(2287)

(2287)

அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,

அழகன்றே யண்டம் கடத்தல், – அழகன்றே

அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,

கங்கைநீர் கான்ற கழல்.

 

பதவுரை

ஆழியாற்கு

திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு

ஆழி நீர் வண்ணம்

கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது

அழகு அன்றே

மிகவுமழகிய நிறமன்றோ,

அண்டம் கடத்தல்

மேலுலகங்களை அளந்து கொண்டது

அழகு அன்றே

அழகன்றோ

அங்கை

உள்ளங்கையிலே

நீர் ஏற்றாற்கு

மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு

அலர் மேலான்

பிரமன்

கால் கழுவ

திருவடிகளை விளக்க, (அப்போது)

கங்கை நீர்

கங்காதீர்த்தத்தை

கான்ற

வெளிப்படுத்திய

கழல்

அத்திருவடி

அழகு அன்றே

அழகன்றோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திருமேனி யழகையும் சில திவ்ய சேஷ்டிதங்களையுஞ் சேர்த்து அநுபவிக்கிறார்.

ஆழ்யாற்கு ஆழிநீர்வண்ணம் அழகன்றே –எம்பெருமானுக்குப் பலதிருநாமங்களுண்டு, அவற்றுள் ‘கடல் வண்ணன்‘ என்பதும் ஒன்று, இதனை யறிந்தவர்களெல்லாரும் எம்பெருமானைக் கடல் வண்ணனென்று மாத்திரம் வாயாற் சொல்லி விடுகிறார்களேயன்றி, இதனால் எம்பெருமானுடைய அழகிய திருநிறம் சொல்லப்படுகின்றதென்று ரஸித்து அநுபவிப்பாரில்லையே!, எத்தனையோ நாமங்களை வாயாற் சொல்லிவிடுதல்போலக் கடல்வண்ண னென்பதையும் வெறுமனே சொல்லி விடுகிறார்களே யன்றி இஃது அழகுக்குடலான சிறந்த திருநாம்மென்று உள்குழைந்து நிற்பாரில்லையே!, (இவ்வழகிய திருநிறத்துக்கு மேலே சில அலங்காரங்களும் வேணுமோ? ஸ்வயமே அழகிய வடிவன்றோ?) என்பதாக விரித்துக்கொள்க.

அழகன்றே அண்டங்கடத்தல் – எம்பெருமான் ஓங்கி உலகளந்த வரலாற்றைப் பேசுமவர்கள் ‘ஓஓ! வெகு ஸாமர்த்தியமாக அளந்தான், வருத்தம் சிறிதுமின்றி அநாயாஸமாகக் காரியஞ் செய்தான்‘ என்று இந்த சக்தி விசேஷத்தைச் சொல்லிப் புகழ்கின்றனரேயன்றி, ‘வல்லார் ஆடினாற்போலே வெகு அழகாகச் செய்த காரியமன்றோ உலகளந்த செயல்‘ என்று அழகிலே ஈடுபட்டுப் பேசுவாரில்லையே! என்கை.

அங்கே நீரேற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவக் கங்கைநீர் கான்ற கழல் அழகன்றே – உலகளந்த காலத்தில் ஸத்யலோகத் தளவுஞ் சென்ற திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்தத்தினால் விளக்க, அத்தீருவடியினின்று கங்கை பெருகிற்றென்றும் அதனைச் சங்கரன் சடையினில் தாங்கிப் பரிசுத்தியடைந்தானென்றும் உலகர் சொல்லுகையாலே, ‘எம்பெருமானுடைய திருவடியானது பரமபரிசுத்தையான கங்கைக்குப்பிறப்பிடமாகையாலே மிகப் பரிசுத்தமானது‘ என்று இத்தனை சொல்லுகிறார்களேயல்லது, ‘செவ்விய திருவடியினின்று வெண்ணிறமான கங்கைநீர். பெருகப்பெற்ற பரபாக சோபையாகிற அழகிலே ஈடுபட்டுப் பேசுவாரில்லையே! என்கை. எம்பெருமானுடையவை யெல்லாம் மிகவுமழகியவையென்றே அநுஸந்திக்க வேணுமென்பது கருத்து.

 

English Translation

Is not the deep-ocean hue of the discuss Lord beautiful? When he accepted a gift of land, then rose and stretched his foot into space, the flower-born Brahma washed his foot with water. Which became the Ganga. Was that not beautiful?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top