(2489)

(2489)

பேர்கின்றது மணிமாமை பிறங்கியள்ளற்பயலை *

ஊர்கின்றது கங்கு லூழிகளே * இதெல்லா மினவே

ஈர்கின்ற சக்கரத்தெம்பெருமான் கண்ணன் தண்ணந்துழாய்

சார்கின்ற நன்னெஞ்சினார் * தந்து போன தனிவளமே.

 

பதவுரை

மணி மாமை

(எனது) அழகிய நிறமானது

பேர்கின்றது

விகாரப்படா நின்றது;

பிறங்கி அள்ளல் பயலை

விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது

ஊர்கின்றது

மேன்மேல் பரவாநின்றது;

கங்குல்

இராப்போது

ஊழிகளே

அனேக கற்பங்களாக நின்றது;

இது எல்லாம் இனவே

இத்தன்மையுள்ள இவையெல்லாம்

ஈர்க்கின்ற சக்கரத்து

(கொடியோரை) அறத்திடுகிற திருவாழியையுடை

எம்பெருமான் கண்ணன்

எனது தலைவனான கண்ணபிரானது

தண் அம் துழாய்

குளிர்ந்த அழகிய திருத்துழாயிலே

சார்கின்ற

ஆசைப்பட்டுச் செல்கின்ற

நல் நெஞ்சினார்

(எனது) நல்லமணம்

தந்துபோன

(தான் செல்கிறபோது எனக்குக்) கொடுத்துவிட்டுச் சென்ற

தனி வளமே

ஒப்பற்ற செல்வங்களாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகன் பிரியப்பெற்ற நாயகி தன் ஆற்றமைகூறி நெஞ்சொடு கலாய்த்தல். அன்றிறே, பரங்கியை நோக்கித் தலைமகள் தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாளாகவுமாம். மாதர்க்கு இளமைப் பருவத்திலுள்ள ஒளிபெற்ற நியம் மாமை எனப்படும். தனது மேனிநிறத்தைத் தானே ‘மணிமாமை’ என்று புக்ந்து கூறுதல் தற்புகழ்ச்சி யாகாதோ வெனின், ஆகாது; தன்நிறத்தை அவன் புகழும் விதத்தாலே சொல்லுவதென்க. நாயகனைப் பிரிந்ததனாலே என்னுடைய மேனி நிறம் மாறிப்போயிற்றென்றவாறு.

பிறங்கி அள்ளல் பயலை ஊர்கின்றது = பசலைநிறமானது அடர்ந்துகொண்டு மேன்மேலும் பரவத் தொடங்கிற்று என்கை. (பசலைநிறத்தைப் பற்றி கீழ்ப்பாட்டினுரையிற் காண்க.) ‘அள்ளல் பயலை’ என்று பசலை வண்டலிடுந் தன்மையைக் குறிக்குமென்றுங் கூறுவர். கங்குல் ஊழிகளே- நாயகனோடு கூடியிருக்குங் காலத்தில் ஒரு நொடிப் பொழுதாகக் கழிகிற இரவு பிரிவுகாலத்தில் கல்பகோடிகாலமாக நீள்கின்ற படியைக் கூறியவாறு. ‘இதெல்லா மினலே, என்றதனால், அன்றில் தென்றல் திங்கள் கடல் குயில் முதலியவை வருத்துவனவாதலுங் கொள்ளப்படும்.

ஈர்கின்றசக்கரத் தெம்பெருமான்- ஆச்ரித விரோதிகளான அஸுராக்ஷஸர்களை அறுத்திடுகிற திருவாழியையுடைய பெருமான் எம்பெருமான் என்றும், கையுந்திருவாழியுஞ்சேர்ந்த சேர்த்தியினாலாகிய அழகைக்காட்டி என்னை வருத்துகின்ற பெருமான் என்றும் உரைக்கலாம். “பிரதிகூலரை ஆண்மையாலே கொல்லும்; அநுகூலரை அழகாலே கொல்லும்” என்ற பெரியவாச்சான்பின்னை வியாக்கியான வாக்கியத்தின் சுவை காண்க.

கண்ணன் துழாய் சார்கின்ற நெஞ்சு = ‘அவனுடைய ஸம்பந்தம் பெற்ற திருத்துழாயோடேயாவது நமக்கு ஸம்பந்தம் கிடைத்ததே!’ என்று! இதனை ஒரு பெரும்பேறாகக் கருதி  ஈடுபட்ட நெஞ்சு என்க. ‘சார்கின்ற’ என்றதனால்- கிடைக்கும் கிடையாது என்று ஆராயாது பதறிவிழுந்தமை தோன்றும். நல்நெஞ்சு = உடையவளாகிய தன்னை வருந்தவிட்டு நாயகனிடஞ்சென்ற மிக்க வேட்கையையுடைய நெஞ்சு என்றவாறு, அஃறிணைப் பொருளாகவும் ஒருமைப் பாலாகவுமுள்ள நெஞ்சை ‘நெஞ்சினர்’ என்று உயர்திணையாகவும் பன்மைப்பாலாகவும் கூறியது கோபத்தினாலென்க: திணைபால் வழுவமைதி; மகிழ்ச்சியினால் சிறப்பித்துச் சொல்லுகிறரென்னவுமாம்.

தந்துபோன தனிவளமே = மாமையிழந்தது முதலியவற்றை ‘வளம்’ என்றது விபரீத லக்ஷணை. ஒரு ஏழையை நோக்கி ‘அவர் பெரிய பணக்காரர்’ என்றால் அஃது எதிர்மறையிலக்கணையால் வறுமையைக் காட்டுதல் போல, மேனிநிறம் மாறப்பெற்றதும் பசலை நிறம் படரப்பெற்றும் இரவு நீட்டிக்கப் பெற்றும் வருந்திக்கிடப்பதே நான் பெற்ற பாக்கியம் என்று உலகவழக்கு நடையில் உரைக்கின்றபடி, இப்படிப்பட்ட செல்வம் எனக்கன்றி வேறு யார்க்கும் கிடைப்பரிது என்பது தோன்றத் ‘தனிவளம்’ எனப்பட்டது.

ஆழ்வார்தாம் தமது அகக்கண்ணால் எம்பெருமானைக் கண்டு வைத்தும் சேரப்பெறாது நெஞ்சிழந்து தனித்து வருந்துபவராய்த் தமது ஆற்றாமையைக் கூறுதல் இதற்கு உள்ளுறை பொருளாம். எம்பெருமான் கையுந் திருவாழியுமாய்த் தோளுந் தோள்மாலையுமாய் ஸேவைஸாதிக்கிற நிலைமையிலே ஸேவிக்கப் பெறவேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையாலே ‘ஒரு பகலாயிரமூழியாலோ’ என்று வருந்தவும், ‘சங்கவில்வான் தண்டு சக்கரக்கையற்கு… கொங்கலர் தண்ணத்துழாய் முடியரனுக்கு, என் மங்கையிழந்தது மாமைநிறமே’ என்று கிலேசிக்கவும் நேர்ந்தது என்றாராயிற்று.

 

English Translation

My colour has faded. A sickening paleness has spread over me, this night stretches into an aeon. My heart went after the cool Tulasi wreath of my lord krishna who wields a sharp discus, Alas! This is the big fortune he left me!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top