(3006)

(3006)

நம்பியைத் தென் குறுங்குடிநின்ற, அச்

செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,

உம்பர்வானவ ராதியஞ்சோதியை,

எம்பிரானையென் சொல்லிமறப்பனோ.

 

பதவுரை

நம்பியை

கல்யாணகுண பரிபூர்ணனும்

தென் குறுங்குடி நின்ற

திருக்குறுங்குடியிலே நிற்பவனும்

அ செம்போனே திகழும் திருமூர்த்தியை

அழகிய செம்பொன் போலவே பிரகாசிக்கின்ற திருமேனியையுடையவனும்.

உம்பர் வானவர்

மேலான நித்ய ஸூரிகளுக்கு

ஆதி

காரணபூதனும்

அம் சோதியை

அழகிய ஒளியுருவனுமாகிய

எம் பிரானை

எம்பெருமானை

என் சொல்லி

என்னவென்று

மறப்பேன்

மறப்பேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அவன் விடாதிருந்தாலிருக்கட்டும்; நீர் அவனை மறந்து ஸம்ஸாரிகளைப் போலே* உண்டியே உடையே உகந்தோடித் திரியமாட்டீரோ வென்ன, நான் எதையிட்டு அவனை மறப்பது? மறக்கும்வகை தெரியவில்லையே யென்கிறார்.

நம்பியைத் தென்குறுங்குடிநின்ற = பரமபதத்திலும் எம்பெருமான் ஸகல குணங்களும் நிரம்பப்பெற்றவனாயினும் அங்கு எம்பெருமானிற் குறைந்ததில்லாமையாலே வாத்ஸல்யம் ஸௌசீல்யம் முதலிய எண்ணில் பல்குணங்கள் உபயோகப்படாமே கிடந்து இந்நிலத்தில் அர்ச்சாவதாரங்களில் இருட்டறையில் விளக்குப் போலே பிகாசிப்பவனவாதலால், பரிபூர்ணன் என்னும் பொருளையுடைய நம்பி என்னுஞ் சொல் அர்ச்சாவதாரத்திலே அமையக்கிடக்கின்றதென்க.

அச்செம்பொன் = பத்துப் பாட்டுள்ள பெரும்பாணாற்றுப் படையில் “அவ்வாய் வளர்பிறை” என்பதற்கு “அழகிய இடத்தையுடைய வளரும் பிறை” என்றும் நெடுநல்வாடையில் “அவ்விதழலிழ் பதம்” என்பதற்கு “அழகிய இதழ்கள் விரியுஞ் செல்வி” என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியார் உரையெழுதிப் போந்தமை கொண்டு இங்கு “அச்செம்பொன்” என்பதற்கு “அழகிய செம்பொன்” என்று பதவுரை கூறப்பட்டது. இனி, அகரத்தைச் சுட்டாகக் கொண்டு உரைத்தலுமாம்.

அயர்வறுமமரர்களோடே கூடத் திருக்குறுங்குடியிலே நின்றருளித் தன்னுடைய ஒப்பற்ற வடிவழகைக் காட்டி என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டான்; இனி எங்ஙனே அவனை நான் மறக்கும்படி? பூர்த்தி யில்லாதவனென்று மறக்கவோ? ஸமீபஸ்தனல்லன் என்று மறக்கவோ? வடிவழகில்லையென்று மறக்கவோ? மேன்மையில்லையென்று மறக்கவோ? எனக்கு உபகாரஞ் செய்பவனல்லன் என்று மறக்கவோ? எதையிட்டு மறப்பேனென்கிறார்.

குறுங்குடி = இது பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று. குறுகியவனான வாமநனது க்ஷேத்ரமாதலால் இத்தலத்திற்குக் குறுங்குடி யென்று பெயர் வந்ததென்பர். இத்தலத்திலுள்ள எம்பெருமான்களுன் ஒரு எம்பெருமான் ஸ்ரீபாஷ்யகாரர் பக்கலிலே திருமாண்காப்பு சாத்திக்கொண்டு வேதாந்தார்த்தமுங்கேட்டு சிஷ்யனாய் ‘நாமு“ நம்மிராமாநுசனையுடையோம்” என்கையாலே அப்பெரும் வைஷண்வநம்பி யென்று திருநாமம். ஆனது பற்றியே ‘வைஷ்ணவ வாமக்ஷேத்ரம்” என்றும் இத்தலம் வழங்கப்படும். நம்மாழ்வார் திருவவதாரத்திற்கு காரணமாயிருந்தவரும் இத்தலத்து நம்பியே.

செம்போனேதிகழுந் திருமூர்தி= எம் பெருமானுடைய வடிவு காளமேக நிபயாம மென்று வருணிக்கப்படாநிற்க, ‘செம்போனே திகழுந் திருமூர்தி’ யென்று இங்குச் சொன்னது தேஜஸ்ஸின் மிகுதியைப் பற்றவென்க. “கநகமரதகாஞ்சு நத்ரவாணாம் மதநஸமுத்தித ஸாரமேளநோத்தம், ஜயதி கிமபி ரூபமஸ்யதேஜ என்ற ஸுந்தேரபாஹுஸ்தவ ஸூக்தியும். “த்ருதகநகஜகிரிபரிமிலதுததிப்ரசலி லஹரிவதஹமஹமிகயா, ஸ்நபயதி ஜநமிம மபஹரதி தம: பணிசயமரதக மணி கிரணகண” என்ற ஸ்ரீரங்கராஜஸ்தவ ஸ்ரீஸூக்தியும் காணத்தக்கன.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top