பிடார் பொலிய நிற்பவராகையாலே க்ருஹஸ்தர்களான ஆசார்யரிகளிடத்திலே பணிந்திருந்து அர்த்த விசேஷங்கள் கேட்கத் திருவுள்ளமில்லாதவராய் நஞ்சீயர் பக்கலிலே வந்து ‘எனக்கு ஓருரு திருவாய்மொழி அருளிச்செய்ய வேஸம்’ என்று கேட்க, ‘நம்பிள்ளைபக்கலில் கேட்டால்தான் விசதமாகும்; அங்கே சென்று கேளும்’ என்ற நஞ்சீயர் அருளிச் செய்ய, அது கேட்ட அவர் ‘நம்பிள்ளையினிடத்தில் கேட்பதனால் அவரை நான் தெண்டன் ஸமர்ப்பிக்க வேண்டியதாகுமே; அதற்கு இறாய்த்தன்றோ ஸ்வாமி பக்கலில் பிரார்த்திக்கிறேன்’ என்று கூற, அது கேட்ட நஞ்சீயர் “அப்படி ஒரு நிர்ப்பந்தமில்லை” என்று சொல்லிக்கொண்டே நம்பிள்ளையை வரவழைத்து ‘இவனுக்குப் பாங்காபடி ஓரிரு திருவாய்மொழி சொல்லும்” என்று நியமித்தருள, நம்பிள்ளையும் ஆசார்ய நியமனத்தை சிரஸாவஹித்து அப்படியே அருளிச் செயதுவர, இத்திருவாய் மொழியளவும் கேட்டுவந்த அவர் பாகவதர்களின் பெருமை இப்படியன்றோ இருப்பதென்று தேறி, அதுவரையில் தாமிருந்த நிலைமைக்கு மிகவும் அநுதபித்து அன்று முதலாக நம்பிள்ளையினிடத்திலே அளவுகடந்த ப்ராவண்யம் காட்டப்புக, நம்பிள்ளை அதற்கு இசையா தொழியவே அவர் நஞ்சீயரிடத்திற்சென்று “பாகவத வைபவம் தெரியாமலே முன்பு அப்படிச் சொன்னேன்; க்ஷமித்தருளவேணும் ; இனி அடியேன் அநுவர்த்திக்கும்படிகளுக் கெல்லாம் நம்பிள்ளை இசைந்திருக்குமாறு ஸ்வாமி நியமித்தருள வேணும்” என்று நிர்ப்பந்தித்துப் போந்தார் என்பதாக.
English Translation
My Lord of fragrant Tulasi wreath and golden discus is Lord of the celestials and mortals. Those who serve his devotees are my masters, through every blessed life, just see!
