(1715)
படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு
கொடிபுல்கு தடவரை அகலம துடையவர்
முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர்
கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே.
பதவுரை
|
முடி புல்கு |
– |
நாற்று முடிகளோடு கூடியிருக்கிற |
|
நெடு வயல் |
– |
விசாலமான கழனிகளிலே |
|
படை |
– |
கலப்பைகளை |
|
செல |
– |
செலுத்தும்போது |
|
அடி |
– |
கால்பட்ட |
|
மலர் |
– |
(தாமரை முதலிய) பூக்களானவை |
|
கடி புல்கு |
– |
பரிமளத்தைப் புறப்பட விடப்பெற்ற |
|
கணபுரம் |
– |
திருக்கண்ணபுரம்;- |
|
பலர் தொழ |
– |
பல பக்தர்கள் வணங்கும்படியாக |
|
படி புல்கும் அடி இணை உடையவர் |
– |
பூமியை யளாவிய திருவடியிணையை யுடையவரும் |
|
மலர் வைகு |
– |
தாமரைமலரில் பொருந்திய |
|
கொடி |
– |
கொடிபோன்ற பெரிய பிராட்டியார் |
|
புல்கு |
– |
அணையப்பெற்ற |
|
தடவரை அகலம் அது உடையவர் |
– |
பெரிய மலைபோன்ற திருமார்பை யுடையவருமான |
|
அடிகள் தம் |
– |
ஸ்வாமியினுடைய |
|
இடம் |
– |
திவ்யதேசமாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கழனிகளில் நடுகைக்காக எங்கும் பரம்பிக்கிடக்கிற நாற்று முடிகள் மூன்றாமடியிலுள்ள ‘முடி’ என்னுஞ் சொல்லுக்குப் பொருள். அவை நிரம்பிய பெரிய வயல்களிலே உழவர்கள் கலப்பையைக்கொண்டு புகுந்து நடத்துவர்கள்; காலாலே ஒருகால் குழப்புவர்கள்; அவ்வளவிலே இடையிலே தப்பிக்கிடந்த தாமரைப்பூவானது பரிமளத்தைப் புறப்படவிடுமாம். “படைநின்ற பைந்தாமரையோடு அணிநீலம் மடைநின்றலரும் வயலாலிமணாளா” (11-8-6) என்றபாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.- வயல்களிலெங்கும் தாமரை முதலிய மலர்கள் மணங்கமழப் பெற்ற திருக்கண்ணபுரம் *அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கை யுறைமார்பனுடைய திவ்ய தேசம் என்றதாயிற்று.
படிபுல்குமடியிணை பலர்தொழ = முன்பு உலகமளந்த திருவடிகளைத் திருக்கண்ணபுரத்திலே பலரும் வணங்கும்படியாக என்றுமாம். படி – பூமி. மலர்வைகுகொடி – பெரியபிராட்டியார். ‘கொடி’ என்பது ஸ்த்ரீஜாதிக்கு உவமையாகு பெயர்.
English Translation
The Lord who measured the Earth with his feet and who bears the lotus-dame Lakshmi on his mountain-like-chest resides in kannapuram where ploughed fertile fields made ready for transplantation carry the fragrance of lotus blossoms.
