(2490)
தனிவளர் செங்கோல் நடாவு, தழல்வாய் அரசவியப்
பனிவளர் செங்கோ லிருள்வீற் றிருந்தது, பார்முழுதும்
துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந்
தினிவளை காப்பவ ரார்,எனை யூழிக ளீர்வனவே.
பதவுரை
| தனி வளர் |
– |
ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள |
| செங்கோல் |
– |
(தனது ஒளியாகிய) அரசாட்சியை |
| ஈடாவு |
– |
(எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற |
| தழாய்வாய் அரசு |
– |
வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன் |
| அவிய |
– |
ஒழிய |
| பனி வளர் செங்கோல் இருள் |
– |
(ஜனங்களுக்கு) நடுக்கத்தைச் செய்கின்ற ஆட்சியையுடைய இருளாகிய சிற்றரசு |
| பார் முழுவதும் |
– |
பூமி முழுவதும் |
| வீற்றிந்தது |
– |
அரசு வீற்றிருந்தது; |
| இனி |
– |
இனிமேல், |
| நுனி வளர் காதல் |
– |
துன்பத்தை அதிகப்படுத்துகிற என் ஆசைக்கு இலக்கான |
| துழாயை |
– |
(தலைவனது) திருத்துழாய் மாலையை |
| துழாவு |
– |
அளைந்து வருகிற |
| தண் வாடை |
– |
குளிர்ந்த காற்றை |
| தடிந்து |
– |
தண்டித்து (அழித்து) |
| வளை |
– |
(பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத்தொடங்கின) வளைகளை |
| காப்பவர் |
– |
கழலவொட்டாது தடுத்துப் பாதுகாப்பவர். |
| ஆர் |
– |
யாருளர்? (எவருமில்லை.) |
| ஊழிகள் |
– |
(கற்பகவடிவங்கொண்ட இராத்திரிகள் |
| எனை |
– |
என்னை |
| ஈர்வன |
– |
விளக்குந்தன்மையுடையன. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நாயகனைப் பிரிந்து ஆற்றமாட்டாத நாயகி இருளுக்கும் வாடைக்கும் கஷ்டப்பட்டுக் கூறும் பாசுரம் இது. செவிவாய் கண் முதலிய இந்திரியங்களானவை பகலில் பலபல வேறுவகைப்பட்ட பொருள்களை நாடியிருக்கக் கூடுமாதலால் நாயகனுடைய பிரிவை ஒருவிதமாக ஆற்றி நிற்கலாம்; இரவில் அப்படியல்லாமல் எல்லாப் பொருளும் அடங்க, இந்திரியங்களோடு மனம் நாயகனாகிற ஒரு பொருளையே நாடுதலாலும் கலவிக்கு உரிய காலமாதலாலும் அவ்விராப்பொழுதில் ஆற்றமாட்டாது வருந்துதல் இயல்பு. இப்பராங்குசநாயகியும் அங்ஙனே வருந்துகிறானென்க.
உலகில், பேரரசன் செங்கோல் செலுத்தா நிற்குமளவில் சிற்றரசர்கள் தலையெடுக்க மாட்டார்கள்; பேரரசன் தலைசாய்ந்தால் உடனே சிற்றரசர்கள் தலைவிரித்தாடத் தொடங்குவார்கள்; அதுபோல, தன் ஒளியிலே சந்திரன் நக்ஷத்திரம் விளக்கு முதலிய எல்லாவொளிகளும் இருந்தவிடந் தெரியாதபடி மறைந்திடுமாறு தனிச் செங்கோல் செலுத்துமவனான ஸூரியனாகிய பேரரசன் தலை சாய்த்தவாறே இருளாகிய சிற்றரசு தான் தலைவிரித்தாடத் தொடங்கிற்று என்கிறான் முன்னடிகளால். ஸூர்யனுடைய உஷ்ணகிரகமும் அரசனுடைய பிரதாபமும் ஆகிய இரண்டு ‘தழல்வாய்’ என்றதனால் பெறப்படும். ஸூர்யாஸ்தமநத்தைச் சொல்ல வேண்டில் ‘சூரியன் மறைய’ என்னலாமே; அங்ஙனஞ் சொல்லாது ‘அவிய; என்றது- மீண்டும் ஸூர்யோதயம் ஆகக்காணாமல் இராப்பொழுதே நெடுகுவதாகத் தோன்றுதலால் ஸூர்யன் அழிந்தான் போலும் எனக்கருதி.
எல்லாரையும் மகிழ்வித்து அரசாட்சி புரிவதைச் செங்கோல் செலுத்தலாகச் சொல்வதுண்டு; வருத்தத்தை வளர்க்கிற நிலைமையையுடைய இருளின் ஆட்சியை செங்கோல் என்னலாமோ? எனின்; விபரீதலக்ஷணையாகச் சொல்கிற தென்க. பிரிந்தாரை வருத்துவதாகிற கொலைத்தொழிலே இருளின் செங்கோல் என்கிறது. பார்முழுதும் வீற்றிருந்தது = உலகமுழுவதையும் தனக்குள்ளேயாக்கிக்கொண்டு, தன்னை யெதிர்ப்பாரில்லாமையால் தன் பேருமை தோற்றும்படி யிருக்கின்றதென்கை. ஸூர்யன் அரசாண்ட இடம் முழுவதும் இருளுக்கு வீற்றிருப்பதற்கு மாத்திரமே இடமாயிற்று’ என்று விஷோர்த்தம் கூறுதலுமுண்டு. ஆதித்யன் எப்போது அஸ்தமிக்கப் போகிறானென்று எதிர்பார்த்திருக்க இருள் அவன் அஸ்தமித்தவாறே நாடெங்கும் பரவி விரஹிகளை கலியத் தொடங்கிற்று என்றாயிற்று.
இப்படி இருள் ஒருபுறம் கொலை செய்யா நிற்க, மற்றொரு புறத்திலே திருத்துழாய்க்காற்று வந்துவீசிக் கொலைசெய்யா நின்றதே!’ இதனைத் தண்டித்து நம்மை நோக்கிக்கொள்வது எங்ஙனேயே!’ என்று வருந்துகிறான் பின்னடிகளில்.
முன்பு கூடியிருந்த காலத்து இத் திருத்துழாய்க்காற்று குளிச்சியாக வீசி இன்பஞ்செய்த நிலையைக் கருதித் ‘தண்வாடை’ என்றது. அன்றி, விபரீதக்ஷணையால் வெவ்வாடையைத் தண்வாடையெனக்கூறி வெறுக்கின்றாளென்றுமாம். வடதிசையிலிருந்து வந்து வீசுங் காற்றுக்கு வாடையென்று பெயரிருந்தாலும், சிப்பு பெயர் பொதுப்பொருளை யுணர்த்தும் முறைமையில் இங்கு வாடையென்னுஞ்சொல் காற்றுமாத்திரத்தை உணர்த்துவதாயிற்று. தடிந்து – வெட்டி; காற்றைவெட்டுதல் கூடுமோ? உருவமில்லாத பொருளன்றோ காற்று எனின்; அது செய்யுந்துயர் பொறுக்க வொண்ணாமையால் கோபந்தோற்றச் சொல்லுகிற வார்த்தையென்க. இனி- காப்பவனான நாயகனும் பிரிந்துபோய், ஹிம்ஸிப்பதான இராப்பொழுதும் வந்த பின்பு என்றபடி. வளைகாப்பவரார்? = விரஹத்தாலே ஈர்க்குப்போல மெலிந்துபோன உடம்பைப் பழையபடியே புஷ்டியாகச் செய்ய வல்லாரார்? என்கை. உடல் இளைத்துப்போனால் கைவளைகள் கழன்றொழியும்; உடல் இளைப்பதற்குக் காரணம் நாயகனுடைய பிரிவு. அப்பிரிவு நீங்கிப் புணர்ச்சியுண்டானால் உடம்பு நிலைநின்று வளைகளும் தங்கும்: ஆகவே ‘வளைகாப்பராவர்?’ என்றது- புணர்ச்சியையுண்டாக்கித் தருவாரார்? என்றபடி.
எனையூழிகளீர்பவன = ‘என்னை’ என்பது ‘எனை’ எனத் தொக்கியிருப்பதாகக் கொண்டு உரைக்கப்பட்டது. அன்றியே, ‘எத்தனை’ என்பதன் மரூஉவாகக் கொண்டு எத்தனை கற்பங்கள் வகுத்தவன? என்பதாகவும் கொள்ளலாம். ஓரிரவையே பல கற்பங்களாகக் குறித்தவாறு. ஈற்றடியில் ‘எனவளைகாப்பவரார்?’ என்றும் பாடமுண்டாம். அப்போது, என- என்னுடைய என்றபடி.
ஸர்வேச்வரனுடைய பிரிவுக்கு ஆற்றமாட்டாமல் அறிவுகுலைந்து மோஹம் தலையெடுத்துத் தளர்ச்சிபிறந்து தஞ்சம் தேடும்படியான தமது நிலைமையை ஆழ்வார் அருளிச் செய்தல் இதற்கு வைரபதேசப் பொருளாம். (தனிவளர்செங்கோல் நடாவு, தழல்வா யாசு அலிய) இருளையொழிப்பதும் வெவ்வியதும் தடையற்றதும் ஒப்பிலாததுமான கதிரவனொளிபோல, மதாந்தரங்கள் யொழிக்க வல்லதும் அதனால் பிரதாபம் மிக்கதும் எம்பெருமான் கட்டளையை எங்கும் தடையற நடத்துவதும் அதனால் ஒப்பில்லாததுமான விவேகமும் குலையும்படியாக (பணிவளர் செங்கோலியருள் வீற்றிருந்தது.) வருத்தத்தை வளரச்செய்கிற பெருமையையுடையமோஹாந்தகாரமானது பரவிவிட்டது. இனிமேல் (துணிவளர் காதல் துழாயைத் துழாவுதண்வாடை தடிந்து) பிரிந்த நிலையில் துன்பமாய் முடிவதான எனது அன்புமிகுதிக்கு விஷயமான எம்பெருமானுடைய போக்யதையை நினைப்பூட்டி விரைவை யுண்டாக்கிக் கொண்டு நடக்கிற இவ்வுலகத்துப்பொருளை விலக்கி. (வளைகாப்பாவர் ஆர்!) மறந்தும் புறந்தொழாதபடி எனக்குள்ள அடிமைக் குணத்தை நீங்காமற் பாதுகாப்பவர் ஆர்? வலையென்பது, வாழ்கிற பெண்களுக்கு மங்கலவாய்க்கைக்கு உரிய அறிகுறியாதலால் அது ஸ்வாபதேசத்தில் எம்பெருமானது ஸம்பந்தத்துக்கு அறிகுறியான அடிமையை உணர்த்தும். (எணையூழிகளீர்வனவே.) ‘கூவிக்கொள்ளுங்கால் மின்னங்குறுகாதோ?’) என்று விரைகின்ற எனக்கு இக்காலவிளம்பம் அஸஹ்யமா யிருக்கின்ற தென்றவாறு…
English Translation
The peerless golden rule of the fiery orb-and-screptre-Sun has ended. All the world over, fiefdomes of darkness have sprung up. Who can punish the anarchy of the cool breeze wafting with the destructive fragrance of the lord’s adorable Tulase? Who can protect the law, who can protect our bangles? Alas, how many aeons will this last?
