(2534)
புலக்குண்டலப் புண்டரீகத்த போர்க்கெண்டை * வல்லியொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல்விழிக்கின்றன * கண்ணன்கையால்
மலக்குண்டமுதஞ்சு ரந்த மறிகடல் போன்றவற்றாற்
கலக்குண்டநான்று கண்டார் * எம்மை யாருங்கழறலரே
பதவுரை
| புலம் குண்டலம் |
– |
அழகிய குண்டலங்களையுடைய |
| புண்டரீகத்த |
– |
தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள |
| போர்கெண்டை |
– |
(தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டைமீன்கள் போன்ற கண்கள் |
| வல்லி ஒன்றால் விலக்குண்டு |
– |
(மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு |
| உலாகின்று |
– |
(தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக்கொண்டு |
| வேல் வழிக்கின்றன |
– |
வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன. |
| கண்ணன் |
– |
எம்பெருமானுடைய |
| கையால் |
– |
திருக்கைகளால் |
| மலக்குண்டு |
– |
கடைந்து கலக்கப்பட்டு |
| அமுதம் சுரந்த |
– |
(தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின |
| மறி கடல்போன்று |
– |
அலைகிளரப்பெற்ற கடல்போல |
| அவற்றால் கலக்குண்ட நான்று |
– |
அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது |
| கண்டார் |
– |
(அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள் |
| யாரும் |
– |
எவரும் |
| எம்மை |
– |
எம்மை |
| கழறலர் |
– |
(ஒருத்தியின் கண்பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள். |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டுக்குத் துறையாவது – தலைவன் பரங்கனுக்குக் கழற்றெதிர் மறுத்தலாம். அதாவது-தெய்வப்புணர்ச்சி புணர்ந்து பின்பு விரஹவ்யஸநத்தினால் மிக மெலிந்து கிடக்கின்ற நாயகனைக் கண்ட தோழன் ‘நாளடைவில் நீ இங்ஙனம் இளைத்து வருவதற்கு யாது காரணம்!‘ என்று கேட்க, தோழனுக்கு உண்மை யொளிக்க வொண்ணாதாகையாலே ‘நான் ஒருத்தி வலையிலே அகப்பட்டேன் காண்‘ என்று தலைமகன் உற்றது கூற, அதுகேட்ட தோழன் ‘கடல்போல் கம்பீரனான நீ ஒரு ஸ்த்ரீ நிமித்தமாக இவ்வாறாயினேனென்பது உனது பெருந்தன்மைக்குத் தகாது‘ என்று இழத்துக்கூற‘ அதற்குத் தலைமகன் ‘என்னால் காணப்பட்ட வடிவை நீ கண்டாயில்லை, கண்டவரெவரும் இவ்வாறு வன்சொற்கூறார், அப்படிப்பட்ட பரமவிலக்ஷணமான வ்யக்தியன்றோ அது‘ என்று அவனோடு மறுத்துரைத்தல். “காணிற் கழறலைகண்டிலே மென்தோட் கரும்பினையெ“ என்ற திருக்கோவையார் காண்க.
தோழனே!, அந்த நாயகியின் முகம் எப்படிப்பட்டது தெரியுமோ? அழகிய குண்டலங்களையுடையதாய்த் தாமர மலர் போன்றது. அந்த முகத்திலே கண்கள் எப்படிப்பட்டவை தெரியுமோ? தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்போர் செய்கிற இரண்டு கெண்டை மீன்கள் போலும், அப்படிப்பட்ட கண்களானவை ஒன்றின்மேல் ஒன்று பாய்ந்து நெருக்க வேணு மென்னும் மாத்ஸர்யங் கொண்டிருந்தும் மூக்காகிய ஒரு நொடியால் குறிக்கிட்டு இடையில் விலக்கப்பட்டுச் சீற்றத்தோடு தனித்தனி உலாவிக்கொண்டு வேற்படையைக் கொண்டு குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன. அப்படிப்பட்ட கண்களால் தலைவி என்னை நோக்கும்போது அவற்றால் நான் கலக்கப்பட்ட விதம் – திருமால் கடலைக் கடைந்தருளின காலத்து அலைகிளரப்பெற்ற அக்கடல் கலங்கினவித்த்தோ டொக்கும், அப்படி நான் கலக்கப்பட்டபொழுது அக்கண்களின் நிலைமையைப் பிரத்யக்ஷமாகப் பார்த்தவர் எவரேனு முளரேல் அவர் ஒருகாலும் என்னை இங்ஙனம் இடித்துரைக்கமாட்டார், “இக்கண்ணழகில் ஈடுபட்ட நீ உயிர் தொலையப்பெறாது உயிர்த்திருப்பது எவ்வளவோ விசேஷம்“ என்றே சொல்லும்படியாயிருக்கும். வேணுமாகில் அக்கண்களின் அழகை நீ ஒருகால் கண்டுபார் என்றான்போலும்.
புலக்குண்டலம் – புலப்படுதல் – காணப்படுதல், ஆகவே, விரும்பிக் காணப்படும்படி அழகிதான குண்டலம் என்றதாயிற்று. புலப்படுதல் – விளங்குதலுமாம். பொலக்குண்டலம் என்ற பாடத்துக்கு – பொன்னாலாகிய குண்டலம் என்க. குண்டலம் என்பதைக் கெண்டைக்கு அடைமொழியாக்கி. காதணி வரையில் அளாவிச் செல்லுகிற நீண்ட கண்கள் என்றுரைக்கவுமாம். குண்டலப்புண்டரீகம் – வட்ட வடிவான முகமண்டல மெனினுமாம். புண்டரீகம் போன்ற முகம் என்றும், கெண்டை போன்ற கண்கள் என்றும், கொடிபோன்ற மூக்கு என்று சொல்லவேண்டுமிடங்களில் மூன்று உபமேயங்களையுஞ் சொல்லாது உபமாநபதங்களையிட்டே சொல்லியிருக்கின்றமை காண்க, உவமையாகுபெயர்கள். செவ்வியும் அழகும் மணமுமுடைமையால் முகத்திற்குத் தாமரையுவமை.
‘வல்லியொன்றால் விலக்குண்டுலாகின்று‘ என்ற விடத்திற்கு “இரண்டு மத்தகஜம் தன்னிலே பொர உத்யோகித்து, நடுவிலே கணையமிட்டவாறே தாம் நினைத்தபடி பொரப்பெறாதொழிந்து பெருஞ் சீற்றத்தோடே ஸஞ்சரிக்குமாபோலே நின்று“ என்பது பூருவர்களின் வியாக்கியானம். நாயகியின் கண்கள் தன்மை வருத்தும்படி கூர்மையான பார்வையை யுடையனவாயிருந்தன என்பதை ‘வேல் விழிக்கின்றன‘ என்றதனால் சொல்லிற்று. அக்கொடுமை இன்னமும் மாறாதன என்பது தோன்ற ‘விழிக்கின்றன‘ என நிகழ்காலத்தாற் கூறிற்று. வேல் விழிக்கின்றன – உவமத்தொகை. எம்பெருமான் ஆழ்கடலைக்கலக்கி ஸபமான அமிர்தத்தையெடுத்துக் கொண்டாற்போல, நாயகியின் கண்களும் ஆழ்ந்த என்னெஞ்சைக் கலக்கி ஸாரமான அறிவைக் கவர்ந்த கொண்டன என்னுங் கருத்து பின்னடிகளில் உய்த்துணரத்தக்க்து. நான் பன்னிரையுரைத்துப் பயனென்ன? அக்கண்களின் வைலக்ஷண்யம் அநுபவித்தார்க்கன்றி மற்றையோர்க்கு அறியவொண்ணாது என்னுங்கருத்து ஈற்றடியில் தோன்றும். யாரும் – மிக்க வைராக்கியத்தோடு விவேகிகளாயுள்ளவர்களும் என்றபடி. ‘மறிகடல்போன்றவற்றால்‘ என்ற விடத்த, ‘போன்று அவற்றால்‘ எனப் பிரிப்பதல்லாமல் ‘போன்ற வற்றால்‘ என்று ஒரு சொல்லாகவே யெடுத்து, திருமாலால் கடையப்பட்டு அமிர்தத்தைச் சுரந்த அலையெறிகடல் போன்ற கண்களால் என்றுரைக்கவுமாம். தன் அழகைக்கண்டு கலங்கி மருண்டு நோக்கிய கண்ணுக்கு கண்ணன் கையால் கலக்குண்ட கடல் உவமை யென்றுங் கூறுவர். ‘கண்டார் கழறலர்‘ என்றதனால் அவரும் தன்னைப்போல் பித்தேறிப் போவர்கள் என்பது காட்டப்பட்டதாகும்.
இனி இப்பாட்டிற்கு ஸ்வாபதேசார்த்தமாவது, – ஆழ்வாருடைய ஞானக்கண் விளக்கத்தை யறிந்து ஈடுபட்ட பாகவதர், தங்கள் ஈடுபாட்டைக் கண்டு அதனைக் குறைத்திட வேண்டுமென்று நியமித்துக் கூறுகிற தம் சுற்றத்தாரை நோக்கி மறுத்துச் சொல்லும் வார்த்தையாம். முக்திக்குக் காரணமான முதற்பொருளை யறிவதற்கு உபாயம் மூன்று, அவை – கேள்வி, சிந்தனை, காட்சி என்பன. அவற்றுள், கேள்வியாவது உபதேச மொழிகளை அநுபவமுடைய ஆசார்யர் பக்கல் கேட்டல் சிந்தனையாவது அவ்வுபதேசமொழிப் பொருளைப் பிரமாணங்களாலும் யுக்தியாலும் உள்ளத்தில் தெளிய ரோய்தல். காட்சியாவது இவ்வாற்றால் முதற்பொருளை ஐயந்திரிபறத் தெளிதல். ஸ்வாபதேசத்தில் ஆழ்வாரது கண்ணாகிய ஞானமானது முறையே இம்மூன்று உபாயங்களோடும் அமைந்திருத்தல் இப்பாட்டின் முதல் வாக்கியத்தால் விளங்கும் முன்னம் ‘புலக் குண்டலம்‘ என்று செவியணியைக் கூறியதனால் அவ்வுபாயங்களுள் முக்கியதான செவிக்கணியாகிய கேள்வியைக் குறித்தபடி. அதன்பின் ‘புண்டரீகம்‘ என்றது ஹ்ருதய கமலத்தைக் குறித்ததாய், கேள்வியின் பின் உள்ளம் நிகழ்த்துலாகிய சிந்தனையை ஸூசிப்பித்தபடி. ‘போர்க்கெண்டை‘ என்றத – அங்ஙனம் சிந்தனை செய்யும்பொழுது பூர்வபக்ஷ ஸித்தாந்த யுக்திகளால் ஒன்றுக்கொன்று விரோத்த்தை யுண்டாக்கிப் பண்ணும் ஆராய்ச்சியைக் காட்டும். ‘வல்லியொன்றால் விலக்குண்டுலாகின்று‘ என்றது – மத்யஸ்தமான ஸித்தாந்த யுக்தியால் அவ்விரோதம் தணிந்தமையைக் காட்டும். ‘வேல்விழிக்கின்றன‘ என்றதனால் இங்ஙனம் கேள்வி சிந்தனைகளால் சலநமொழிந்து ஒரு நிலை நின்றுற ஞானம் நுண்மையும் நெடுமையுமுடையதாய் எம்பெருமானைத் தரிசித்தமை தோன்றும். கண்ணன் கையாற் கலக்கப்பட்டு அமுதுசுரந்த அலைகடல் போலச் சபல சித்தரான யாம் இப்படிப்பட்ட ஆழ்வாரது ஞான விசேஷத்தால் பரவசப்பட்டு இனிய பக்தியைச் சுரந்து நிலைமாறி பொழுது அவ்வாழ்வராது ஞான நிலையையறிந்தவரெவரும் எம்மை இங்ஙனங் கூறார் என்பது பிந்தின வாக்யத்தின் உட்கருத்து ‘போன்றவற்றால்‘ என்று ஒரு சொல்லாக எடுக்கும் போது, கண்ணன் கையால் கலக்கப்பட்டு அமுதுசுரந்த அலைகடல்போல எம்பெருமான் வசப்பட்டுத்தன் வசமிழந்து பக்தியைச் சொரிகிற அதி விசாலமான அவரது ஞான விசேஷத்தால் என்று உள்ளுரை காண்க. ‘கண்டார் எம்மை யாரும் கழறலர்‘ என்கையாலே, புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும் தொழியப் பிறரை நியமிக்கமாட்டாரென்பதுஞ் சொல்லிற்றாயிற்று. “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே, தேவுமற்ற்றியேன் குரு கூர் நம்பி, பரவினின்னிசை பாடித்திரிவனே‘ என்று மதுரகவியாழ்வார் போல நம் ஆழ்வார் விஷயத்தில் ஈடுபட்டவர் எம்பெருமானையும் விரும்புதல் அரிது என்க.
