(2569)

(2569)

பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதி  வாய்,

நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நின்னை விண்ணோர்

தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று

காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே.

 

பதவுரை

பேண்  நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத

அரக்கர்

ராக்ஷஸர்களுடைய

முந்நீர பெரு பதி வாய்

கடலாகிய பெரு நீராணையுடைய பெரிய மலையிடத்திலுள்ள

நீள் நகர்

பெரிய லங்காபுரியில்

நீள் எரி வைத்தருளாய்

பெரிய நெருப்பை வைத்து அளித்தருளவேணும்

என்று

என்று சொல்லிப் பிரார்த்தித்து

நின்னை

உன்னை

விண்ணோர்

தேவர்கள்

வைகல்

நாள்தோறும்

மாலையும் காலையும்

இரண்டு சக்திகளிலும்

தான் நிலம் தோய்ந்து தொழுவர்

தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்; (அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும்பொருட்டேயன்றி)

நின் மூர்த்தி

உனது வடிவத்தின்

பல் கூற்றில்

பல  அம்சங்களுள்

ஒன்று

ஒன்றையேனும்

காணலும் ஆம் கொல் என்றே

பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேந்தற்குற்றுழிப் பிரிவில் நாயகனைக் குறித்து நாயகி யிரங்கல். வேந்தற் குற்றுழிப் பிரிவாவது- ஒரு வேந்தனுக்கு ஒருவேந்தன் தோற்றுவந்து சரணமடைந்தால் அவனுக்கு உதவி செய்வதற்காகப் பிரிந்து போதல். பாரங்குச நாயகியாகிய தலைவி ஸர்வேச்வரனாகிய தலைவன் தன்னைப் பிரிந்து போனதற்குக் காரணம், ராக்ஷஸர்கட்குத் தோற்றுவந்து சரணமடைந்து வேண்டிய தேவர்களின் பிரார்ததனையாம் என்று கருதி அவர்களை பழிக்கிறான்.  “தோள் கண்டோர் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன  தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கைக் கண்டாரு மஃதே” (கம்பராமாயணம், உலாவியற்படலம்) என்றபடி உனது அழகிய திருவடிவத்தில் ஓர் அம்சத்தைக் கண்குளிரக்கண்டு அநுபவிப்பதில் அதிக ஆநந்தமாயிருக்க, தேவர்கள் அதனை ஆசைப்பட்டு வேண்டாமல்  உன்காலில் விழுந்து எப்பொழுதும் தங்கள் பகையை அழித்துத் தரவேண்டுமென்று வேண்டுவதே! என்று அவர்களைப் பழித்து இரங்கினான். அநந்ய ப்ரயோஜநரான எமக்கு ஒரு பிரயாஸமும் படவேண்டாமல் ஸேவை சாதிப்பது மாத்திரமே அருள் செய்யப் போதுமாயிருக்க, எம்மை உபேக்ஷித்து, பிரயோஜநாந்தா பார்க்காக உடம்பு நோவக் காரியஞ்செய்வதே! என்று எம்பெருமானது தன்மைக்கு நொந்துர¬த்படியுமாம். ‘நின்னை விண்ணோர் காணலுமாங் கொலென்றே தாள் நிலந்தோய்ந்து தொழுவர்?” என்றதனால். தான் நாயகனது மூர்த்தியின் பல கூறுகளையுங்காண ஆசைப்பட்டிருக்கின்றமை வெளியிடப்பட்டதாம்.

பேண்நலமில்லாவரக்கர் = தன்னுயிரைப்போலவே பிறவுயிரையுங் கருதி எல்லாப் பிராணிகளும் உய்ந்து வாழ வேண்டுமென்ற எண்ணமில்லாத ராக்ஷஸர். (பிறரை ஹிம்ஸிப்பதே தொழிலாயிருப்பவர்) என்னவுமாம். பதி என்றது இலங்காபுரிக்கு இடமான தவீபத்தை,  பெரும்பதி என்றும், நீணகர் என்றும் கூறியவற்றால், வரபலத்தால் எவராலும் அழித்திட வொண்ணாமை தோன்றும். நீளெரி வைத்தருளாய் = இராவணனுக்கு அஞ்சி அகலச் செல்லுந் தன்மையனான அக்நியை அவ்வச்சம் தணிந்து அங்கே அழியாது வளரச் செய்தருளாய் என்று பிரார்த்திக்கிறார்களாம் தேவர்கள்’ இலங்கையை நீறுபடுத்த வேணுமென்கை. இலங்கையிலுள்ள ராக்ஷஸர்களை வேரோடு அறுத்தொழிக்க வேணுமென்று பிரார்த்தித்தவாறு.

தாள் நிலந் தோய்ந்து தொழுவர் = பூலோகத்தில் வந்து திருப்பாற்கடலைச் சார்ந்து பரமனைப் பணிந்து வேண்டுவர். பூமியில் மநுஷ்ய நாற்றம் நாறுகிறதென்று மூக்கைப் புதைத்துக் கொண்டு மேலே நெடுந்தூரத்தில் நின்றுகொண்டு ஹவிர்ப்பாகங்களைப் பெற்றுப் போகுமயில்வினரான தேவர்கள் தங்களுலகத்தில் இருப்பு குலைந்ததனால் தெய்வத்தன்மை குலைந்து பூமியிலே கால் தோயவந்து நின்று தொழுவர் என்கிறது. ‘நிலந்தோய்ந்து தாள் தொழுவர்’ என மாற்றி, தரையிலே ஸாஷ்டாங்கமாகப் பணிந்து உன் திருடிகளைச் சேவிப்பவர் என்னவுமாம்.

இப்படி அவர்கள் வைகல் மாலையு|ம் தொழுவது நின் மூர்த்தி பல் கூற்றிலொன்று காலுமாங்கொலென்றே? = உன்னுடைய திருமேனியை நோவுபடுத்திக் காரியங்கொண்டு ஒழிந்து போகப் பார்க்கிறார்களே யன்றி “இலங்கை பாழளாகபவ் படைபெருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” “சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி” என்று வாயினால் தானும் சொல்வார்களோ அப்பாவிகள். அமுத மெடுத்துக் கொடுக்கக் கடல் கடைந்தருளின காலத்து ‘அமுதம் கிளர்வது எப்போதோ’ என்று கீழ்ப்புறமே நோக்கிக் கொண்டிருப்பவர்களேயன்றி  ‘மந்தரம் காட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்” (நாச்சியார் திருமொழி 9-1) என்னப்பட்ட அப்பெருமானுடைய தோளுந் தோள்மாலயுமான அழகை ஒரு நொடிப்பொழுதாகிலுங் கண்ணெடுத்துப் பார்த்திலரே பாவிகள்; அன்னவர்க்கேயோ நீ காரியஞ் செய்தருள்வது? ‘நின் பல் மூர்த்தியின் ஒரு கூறும்” என மாறியுரைக்கலாம்.

முந்நீர = குறிப்புப் பெயரெச்சம். ‘என்றே’ என்றவிடத்து ஏகாரம் வினாப்பொருள் தாய் எதிர்மறை குறிக்கும். ‘என்று அல்லர்’ என்றபடி.

 

English Translation

The celestials prayed that you raze the city of Lanka island of the merciless Rakshasa, which you did by setting your foot on Earth in mortal form.  But do they every worship you night and day, that they may be blest to see even a part of your many-splendoured beautiful frame?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top