(1656)

(1656)

வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் மணநாறும் என்கின் றாளால்,

உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் பிரிகிலேன் என்கின் றாளால்,

பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாம் என்றே பயில்கின் றாளால்,

கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.

பதவுரை

வண்டு அமரும்

வண்டுகள் படிந்த

வனமாலை

திருத்துழாய் மாலை

மணிமுடிமேல்

ரத்ன கிரீடத்தின் மீது

மணம் நாறும் என்கின்றாள்

பரிமளம் கமழ நிற்கிறது என்கிறாள்;

எனக்கு இவர் பால் அன்பு உண்டு என்று

‘எனக்கு இவரிடத்திலே அன்பு உண்டு’ என்று சொல்லி

ஒருகாலும் பிரிகிலேன் ஆல் என்கின்றாள்

(அவ்வன்பரை) ஒரு நொடிப்பொழுதும் பிரிந்திருக்க முடியவில்லையே யென்கிறாள்;

இவரை

‘இப்பெரியவரை

பண்டு

இதற்கு முன்னம்

யாம் கண்டறிவது

நாம் பார்த்திருப்பது

எவ் ஊரில்

எந்த வூரிலே?

என்றே பயில்கி்ன்றாள்

என்றே பலகாலும் உருப்போடுகின்றாள்;

கண்டவர்

ஸேவித்தவர்களெல்லோரும்

தம் மனம்

தங்கள் மனத்தை

வழங்கும்

அர்ப்பணம் செய்து விடும் படியான

கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பண்டிவரைக் கண்டறிவது எவ்வூரில் யாமென்றே பயில்கின்றாளால்” என்ற மூன்றாமடியின் விசேஷப்பொருள் குறிக்கொள்ளத் தக்கது; – இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியக்கியான வாக்கியங் காண்மின் – முதல் நாள் கண்டால் ஸவாபாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளியாலுமாக ‘முன்பே கண்டறியும் முகமாயிருந்ததீ! எவ்வூரில்தான் கண்டது?’ என்னும்படி யிருக்கும்; பிறந்தால் பின்பு’ முன் போரிடத்திலும் இவரைக் கண்டறியோம்’ என்னும்படியாயிருக்கும்; நித்யாபூர்வமான விஷயமென்றபடி.  சொன்ன இரண்டர்த்தத்தையும் அது காட்டுமோவென்ன, பயில்கின்றளால் என்றது கண்டாயே; எற்றைக்கும் வார்த்தை இதுவேயன்றோ : இப்படியாக வேண்டாவோ?’ என்று ஜீயர்.” என்று.  இதனை விவரிப்போமிங்கு; – பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில்’ என்பதற்கு இரண்டு வகையான பொருள் சொல்ல இடமுண்டு; ‘முன்பு இவரை எவ்விடத்திலோ பார்த்திருக்கிறோம் போல இருக்கின்றதே, எவ்விடத்தில் பார்த்திருப்போம்!’ என்று விமர்சிப்பதாக ஒரு பொருள் : பண்டு இவரை எவ்வூரில் கண்டறிவது – எவ்வூரிலும் கண்டறிந்ததில்லை; இப்போதுதான் முதன்முதலாகக் காண்கிறொம் என்பதாக மற்றொரு பொருள்.  ஒரு தடவை பிரயோகிக்கப்பட்டிருக்கின்ற வாக்கியம் இவ்விரண்டு பொருளையும் ஏககாலத்தில் எங்ஙனே தருமென்னில்; மூலத்தில் “என்றே பயில்கின்றாளால்” என்றிருப்பதால் ‘பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்’ என்னும் வார்த்தையைப் பலகாலும் உருப்போடுகிறாள் என விளங்குதலால், அந்த வார்த்தையை முதல் தடவை சொல்லும்போது முதற்பொருளும் அடுத்த தடவைகளிலெல்லாம் இரண்டாவது பொருளும் சொல்லப்படக் குறையில்லையென்க.  இவ்விரண்டு பொருள்களின் ஸ்வாரஸ்ய மென்னவெனில் :– எம்பெருமானை முதன் முதலாகக் காணும்போது திருமுகமண்டலத்தில் தண்ணளி  முதலியவற்றைக்கொண்டு ‘இவரை முன்பு எங்கோ கண்டாற்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்; அதன்பிறகு எவ்வளவு நெருங்கிப்பழகினாலும் தெகுட்டுதலின்றியே “எப்பொழுதும் நாள் திங்களாண்டூழி யூழிதொறும், அப்பொழுதைக் கப்பொழுதென்னாராவமுதமே” என்னும்படியான விஷயமாகையாலே முன்பு எங்குங்கண்டறியாதது போலவும் அப்பொழுதே புதிதாகக் கண்டு அநுபவிப்பதுபோலவுந் தோன்றிக்கொண்டே யிருக்கும்.  மற்ற விஷயங்களிற் காட்டில் பகவத் விஷயத்திற்குள்ள வைலக்ஷண்யம் இது – என்கை.

 

English Translation

“The fragrance of the bee-humming Tulasi wreath on his golden crown wafts everywhere”, she says, then “I love him, I can never part from him!”, “I remember having seen him earlier, where was it?”, she keeps asking.  I wonder if she has seen the Lord of kannapuram where those who see him lose their hearts to him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top