(2535)
கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா
அழறலர் தாமரைக் கண்ணன்என் னோவிங் களக்கின்றதே?
பதவுரை
| ஒன்றே | ஒரு திருவடியிடமே |
| ஆயிற்று | பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது; மற்றொரு திருவடி |
| முழுதாயிற்று | (பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய் |
| உழறு அலர் | உலகுங்செல்லவல்ல பரந்த |
| ஞானத்து சுடர் ஆய் விளக்காய் | ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய் |
| உயர்ந்தோரை இல்ல | (தன்னிலும்) மேற்பட்டவரையுடையவனல்லாதவனும் |
| நிழல் தர | நிழலைச் செய்யும்படி |
| எல்லா விசும்பும் | ஆகாசாவகாம் முழுவதிலும் |
| நிறைந்தது | வியாபித்தது |
| நீண்ட அண்டத்து | அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும் |
| அழறு அவர் தாமரைக் கண்ணன் | சேற்றில் மலர்ந்த செவ்விமாறாத செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனுமான திருமால். |
| இங்கு அளக்கின்றது என்னோ | இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ? |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டில் த்ரிவிக்ரமாவதார வரலாற்றைப் பற்றின விஷயம் ப்ரஸ்தாபிக்கப்பட்டுள்ளதானது எம்பெருமானுடைய ஸர்வ சக்தித்வத்தைக் கூறியவாறு. ‘நாயகன் என்னோடு ஸம்ச்லேஷிக்க வரக்காணவில்லையே; என்ன பிரதிபந்தக முள்ளதோ அறியேன்; பிரதிபந்தங்களைக் பரிஹரித்துக் கொண்டுவந்து சேர்தற்குரிய ஆற்றல் அவர்க்கு இல்லைபோலும்! என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த தலைவியை நோக்கித் தோழியானவன் ‘நங்காய்! இப்படியோ நீ நினைக்கிறாய்? உன்னுடைய நாயகனான ஈச்வரனுக்குச் செய்யவரிய தொழிலுமொன்றுண்டோ? எல்லா வல்லவனன்றோ அவன்’ என்று அவனுடைய வல்லமைகளுள் சிறந்ததான ஒன்றை யெடுத்துரைக்கும் முகத்தால் ‘இபபடி ஸர்வசக்தியுக்தனான நாயகன் நம்மோடு கலப்பதற்கு இடையூறாகவுள்ளவற்றைப் பரிஹரித்து விரைவில் வந்திடுவதென்று நீ ஆறியிருகுக வேணுமே யொழிய வல்லவனல்லனென்று கருதிக் கலங்குவது தகுதியன்றென்று ஆற்றுகிறாளாயிற்று. ஆகவே, தோழி தலைவன் பெருமையை யுரைத்துத் தலைவியை ஆற்றல் இது.
‘தாமரைக் கண்ணன் என்னோவிங் களக்கின்றதே!” என்றதற்கு இரண்டு வகையான கருத்து உண்டு;- ஓரடியைப் பூமி முழுவதும் பரப்பி வைத்து மற்றோரடியை மேலுலக முழுவதும் பரப்பிவைத்து இங்ஙனம் உலகங்களெல்லாவற்றையும் அளந்திட்டானே! இஃது என்ன ஆச்சரியம்! என்று வியந்து கூறுவதாக ஒரு கருத்து. எம்பெருமான் உலகளந்தானென்று சொல்லுகிறார்களே, இது எப்படி பொருந்தும்? ஒருவன் தான் நின்ற இடந்தவிர மற்றோரிடத்தில் மாறிக் காலிட்டாலன்றோ அளந்ததாகச் சொல்லலாம்; நிலமும் விசும்பும் இரண்டு திருதிட்டாதென்று எங்ஙனே சொல்லலாம்? என்பதாக மற்றொரு கருத்து. இங்குப் பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானக்காண்மின்:- ‘அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்; நின்ற நிலையிலே நின்றாரை அளந்தாரென்ன வொண்ணாதிறே; அடிமாறியிடிலிறே அளந்ததாவது, இவன் இங்கு அளந்தானாக ஒன்றுங்காண்கிறிலோமீ!” என்று.
நீண்ட வண்டத்து என்று தொடங்கி மூன்று வாக்கியங்கள் எம்பெருமானைக் குறிப்பன; நீண்ட வண்டத்திலுள்ளவன், உழறலர் ஞானச் சுடர்விளக்காயுயர்ந் தோரையில்லாதவன் அழறலர் தாமரைக்கண்ணனாயிருப்பவன் என்க.
அழறலர் தாமரைக்கண்ணன்= தாமரைக்குப் பங்கஜம் என்று வடநூலார் பெயர் கூறுவர், சேற்றில் முளைப்பது என்று பொருள்; இங்கும் அங்ஙனமே ‘அழறலா தாமரை’ எனப்பட்டது. அழறு- சேறு. அளறு என்பதுபோல அழறு என்பதும் ஒரு தனிமொழியே யென்றும். ளகரத்துக்கு ழகரம் போலியாக வந்ததன்று என்றும் அறிக. தாமரைப்பூ நீர் நிலையை விட்டு நீங்கினால் வாடிப்போய் விடுமாதலால் நீர்நிலையிலேயே அலர்ந்து சொல்வி குன்றாதிருக்கிற தாமரைபோன்ற திருக்கண்களையுடையவன் என்றவாறு.
கழல் – தலம், சுழறவம், உழறுதல் எனினும் – உழலுதல் எனினும் ஒக்கும்.
எம்பெருமான் தம்மைச் சேர்த்துக் கொள்ளாமையால் தளர்ந்த ஆழ்வாரை அன்பர்கள் அவனுடைய அபார சக்தியை யெடுத்துக் காட்டி ஆற்றுதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருள். த்ரிவிக்ரமாவதார வியாஜத்தால் எல்லா வுலகங்களையும் தனக்கேயாக்கிக்கொண்ட ஸர்வேச்வரன் அதுபோலவே உம்மையும் தன் திருவடிகளிற் சேர்த்துக்கொண்டருளத் தட்டில்லையென்று அவனடைய ஸம்பந்த்தையும் சக்தி விசேஷத்தையும் விளக்கி ஆற்றாமையைத் தணித்தனரென்க.
English Translation
His one sole covered the Earth. His one foot raised into the sky shadowed the worlds below and filled the space. A light of knowledge-bliss spread everywhere in the Universe. The beautiful-as-the-swamp-lotus Krishna is one without a superior, wonder what he has in store for us here!
