(3005)

(3005)

செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,

மல்கும்கண்பனி நாடுவன்மாயமே,

அல்லும்நன்பகலு மிடைவீடின்றி,

நல்கியென்னை விடான்நம்பி நம்பியே.

 

பதவுரை

செல்வம் நாராணன் என்ற

ஸ்ரீமந்நாராயணன் என்கிற வார்த்தையை

சொல் கேட்டலும்

கேட்டவளவிலே

கண்

கண்களானவை

பனி மல்கும்

நீர் ததும்புகின்றன

நாடுவன்

(எங்குற்றாய் எம்பெருமான்! என்று அவனைத்) தேடா நின்றேன்!

மாயமே

இது ஆச்சரியமே;

நம்பி

எல்லாவற்றாலும் நிறைந்த அப்பெருமான்

நல் அல்லும் பகலும்

நல்ல இரவும் பகலும்

இடை வீடு

இடைவிடாமல்

இன்றி  நல்கி

கிருபை பண்ணி

நம்பி

என்மேல் விருப்பங்கொண்டு

என்னைவிடான்

என்னை விடாதிருக்கிறான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விலக்ஷணர்கள் தாமே  ஈடுபடுதற்கரித்தான பகவத் விஷயத்தில் தாம் ஈடுபடுவது தகாதென்று உறுதிகொண்ட ஆழ்வார், பகவத் விஷயம் நடையாடாத தோரிடத்திலே கிடக்கவேணுமென்று போய் ஒரு குட்டிச் சுவரிலே முட்டாக்கிட்டுக் கொண்டு கிடந்தாராம்; அங்கே பெருஞ்சுமை யெடுத்துபோகிற ஒரு வழிப்போக்கன் சுமைக்கனத்ததனால் அதனைக் கீழே தள்ளுவான் ‘ஸ்ரீமந்நாராயணா! என்று சொல்லிக்கொண்டே தள்ளினானாக, அச்சொல் செவிப்பட்ட மாத்திரத்திலே தம்முடைய கரணங்கள் மீண்டும் பகவத் விஷயத்தில் ப்ரவணமானபடியைக் கண்டு வியக்கிறார். ஆழ்வாரருகில் ப்ரஹ்மசாரி நாராயணன் பேர் சொல்லுவாரிலராதலால் வழிப்போக்கனும் ஸ்ரீமந்நாராயணவென்றே சொன்னானாயிற்று அச்சொல் காதிற்பட்ட மாத்திரத்திலே கண்கள் பரவசமாய்ப் பனிமல்க, நெஞ்சும் எங்குற்றாயெம்பெருமானென்று தேடப்புகுந்தது; இப்படி நான் அவனை விட்டொழியவேனுமென்று ஸங்கல்பித்தாலும் விடமாட்டாதபடி யாவதற்குக் காரணமேதென்னில் அவன் என்னை விடமாட்டாமையே என்கிறார்.

(அல்லும் நண்பகலும்.) நல் என்ற அடைமொழி அல்லிலும் பகலிலும் அந்வயிக்கக்கடவது.

தம்முடைய விருப்பமில்லாதிருக்கச் செய்தேயும் தம்முடைய காரணங்களுக்கு பகவதநுபவமே யாத்ரையாம்படி அவன் மேல்விழுகிற காலமாதலால் நல்ல இரவும் நல்ல பகலுமென்கிறார்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top