(1718)

(1718)

வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்

மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்,

ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்,

கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.

 

பதவுரை

முது முந்நீர்

கடல் வெள்ளம்

வானோர் அளவும்

தேவர்களின் எல்லையளவும்

வளர்ந்த காலம்

பரந்து சென்ற காலத்திலே

வலி உருவின் மீன் ஆய் வந்து

வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த் திருவவதரித்து

வியந்து

ஆச்சரியப்படும்படியாக

உய்யக்கொண்ட

எல்லாரையும் பிழைப்பித்தருளின

தண் தாமரை கண்ணன்

குளிர்ந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும்

ஆனா உருவின் ஆன் ஆயன் அவனை

விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை,

அம்

அழகிய

மா

பரந்த

விளை

விளைவுமிக்க

வயலுள்

வயல்களை யுடையதும்

கான் ஆர் புறவில்

காடுகள் செறிந்த பர்யந்தங்களை யுடையதுமான

கண்ணபுரத்து

திருக்கண்ணபுரத்திலே

அடியேன் கண்டு கொண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மத்ஸ்யாவதாரம் செய்தருளின பெருமானைத் திருக்கண்ணபுரத்தில் காணப்பெற்றேனென்கிறார்.

வலியுருவின் மீனாய் =  வந்து இவ்விடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்; – “கடல் வெள்ளத்தைத் தன்னுடைய ஒரு செலுவிலே அடக்கவல்ல மத்ஸ்யமாய் வந்து” என்பதாம்.  செலுவாவது – மீனின் உட்புறத்தேயுள்ள முள்; ‘செதிள்’ எனவும் படும்.  அன்றி, செலுவாவது – மீன்செட்டை.  யெனப்படும் மீன் சிறகு என்றுஞ் சொல்லுவர்.  “மான யோசனை யளவொழி மெய்யுருவாய்ந்த, மீனமாயினனெடுங்கடற் பரவையின் வீழ்ந்து, கானவெண்டிரைக் கருங்கடலளறெழக் கலக்கிப், போன வாளெயிற் றசுரனைத் தடவுறும் புகுந்து” (கந்த புராணம் – உபதேச காண்டம்) என்றபடி எம்பெருமான் எண்ணிடற்கரிய மிகப்பல யோஜனை நீளமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்த பெருமீனான போது அந்த மத்ஸ்யத்தின் ஒரு செலுவினகத்தே கடல் வெள்ளம் முழுவதும் ஒடுங்கும்படி யிருந்த தென அதன் பெருமை தோன்ற ‘வலியுருவின் மீனாய்’ என்றது.

ஆனாவுருவின் = “ஸதைகரூபரூபாய” “அவிகாராய சுத்தாய” என்கிறபடியே என்றும் ஒரு படிப்பட நின்று விகாரமற்ற வுருவையுடையவன் என்கை.  அப்படியாகில், மத்ஸ்யகூர்மாதி ரூபமான விகாரவுருக்களைக் கொண்டது என்னோவெனின்; கருமமடியாகக் கொண்டிலன்; க்ருபையடியாகக் கொண்டவத்தனை.  விகாரமற்றவனென்று பிரமாணங்கள் சொல்லுவ தெல்லாம் கருமநிபந்தனமான விகாரமில்லாமையையே யென்றுணர்க.

 

English Translation

In the days of yore when the ocean rose sky-high and flooded the land, the Lord came as a huge fish and gave deliverance to the world.  He is the coal lotus-eyes invincible cowherd-lad krishna.  I know he is in kannapuram, surrounded by fertile fields and thick forsts.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top