(2286)
அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், – முடிவண்ணம்
ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
ஆராழி கொண்டாற் கழகு.
பதவுரை
அன்று உலகம் தாயோன் |
– |
முன்பு உலகங்களைத் தாலியளந்த பெருமானுடைய |
அடி வண்ணம் |
– |
திருவடிகளின் நிறம் |
தாமரை |
– |
தாமரைப்போலே சிவந்திராநின்றது |
படி வண்ணம் |
– |
திருமேனியின் நிறம் |
பார் கடல் நீர் வண்ணம் |
– |
பூமயைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுதுதுக் குளிர்திராநின்றது. |
முடி வண்ணம் |
– |
கிரீடத்தினுடைய நிறம் |
ஓர் ஆழி வெய்யோன் |
– |
ஒற்றைச்சக்கர முடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது, |
ஒளியும் |
– |
(அப்பெருமானுடைய) தேஜஸ்ஸும் |
அஃது அன்றே |
– |
அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதே யன்றோ |
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு |
– |
அழகு பொருந்திய திருவாழியைக் கையில் கொண்டுள்ள பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாயிராநின்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முதலாழ்வார்கள் உலகளந்த சரிதையிலே மிகவும் ஆழ்ந்திருப்பர்களென்பது ப்ரஸித்தம். உலகளந்த வரலாறு பிரஸ்துதமானால் அதிலே உள்குழைந்திருப்பர்கள். கீழ் “அன்றுலகந்தாயோன்“ என்று உலகளந்த செய்தி ப்ரஸ்துமாகையாலே அதிலே தோற்று அவனழகை யநுபவிக்கிறாரிதில்.
மஹாபலி தாரை வார்த்துத் தத்தம் பண்ணினவாறே உலகங்களை யளந்துகொண்ட பெருமானுடைய திருவடிகளின் நிறமானது தாமரைபோலே சிவந்திராநின்றது, திருமேனியின் நிறா கடல் நீர்போலே இருண்டு குளிர்ந்திரா நின்றது, திருவபிஷேகமோ “கதிராயிர மிரவி கலந்தெரித்தாலொத்த நீண்முடியன்“ என்கிறபடியே ஆதித்யன்போலே யிராநின்றது, தேஜஸ்ஸுக்கோ ஒப்பேஇல்லை, ஒரு கால் ஒப்புச்சொல்ல வேணுமானால் அந்த ஆதித்யனுடைய தேஜஸ்ஸையே ஒப்புச்சொல்ல வமையும். கையுந் திருவாழியுமான எம்பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாங்கண்டீர்.
English Translation
The feet that strode the Earth are of the hue of lotus. His body is the hue of the ocean. His crown is the radiance of the sun. His effulgent discus too is like the sun, Is he not beautiful beyond compare?