(2058)

(2058)

வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,

வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,

கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,

பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

 

பதவுரை

வற்பு உடைய

மிடுக்குடைய

வரை நெடு தோள்

மலைபோன்று உயர்ந்த தோள்களையுடையரான

மன்னர்

(கார்த்த வீரியார்ஜீனன் முதலான) அரசர்கள்

மாள

முடியும்படி

வடிவு ஆய

அழகியதான

மழு

கோடாலிப்படையை

ஏந்தி

தரித்து (பரசுராமனாய்த் திருவதரித்தும்)

உலகம் ஆண்டு

(ஸ்ரீராமபிரனாய்) உலகங்களைத் திருக் குணங்களா லீடுபடுத்தியும்

வெற்பு உடைய

மலையை உள்ளேயுடைய

நெடு கடலுள் பெரிய கடலினுள்ளே

தனி வேல்

ஒப்பற்ற வேற்படையை

உய்த்த

செலுத்தின

வேள் முதலா

ஸுப்ரஹமண்யன் முதலான தேவதைகளை

வென்றான்

(பாணாஸுரயுத்தத்தில்) தோல்வியடையச் செய்தும் போந்த எம்பெருமான்

ஊர்

எழுந்தருளியிருக்குமிடமாய்,

விந்தை மேய

(தவம்புரிவதற்காக) விந்தின மலையிலி் வாழ்ந்தவளாய்

கற்பு உடைய

அறிவிறசிறந்தவளாய்

மடம்

பற்றினது விடாமையாகிற குணமுடையனான

கன்னி

துர்க்கையானவள்

கடிபொழில் சூழ்

பரிமளத்தையுடைய சோலைகளாலே சூழப்பட்டதாய்

நெடு மறுகில்

விசாலமான திருவீதிகளை யுடைத்தாய்

கமலம் வேலி

தாமரைத் தடாகங்களைச் சுற்றிலுமுடைத்தாய்

பொற்பு உடைய மலை அரையன்

பராக்ரமசாலிகளான மலயமா நவர்களாலே ஆச்ரயிக்கப்பட்டதான

பூங்கோவலூர்

திருக்கோவலூரை

நெஞ்சே தொழு தும்

மனமே! தொழுவோம்;

போது

வா

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருக்கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை யழைத்தார்; அவ்விடத்து எம்பெருமான் வஸிஷ்டசண்டான விபாகமின்றி எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த ஸர்வஸ்தானத்தோடே வந்து நிற்கையாலே அதை அநுஸந்தித்து அநுபவத்தை மறந்து அஞ்சத்தொடங்கினார். அஸ்தானத்திலும் பயசங்கை பண்ணுகையன்றோ ஆழ்வார்களின் பணி. எம்பெருமானுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதி குணங்களை அநுஸந்தித்தவாறே இவ்விலக்ஷண வஸ்துவுக்கு என்ன அவத்யம் வருகிறதோவென்று வயிறுபிடிக்க வேண்டும்படியாயிற்று. ஸ்ரீவிபீஷணாழ்வான் அநுகூலனாய் வந்து சரணம்புகாநிற்கச் செய்தேயும் ஸுக்ரீவ மஹாராஜர் தம்முடைய கனத்த ப்ரேமத்தினால் கலங்கி அபாயசங்கை பண்ணினபோது பெருமாள் தம் தோள்வலியைக் காட்டி அச்சந் தவிர்த்தாப்போலே பிரகிருதத்திலும் திருப்கோவலூராயனார் தம் மிடுக்கையும் காவலுறைப்பையும் தேசத்தினுடைய அரணுடைமையையும் ஆழ்வார்க்குக் காட்டிக்கொடுக்க, அவற்றையெல்லாங்கண்டு தெளிந்த ஆழ்வார் அச்சங்கெட்டு “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருவுள்ளத்தைத் தட்டி யெழுப்புகிறார்.

“வற்புடையவரை நெடுந்தோள் மன்னர்மாள வடிவாய மழுவேந்தி” என்ற வளவும் பரசுராமாவதார பரம். “உலகமாண்டு” என்றது ஸ்ரீராமாவதாரபரம். “வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேலுய்த்த வேள்முதலா வென்றான்” என்றது ஸ்ரீக்ருஷ்யாவதாரத்தில் பாணாஸுர விஜயபரம். இவை, ஆழ்வாருடைய அச்சங்கெடுக்கைக்கு எம்பெருமான் காட்டித் தந்த மிடுக்குக்களாம்.

வடிவாய மழு = ‘வடிவு ஆய மழு‘ என்று பிரித்தால் அழகியதான மழு என்று பொருள்படும். ‘வடி வாய மழு‘ என்று பிரித்தால் கூர்மையான வாயையுடைய மழு என்று பொருள்படும்.

உலகமாண்டு = ஸ்ரீராமபிரானாய்த் திருவவதரித்துத் திருக்குணங்களாலே உலகமுழுவதையும் ஈடுபடுத்தி ஆண்டபடியைச் சொல்லுகிறது இது.

வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேலுய்த்த வேள்முதலா வென்றானூர் = முற்காலத்தில் மலைகளெல்லாம் இறகுகளுடன் கூடிப்பறந்து ஆங்காங்க வீழ்ந்து நகரங்களையும் கிராமங்களையும் அழித்துக்கொண்டு திரியுங்கால் தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அவற்றின் இறகுகளை அறுத்தொழிக்க, மைநாகமலை அவனுக்குத் தப்பித் தெரியாதபடி கடலினுள்ளே கிடக்க, தேவஸேநாபதியான ஸுப்ரஹ்மண்யன் அதனையறிந்து தனது வேற்படையைச்செலுத்தி அம்மலையை நலிந்த வரலாறு இங்கு அறியத்தக்கது. அப்படிப் பட்ட மஹாவீரனான ஸுப்ரஹ்மண்யன் முதலானாரைப் பாணாஸுரயுத்தத்தினன்று பங்கப்படுத்தினமை சொல்லிற்றாயிற்று.

‘வேள்‘ என்று காமனுக்குப் பேராயிருக்க, ஸுப்ரஹ்மண்யனை வேள் என்றது உவமையாகு பெயர். மன்மதனைப்போல் அழகிற் சிறந்தவனென்க. நம்மாழ்வார் ‘ஆழியெழ‘ என்னுந் திருவாய்மொழியிலே பாணஸுர விஜயவ்ருத்தாந்தத்தைப் பேசும்போது “நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான்” என்று ஸுப்ரஹ்மண்யன் தோற்றுப் போனதை முந்துற அருளிச்செய்கையாலே இவ்வாழ்வாரும் அதனைப் பின்பற்றி ”வேள்முதலா வென்றான்” என்றாரென்க. ”கார்த்திகையானுங் கரிமுகத்தானுங் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு” என்ற இராமாநுச நூற்றந்தாதியுங் காண்க.

இனி, திருக்கோவலூர்த் திருப்பதியின் காவலுறைப்பை அருளிச் செய்கிறார் விந்தைமேய வென்று தொடங்கி. துர்க்கையானவள் இந்த க்ஷத்திரத்தைத் காவர் செய்துவர்த்திக்கிறாளென்பது இதிஹாஸம். பெரியதிருமொழியிலும் (2-10-6) இவ்வூர்த் திருப்பதிகத்தில் ”வியன்கலை யெண்டோளினாள் விளங்குசெல்வச் செறியார்ந்த மணிமாடந் திகழ்ந்து தோன்றுந் திருக்கோவலூரதனுட் கண்டேனானே” என்றருளிச்செய்தது முணர்க. இந்தத் துர்க்கையானவள் இவ்விடத்துக் காவல்பூணகைக் குறுப்பாக விந்த்யாடவியிலே யிருந்து தவம் புரிந்தாளென்பதுபற்றி ‘விந்தைமேய‘ எனப்பட்டது. ‘விந்தியம்‘ என்பது விந்தையென மருவிற்று.

கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமலவேலி  = எங்குப்பார்த்தாலும் நறுமணம் மிக்க சோலையாயிருக்கும்; திருவீதிகளோ அகலநீளங்களிற் குறையற்றிருக்கும்; தாமரைத் தடங்களும் ஊர்க்கு வேலியாயிருக்கும்.

பொற்புடைய மலையரையன் பணிய நின்ற = திருவல்லிக்கேணியில் தொண்டையர் கோன் போலவும், அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும், நந்திபுரவிண்ணகரத்தில் நந்திவருமன் போலவும், திருநறையூரில் செம்பியன் கோச் செய்கணான்போலவும், திருக்கோவலூரில் ‘மலயமாநவர்‘ என்னும் பிரபுக்கள் தொண்டு பூண்டு உய்ந்தனராக இதிஹாஸம் வழங்குமென்ப. ”மலையரையன்” என்றது ஜாத்யேகவசநமாய்ப் பரம்பரையான அரசர்களைச் சொல்லுகிறதென்பது பெரியவாச்சான் திருவுள்ளம். அவ்வரசர்களின் கைங்கரியங்களுக்கு இலக்காயிருக்கும் திருக்கோவலூர். ஆக இப்படிப்பட்ட திருப்பதியைச்சென்று தொழுவோம், புறப்படாய் நெஞ்சமே! என்றாராயிற்று.

 

English Translation

The Lord who wielded a sharp battle axe against mighty Asura kings and ruled the Earth and conquered the spear-wielding subramanya and others resides in Punkavalur, guarded by the beautiful dame Parvati, resident of the Vindhayas, and worshipped by Malai Ariyan, king of the mountains.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top