(2533)

(2533)

வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால்,

உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழிஓர் தண்தென்றல்வந்

தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின் தேன்

புயலுடை நீர்மையி னால் தடவிற்றென் புலன்கலனே.

பதவுரை

வியல்

விசாலமான
இடம்

உலகங்களை
உண்ட

திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார்

பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த

(எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால்

சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று

உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தம்

வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம்

(இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி

வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து

ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர்

அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன்

அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனியதேன்துளிகளை
புயலுடை நீர்மையினால்

மழைதுளித்தல் போலத் துளிக்குந்தன்மை யுடையதாய்
என்

என்னுடைய
புலன்

அவயவங்களிலும்
கலன்

ஆபரணங்களிலும்
தடவிற்று

ஸ்பர்சித்தது

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகன் இரவிலே வந்து கலந்தமையை நாயகி தன் தோழிக்குக் கூறுதல் ஆற்றாமைக்குக் கலங்கியுரைத்த தோழியைக் குறித்து தலைவி இரவிடத்துத் தலைமையைத் தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரம்’ என்ற அழகிய மணவாளசீயருரை வாக்கியங்காண்க. தென்றல் மேல் வைத்துக் கூறுதலாவது- நாயகன் அன்போடு வந்து கலந்த்தை வெளிப்படையாகக் கூறுதற்கு வெட்கப்பட்டுத் தென்றல் மேல்வைத்துக் கூறுதலாம்.

எனது விரஹவ்யஸநத்தை அநுஸந்தித்து வருந்தா தோழீ! நாயகனது அருளால் யான் உஜ்ஜிவிக்க ஓர் அவகாசம் பெற்று உஜ்ஜீவித்தேன், இனி வாடை முதலியவற்றிற்கு அஞ்ச வேண்டுவதில்லை, ஏனென்னில், – ஒரு குளிர்ந்த தென்றற்காற்று அயலறியாமல் ஏகாந்தமாக நாயகனது திருத்துழாயின் தேனைத் துளித்துக்கொண்டு எனது அவயவங்களிலும் அபரணங்களிலும் பட்டு ஆற்றாமை தீர்த்ததுகாண் என்றாள். பிரிந்த காலத்தில் வெவ்விதாய் வருந்திய தென்றல் குளிர்ந்த்தாம்படி தலைமகன் வந்து தன் திருத்துழாய் மாலையின் தேன் என் அவயவங்களிலும் ஆபரணங்களிலும் படும்படி தழுவியணைத்தன்ன் என்றவாறு.

“வியலிடமுண்ட பிரானார் விடுத்த திருவருளால்“ என்றதன் உட்கருத்தாவது – துக்கஸாகரத்தில் மூழ்கித் தவிக்கின்ற என்னை இங்ஙனம் அவர் காத்த்து பிரளயக்கடலில் மூழ்குகிற உலகங்களைத் தம் வயிற்றில் வைத்துக் குறிக்கொண்டு காத்தருளியதுபோலு மென்பதாம். உய்ந்தம் – உய்ந்தனம் என்றபடி, அன் சாரியை பெறாது வந்த தன்மைப்பன்மை யிறந்தகால வினைமுற்று. அஞ்சலம் – தன்மைப்பன்மை யெதிர்மறைமுற்று. அஞ்சல் அம் தோழி எனப்பிரித்து, அழகிய தோழியே! எனது ஆற்றாமைக்காக்க் கலங்காதே என்பதாகவு முரைக்கலாம், அப்பொழுது, அஞ்சல் – எதிர்மறை யொருமையேவல். உலகத்தில் ஸாதாரணமாகக் காணப்படுகிற தென்றலைப் போல்ல்லாமல் ஒப்பற்றதாய்த் தன் வருகை மாத்திரத்தால் எமது ஆற்றாமை யெல்லாந் தீரும்படி மிக்க குளிர்ச்சியை யுடையதாய்ப் புதுமையாக வொன்று வந்த்தென்பாள் ‘ஓர் தண்தென்றல் வந்து‘ என்றாள். இதுவரையில தென்றலுக்கு வருந்திக்கிடந்த நாயகி இப்போது தென்றல் வாவை உகந்து உரைத்தமையால், நாயகனுடைய வாவைச் சொன்னாளென்று தோழி அறிந்து, ‘இக் களவொழுக்கத்தை அயலாரறிந்தால் பெரும்பழிப்பாகுமே‘ என்று அஞ்சக்கூடுமே, அங்ஙனம் அஞ்சாமைக்காக ‘அயலிடையாருமறிந்திலர்‘ என்கிறாள்‘ என்கிறாள். மழையின் தன்மையினால் என்றது – மழை பெய்யுமாபோலே என்றபடி. கலன் – அணிகலம். ‘பொலன் கலன்‘ என்று பாடமாகில், பொன்னாலாகிய அணிகலமென்று பொருளாம். பொலன் – பொன் என்பதன் திரிபான பொலம் என்பதன் இறுதிப்போலி. ‘தடவிற்றென்புலன் கலனே‘ என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் காண்மின், – “இந்திரியங்கள் விடாய் தீரவும் ஆபரணங்கழலாதபடியும் தடவிற்றுப் போலேகாணும்.

விடுத்த – வரவிட்ட. தோழி – அண்மைவிளி, அறிந்திலர் – எதிர்மறை முற்றெச்சம்.

ஆழ்வார் எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறாமல் வருத்துமளவில், அவ்வருத்தந்தீரப் பெருமான் ஒரு கால் அருகில்வந்து ஸேவை தந்து இவரைத் தான் சேர்த்துக் கொள்ளுந்தன்மையை வெளியிட, அதனால் ஆழ்வார் துன்பந்தணிந்து, முன்புள்ள ஆற்றாமையைக் கண்ட கலங்கின அன்பரை நோக்கிக் கூறும் வார்த்தை இதற்கு உள்ளுறைபொருள். ஆபத்துக்கு உதவுமியல்வினனான எம்பெருமானது ஒப்புயர்வற்ற வரம்பிலாத திருவருளால் ஓர் அவகாசம் கிடைத்து வாழ்வுபெற்றோம், இனி லௌகிக பதார்த்தங்களுக்கு அஞ்சவேண்டுவதில்லை, உயிர்க்குயிராகிய அப்பெருமான் பிறரொருவர்க்கும் புலனாகாமல் வந்து தனது போக்யதையை வெளிகாட்டி எமது துயரமெல்லாந் தீரும்படி எமது உறுப்புக்களையும் ஞானம் முதலிய குணங்களாகிய அலங்காரங்களையும் விரும்பியாட்கொண்டான் என்று அருளிச்செய்து அன்பரை ஆற்றியவாறு.

English Translation

Sister! Have no fear.  By the grace of the lord who swallowed the Earth, we have found a refuge and redemption. A cool breeze with the heavenly touch of clouds and laden with the nectar of Tulasi caressed my limbs and my sense, Nobody else knew about this.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top