(2057)

(2057)

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,

சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,

நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,

புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

 

பதவுரை

அலம் புரிந்த

போதும் போதும் என்று சொல்லும்படி கொடுக்க வல்ல

நெடு தட கை

நீண்ட பெரிய திருக்கைகளை யுடையனாய்

அமரர் வேந்தன்

நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்

அம் சிறை புள் தனி பாகன்

அழகிய சிறகையுடைய பெரிய திருவடிக்குத் தனிப்பாகனாய்

அவுணர்க்கு

ஆஸுரப்க்ருதிகளுக்கு

என்றும்

எக்காலத்தும்

சலம் புரிந்து

சீற்றங்கொண்டிருந்து

அங்கு

அவர்கள் விஷயத்திலே

அருள் இல்லா தன்மை ஆளன் தான்

இரக்கமற்றிருக்கையாகிற் தன்மையையுடையனான் எம்பெருமான்

உகந்த

திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கிற

ஊர் எல்லாம்

திருப்பதிகளிலெல்லாம்

தன் தாள்பாடி

அவனுடைய திருவடிகளைப் பாடி,

நிலம் பரந்து வரும் கலுழி

பூமிமுழுதும் வியாபித்து வருகின்ற பெரு வெள்ளத்தையுடைய

பெண்ணை

பெண்ணையாறானது

ஈர்த்த

(வெள்ளத்தில்) இழுத்துக் கொண்டுவருகிற

நெடுவேய்கள்

பெரிய மூங்கில்களினின்றும்

படு

உண்டாகிற

முத்தம்

முத்துக்களை

உந்த

வயல்களிலே கொண்டுதள்ள

உந்தி

(உழவர்களாலும் தங்கள்பயிர்க்குக் களையென்று) தள்ளப்பட்டு

புலம் பரந்து

கழனிகளெங்கும் பரவி

பொன் விளைக்கும்

பொன்னை விளைக்குமிடமாயும்

பொய்கை வேலி

நீர்நிலைகளைச் சுற்றிலும் உடையதாயுமுள்ள

பூ கோவலூர்

திருக்கோவலூரை

தொழுதும்

ஸேவிப்போம்;

நெஞ்சே போது

நெஞ்சே! வா.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் த்ரிவிக்ரமாவதார வரலாற்றைப் பேசியநுபவித்தார்; அது என்றைக்கோ கழிந்த அவதாரமிறே; அதற்குத் தாம் பிற்படுகையாலே கண்ணாரக் கண்டு அநுபவிக்கப் பெற்றிலோமே! என்று வருந்தியிருக்க, இவருடைய வருத்தத்தைக் கண்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! அவதாரத்துக்குப் பிற்பட்டவர்களையும் அநுபவிக்கைக்காக வன்றோ நாம் அந்தச் செவ்வியொடே திருக்கோவலூரில் ஸந்நிதிபண்ணி யிருப்பது; அங்கே வந்து குறையற அநுபவிக்கலாமே‘ என்று, உலகளந்த திருக்கோலமாக ஸேவை ஸாதிக்கு மிடமான திருக்கோவலூரைக் காட்டிக்கொடுக்க, ‘நெஞ்சே! நமக்கு வாய்த்தது; அநுபவிக்கப் போகலாம், வா‘ என்றழைக்கிறார். வழிபோவார்க்கு வாய்ப்பாடல் வேண்டுமாகையாலே எம்பெருமானுகந்தருளின நிலங்களாகிய திருப்பதிகளை யெல்லாம் பாடிக்கொண்டே போகவேணுமென்கிறார் முன்னடிகளில்.

திவ்யதேசங்கள் எப்படிப்பட்டவை? எம்பெருமான் திருவுள்ளம் உவந்து எழுந்தருளியிருக்கப் பெற்றவை. அவ்வெம்பெருமானுக்கு நான்கு விசேஷணங்கள் இடப்பட்டிருக்கின்றன. (அலம்புரிந்த நெடுந்தடக்கை) ‘அலம்‘ என்பது வடசொல்; போதும் என்னும் பொருளதான இடைச்சொல் யாசகர்கள் ‘போதும் போதும்‘ என்று சொல்லும்படியாக அவர்கட்கு அபாரமாகக் கொடுக்கவல்ல பெரிய கையை யுடையவன் எம்பெருமான். தன்னிடத்தில் தானம்பெற்றபின் வேறொரு வாசலிலே சென்று துவள வேண்டாதபடி பர்யாப்தமாகக் கொடுப்பவனென்க. புரிதல்-கொடுத்தல். இனி, ‘புரிதல்‘ என்று மீளாகைக்கும் போதலால் அப்பொருளும் இங்குக் கொள்ளக்கூடியதே; பெறுமவர்கள் ‘போதும்‘ என்றவாறு கொடுப்பதினின்று மீண்டாலும் * நெடுந்தடக்கையாகவே யிருக்கும்; உழக்கிலே பதக்கையடக்க வொண்ணாமையாலே மீளுமித்தனை; இவன் தன்னுடைய ஔதார்யத்தைப் பார்த்தால் யாசகர்களின் மனோரதம் சிறிதாய் இவனுடைய பாரிப்பே விஞ்சியிருக்குமென்பது கருத்து. (நெடுந்தடக்கை) நெடு, தட என்ற இரண்டு விசேஷணங்களுக்குக் கருத்து என்னென்னில்; யாசகர்களிருந்த விடத்தளவுஞ் செல்ல நீண்ட கை என்பது நெடு என்றதன் கருத்து; திருக்கையின் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் அவகாசங் கொள்ளும்படியான பெருமை ‘தட‘ என்றதனாற் சொல்லிற்றாமென்க.

அலம்புரிந்த என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்; ஹலம் என்ற வடசொல் கலப்பையென்று பொருள்படும்; அஃது அலமெனத்திரியும்; கலப்பையைத் தரித்த திருக்கையையடையவன் என்னலாம். இதனால் பலராமாவதாரத்தைப் பேசினபடி. பலராமனுக்குக் கலப்பையும் உலக்கையும் முக்கிய ஆயுதங்கள். அதனால் அவ்விராமனுக்கு ‘ஹலாயுதன், ஹனீ, முஸலீ என்ற திருநாமங்கள் வழங்கும்.

அமரர்வேந்தன் = கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்யஸூரிகளை இங்கு அமரர் என்கிறது. நித்யஸூரிகளை அடிமைகொள்வதாக முடிகவித்திருப்பவன் என்றவாறு.

(அஞ்சிறைப்புள்தனிப்பாகன்) கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்யஸூரிகளை அடிமை கொள்பவனென்று பொதுவாகச் சொல்லிற்று; அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு திருஷ்டாந்தமாக ஒருவ்யக்தியைச் சிறப்பாக எடுத்துப்பேசுகிறார். அழகிய சிறகையுடையனான பெரியதிருவடிக்கு அத்விதீயனான பாகன், கருடவாஹன்ன் என்றபடி. எம்பெருமான் தன்மீதேசறி உலாவும்போது உண்டாகும் ஆயாஸத்திற்குத் திருவாலவட்டம் பணிமாறினாப் போலே இரண்டு சிறகாலும் ஆச்வாஸம் செய்கிறபடியைத் திருவுள்ளம் பற்றி ‘அஞ்சிறை‘ என்று புள்ளுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது. அடியார்கள் இருக்குமிடங்களிலே எம்பெருமானைக் கொண்டு சேர்ப்பதற்குச் சிறகுகளே கருவியாதலால் அவற்றைக் சிறப்பித்துக் கூறுகிறபடியுமாம்.

(அவுணர்க்கென்றும் சலம்புரிந்து அங்கருளில்லாத் தன்மையாளன்) ஸ்ரீராம க்ருஷ்ணாதிரூபேண திருவவதரித்து விரோதிகளைக் களைந்தமை சொல்லுகிறது. ‘அவுணர்‘ என்றது அசுர்ர் என்றபடி. இது அஸுரஜாதியைச் சொல்லுகிறதன்று. அஹங்காரம்மகாரங்களோடு கூடினவர்களாய் பகவத்பக்தியிலே பகையுள்ளவர்கள் ஆஸுரப்க்ருதிகளென்று சொல்லப்படுவார்களாதலால் அவர்களையே இங்கு அவுணரென்கிறது. ப்ரஹ்லாதாழ்வான் அஸுரயோனியிற் பிறந்தவனாயிருக்கச் செய்தேயும் “உபமாநமசேஷாணாம் ஸாதூநாம்யஸ் ஸதாபவத்“ எனும்படி ஸாதுக்களுக்கு உபமாநமா யிருந்தான். விபீஷணாழ்வான் ராக்ஷஸ அஸுரயோநியிற் பிறந்திருக்கச் செய்தேயும் “விபணஷஸ் து தர்மாத்மா“ என்னும்படியாயிருந்தான். ஜயந்தன் (காகாஸுரன்) தேவயோநியாயிருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கானான். ஆன இப்படிகளை ஆராயுமிடத்து அஸுரத்வமும் தேவத்வமும் ஜாதிபரமன்று, ஸ்வபாவபரம். அதாவது. “விஷ்ணுபக்திபரோ தேவோ விபரீதஸ் த்தாஸுர“ என்று ஸ்ரீவிஷ்ணுதர்மத்திலே சொல்லிற்று. “த்வௌ பூதஸர்க்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச-தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா.“ என்று பகவத்கீதை யிலே சொல்லிற்று. எம்பெருமானுடைய ஸ்வரூப குணவிபூதிகளில் அன்புள்ளவர்கள் தேவரெனப்படுவர்கள், அவற்றில் பொறாமையுள்ளவர்கள் அசுரனெப்படுவர்கள். “நண்ணவசுர்ர் நலிவெய்த நல்லவமர்ர் பொலிவெய்த“ (10-7-5) என்பன போன்றவிடங்களிலும் இவ்வகைப் பொருள் அநுஸந்திக்கப்பட்டமை காண்க. ஆக இப்படிப்பட்ட ஆஸுர ப்ரக்ருதிகள் விஷயத்தில் ஒருநாளும் அநுக்ரஹ மின்றி நிக்ரஹமே செய்து போருமியல்வின்ன் என்றதாயிற்று.

இப்படிப்பட்ட எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குந் திருப்பதிகளையெல்லாம் பாடிக்கொண்டே திருக்கோவலூர் தொழப் போவோமென்கிறார். மேல் ஒன்றரையடியகாளல் திருக்கோவலூரை விசேஷிக்கிறார். (நிலம்பரந்து வருங்கலுழி இத்யாதி.) பெண்ணையாகிற ஒரு பெண்மணி திருக்கோவலூராயனாராகிற புருஷோத்தமனை அநுபவிக்கப் போகிறாளாகையாலே அளவற்ற ஆதரந்தோற்றப் பேராரவாரத்தோடே பெருகுகிறபடி. ஜந்தோஷ மிகுதியாலே கரைமீதே வழிந்து குடியிருப்புக்களை யழித்த, கரையில் நிற்கிற வேய்களை பேர்ப்பற்றிலே குத்தியெடுத்து இழுத்துக்கொண்டுவர, அந்த வேண்கள் உடைந்து முத்துக்களை ப்ரஸவிக்க, அவற்றைப் பெண்ணையாறு வயல்களிலே கொண்டு தள்ள, பயிரிடுமவர்கள் அவை தங்கள் பயிர்க்குக் களைகளென்று தள்ள, அவர்களாலும் தடைசெய்ய வொண்ணாதபடி வயல்களிலெங்கும் பரந்தனவாம் முத்துக்கள், இப்படிப்பட்ட வயல்களிலே பொன்போன்ற நெற்கள் விளையப்பெற்ற பூங்கோவலூரைத் தொழுவோம், நெஞ்சே! புறப்படு என்றாராயிற்று.

பொய்கைவேலி என்பதில் தொனிக்கும் அர்த்த விசேஷமும் உணர்க. பொய்கை யாழ்வார் முதலான முதலாழ்வார்களைக் காப்பாகவுடைய திருக்கோவலூர் என்க.

 

English Translation

The Lord who is king of the celestials has mighty arms of exceeding benevolence. He rides the beautiful Garuda bird. Always angry and merciless towards Asuras. He is raised in all the towns where he resides.  O Heart!  Came let us worship him in Tirukkovalur surrounded by fertile wet-lands where the river Pannai throws up grains of gold and pearls collected from the Bamboo thickness where it flows.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top