(2285)

(2285)

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,

திருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும்

நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,

அன்றுலகம் தாயோன் அடி.

 

பதவுரை

திருந்திய

இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான

செம் கண்

செந்தாமரை போன்ற திருகண்களையுடைய

மால்

ஸர்வேச்வரனாயும்

ஆங்கே

உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே

நின்று பொருந்திய

நிலைநின்று பொருந்தினவனாயும்

உலகம்

உலகங்களை

உண்டு

பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும்

அன்று

முன்பொரு காலத்தில்

நீர் ஏற்று

(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்று

மூ அடியால் உலகம் தாயோன்

மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய

அடி தானே

திருவடிகளே

மருந்தும்

மருந்துபோலே ஸம்ஸாரவியாதியைத் தொலைப்பனவாயும்

பொருளும்

பணம்போலே வேண்டியவற்றைப் பெறுவிப்பனவாயும்

அமுதமும்

அமிருதம்போலே போக்யமாயுமிருக்கின்றன.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இடைவிடாது அநாதிகாலமாக நம்முடைய ரக்ஷணத்தொழிலிலேயே ஊன்றியிருக்கிற எம்பெருமானது திருவடிகளே உபாயமும் உபாயமுமாம் என்கிறது இப்பாட்டு. அன்று உலகம் தாயோடைய அடிதானே மருந்தும் பொருளும் அமுதமும் என்று இயைக்க.

மருந்து என்றது – உலகத்தில் ஔஷதமானது வியாதிகளைப் போக்குவதுபோல எம்பெருமானுடைய திருவடிகளும் நம்முடைய விரோதிகளைப் போக்கவல்லது என்றபடி. பொருள் – என்றது உலகத்தில் பணமானது பலபல பண்டங்களை வாங்குவதற்கு ஸாதனமாகவதுபோல, எம்பெருமானுடைய திருவடிகளும் நமக்கு இஷ்டங்களைப் பெறுக்கவல்ல உபாயம் என்றபடி. அமுதம் என்றது – இப்படி இஷ்டங்களைப் பெறுவிப்பதற்கும் அநிஷ்டங்களைத் தொலைப்பதற்கும் உபாயமாகநிற்கும் மாத்திரயேல்லாமல் ஸ்வயம் போக்யமாயும், ஆனதுபற்றியே ப்ராப்யமாயுமிருக்கு மென்றபடி.

திருந்திய செங்கண்மால் – நாம் திருந்துவதற்குப் பாங்கான திருக்கண்களை யுடையவன் என்கை. இவனே பரமபுருஷனென்று நாம் நிஸ்ஸம்சயமாக அறுதியிடலாம்படி, தன்னுடைய ஸர்வேச்வரத்வத்தைக் கோட்சொல்லித் தருகின்ற திருக்கண்கள் படைத்தவன். “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய் கண்கள்“.

‘ஆங்கே பொருந்திய‘ என்றது –எப்போதும் அடியவர்களைக் காத்தருள்வதாகிற காரியமொன்றிலேயே எம்பெருமான் பொருந்தியிருக்கின்றமையைச் சொன்னபடி. இதனையே விவரிக்கிறார் உலகமுண்டுமிழ்ந்து நீரேற்று மூவடியா லன்றுலகந் தாயோன் என்று. பிரளயம் வந்தவாறே அதில் உலகங்களெல்லாம் அழியாதபடி அவற்றைத் திருவயிற்றிலேவைத்து நோக்கியும், பிறகு வெளிப்படுத்தியும், மஹாபலி போல்வாருடைய அபிமானத்தில் நின்றும் மீட்டுத் தன்னடிக் கீழ்ப்படுத்தியும் இவை போல்வன பல காரியங்களினால் தன்னுடைய ரக்ஷகத்வத்தைப் பிரகாசப்படுத்திக் கொண்டேயிருக்கிற எம்பெருமானுடைய திருவடிகளே உபாயோபேயங்க ளென்றதாயிற்று.

திருந்திய என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம். “இவ்வாத்மாக்கள் திருந்தாவிட்டால் இவற்றைத் திருத்தப் பாராதே இவற்றுக் கீழாகத் தன்னைத் திருத்திக்கொண்டிருக்கும் ஸ்ர்வேச்வரன்“ என்ற பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செயலின் அழகு காண்மின்.

 

English Translation

The lotus-eyed Lord is himself the medicine. its healing power and the sweet well-being as well.  He made, swallowed and remade the universe, then measured it, by seeking a gift of three feet of land.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top