(2491)

(2491)

ஈர்வன வேலுமஞ் சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ

பேர்வன வோவல்ல தெய்வநல் வேள்கணை, பேரொளியே

சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம் மான்விசும்பூர்

தேர்வன, தெய்வமன் னீரகண் ணோவிச் செழுங்கயலே.

பதவுரை

ஈர்வனவேலும்

(பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும்

அழகிய சேல்மீன்கள்போலவும் உள்ளனவான
இவை

இவை
உயிர்மேல் மிளிர்ந்து

(எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல

(அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம்

தெய்வத்தன்மையையுடைய
நல்

அழகிய
வேள்

மன்மதனுடைய
கணை

அம்புகளினுடைய
பேர் ஒளிய

சிறந்த ஒளியையே
சோர்வன

தாம வெளியிடுவன
நீலம்

நீலமணியினுடைய
சுடர்

ஒளியை
விடு

வீசுகின்ற
மேனி

திருமேனியையுடையனான
அம்மான்

எம்பெருமானது
ஊர் விசும்பு

திருநாடாகிய பரமபத்தை
தேர்வன

(தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல்

கொழுதத் கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ

(மோஹினியென்னும்) பெண் தெய்வத்தையொத்த உமது
கண்ணோ

கண்களோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகன் நாயகியினது நன்மையைக் கொண்டாடிக் கூறுதலாகி ‘நலம்பாராட்டு’ என்பது இப்பாட்டுக்குத் துறையென்றறிக. நாயகனாவன் நாயகியோடே புணர்ந்து பிரிகிற மையத்திலே மூன்று காரணங்களினால் நாயகியின் அழகைக்கொண்டாடுவது வழக்கம்; உண்மையில் அவளழகில் தான் ஈடுபட்டிருப்பது முதற் காரணம்; பிரிந்த காலத்தில் இக் கொண்டாட்டம் தன்னுடைய தரிப்புக்கு உறுப்பாயிருக்குமென்பது இரண்டாவது காரணம்; ‘இவர் நம்மைப் பிரிந்து நெடும்போது உயிர் தரிக்கமாட்டார்; கடுக வந்திடுவர்’ என்று நாயகி தெரிந்துகொண்டு ஆறியிருக்க வேணுமென்பது மூன்றாங்காரணம்.

நாயகியின் கண்ணழகி லீடுபட்டுப் பேசும் பாசுரமிது. கூர்மையான நுனியாலே எதிரிகளை பழிக்கும் வேல்போலக் கூர்மையான நோக்கத்தால் என்னை வருத்துகின்றன இக் கண்கள் என்பது தோன்ற ‘ஈர்வனவேலும்’ எனப்பட்டது. மீன்போல மடப்பமும் பிறழ்ச்சியுங்கொண்டுள்ளன என்பது தோன்ற ‘அம் சேலும்’ எனப்படட்து. ‘வேல்போலவும் என்ன வேண்டியது உவமைவுருபு தொக்கியிருக்கின்றதென்க. இலக்குத்தப்பாது மர்மத்திலே பட்டுவிடாமல் தைத்து உயிரைக்கவரும் அம்புபோல இவையும் உயிர்நிலையிலே பட்டு அதனைக் கவராமல் விடுவதில்லை யென்பது தோன்ற ‘உயிர்மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோவல்ல’ எனப்பட்டது. அநித்தியமாய் நாசமடையுந் தன்மையதனா உடம்பை அழியச் செய்வதுமாத்திரமேயல்லாமல் நித்யமாய் அழியாத்தன்மையதான உயிரையும் அழியச்செய்யத் தொடங்கினமையும் தோன்றும். பேர்வனவோ அல்ல- பறிக்கக்கூடியனவாக இல்லை என்றபடி.

மன்மதனுடைய பஞ்சபாணங்கள் செய்யுந்தொழில்களையெல்லாம் இவ்விரண்டுந் தாமே செய்வன வென்பது ‘தெய்வநல் வேட்கணைப் பேரொளியே சோர்வண’ என்றதன் கருத்து. ஓயாத சிந்தையை விளைத்தல், நிறத்தை வேறுபடுத்தல் முதலியன மன்மத பாணங்களின் தொழில்கள். இவற்றையே நாயகியின் கண்களும் செய்கின்றவென்க.

நீலச்சுடர்விடு மேனியம்மான் விசும்பூர்தேர்வன = தம்மை ஒருகால் அநுபவித்தவர்கள் மறுபடியும் திரும்பமுடியாமையில் ஸ்ரீவைகுண்டத்தை ஒத்திருக்கின்றனவாம் கண்கள். இந்த லீலா விபூதியை வசப்படுத்திக்கொண்ட வளவில் த்ருப்திபெறாமல் நித்யவிபூதியாகிய பரமபதத்தையும் வசப்படுத்திக்கொள்ளத் தேடுகின்றவை என்றும் பொருள் கொள்ளலாம். ‘விசும்பூர் தேர்வன’ என்பதற்குப் ‘பரமபதத்தைத் தேடுகின்றவை’ என்று பொருளாவதுபோல, ‘பரமபதத்தினால் தேடப்படுகின்றவை’ என்றும் பொருளாகுமாதலால், ‘பரமபதத்தில் அளவு கடந்த இன்பமநுபவிக்கும் நித்யமுக்தராலும்  ஆசைப்பட்டு நாடுதற்குத் தகுந்தவை’ என்றுமாம்.

தெய்வ மன்னீர கண்ணோ? = நம்பிள்ளை வியாக்கியானத்தை நோக்குங்களால் இவ்விடத்தில், ஒளி வடிவில் வேறுபடாது எழுத்து வடிவில் மாத்திரம் வேறுபடும் இருவகைப்பாட பேதங்கள் கொள்ள வேணும். நம்பிள்ளையீடு:- ‘தைவங்களிடைய ஸ்வபாவததையுடையவனவாயுள்ளன என்னுதல்; அன்றிக்கே, தெய்மைன்னாரென்று இவர்கள் தங்களுக்குப் பேராக்கி…… பாக்ருத ஸ்வபாவைகளான உங்களுடைய என்னவாயிருந்தன.” என்று. இங்குச் சொன்ன இரண்டு பொருள்களுள் முதற்பொருளுக்கு ‘அந்நீர =’ என்று (தந்நகரப்) பாடம் ஆகும்; இரண்டாவது பொருளுக்கு ‘அன்னீர’ என்று (றன்னகரப்) பாடமாகும். தெய்வமந்நீர = திவ்யமென்று சொல்லத்தக்க அப்படிப்பட்ட நீர்மை (தன்மை)யையுடையனவென்க. அன்னீர- ‘அன்’ என்னும் உறைவிடைச் சொல்லடியாப்பிறந்த ‘அன்னீர்’ என்னும் முன்னிலைப் பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயரின் ஆறாம் வேற்றுமை விரி. அ – ஆறனுருபு. அசையென்றும் கொள்ளலாம்.

ஆழ்வாருடைய ஞானவிளக்கத்தைக் கண்டு கொண்டாடுகிற பாகவதர்  வார்த்தை இதற்கு உள்ளுறை பொருள். இப்பாட்டுக்கு ஸ்வாபதேசத்தில் தலைமகன்- ஸ்ரீவைஷ்ணவர்கள். (ஈர்வனவேலும் அஞ்சேலும்) இவரது ஞானத்தின் கூர்மையும் நீர்மையும் புறசம்யிகளைத் தோற்கடித்து ஸ்சகீயர்களை உசுப்பிக்குந்தன் மையுஞ்சொன்னபடி. (உயிர்மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோவல்ல) இவருடைய ஞானம்  சேதநர் யாவரிடத்தும் பூர்ணமான அருளைத் தவறாமல் கொண்டுள்ளமையைச் சொன்னபடி. (தெய்வநல் வேட்கணைப் போரொளியே சோர்வன) மன் மதபாணங்களாகிய புஷ்பங்கள் எப்படி ஸுகுமாரமாயிருக்கின்றனவோ அப்படி இவருடைய ஞானமும் ஸுகுமாரமாயிருக்கின்ற தென்கை. முரட்டு ஞான மன்றென்கை. (நீலச்சுடர் வீடு மேனியம்மான் விசும்பூர் தேர்வன) ‘இருள் தருமாஞாலத்து ளினிப்பிறவி யான்வேண்டேன்’ என்று இவ்விபூதியை வெறுத்து நித்ய விபூதியில் வாழ்ச்சியைத் தேடுவதே இவரது ஞானத்துக்கு தொழிலென்கை. (இச்செழுங்கயலே) எம்பெருமானுடைய மத்ஸ்யாவதாரம் முதலியவற்றில் ஆழ்ந்து தந்மயமாயிற்று இவருடைய ஞானமென்க. ‘தெய்மன்னீ (ந்நீ) ரகண்னோ’ என்றது தேவரீர் லோகவிலக்ஷணராயிருப்பது போனலவே தேவரீருடைய ஞானமும் லோகவிலக்ஷணமாயிருக்கின்ற தென்றவாறு. இங்ஙனமே இவருடைய ஞானவைபவத்தைக் கண்ட அன்பருடைய பாசுரமாயிருக்கிறது இது.

English Translation

Are these soul-piercing spears, or beautiful fish? Or are these unfired darts of Madana’s bow? These eyes are indeed divine fish searching for the water-hued radiant lord in his Vaikunta abode!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top