(144)

(144)

விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில் விரும்பி யதனைநான் நோக்கி

மண்ணெல் லாம்கண்டுஎன் மனத்துள்ளே யஞ்சி மதுசூத னேயென்ற றிந்தேன்

புண்ணேது மில்லைஉன் காது மறியும் பொறுத்துஇறைப் போதுஇரு நம்பீ

கண்ணாஎன் கார்முகி லேகடல் வண்ணா காவல னேமுலை யுணாயே.

பதவுரை

விண் எல்லாம் கேட்க

மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்

அழுதாய்;

(நீ அப்படி அழுகையில்)

நான்

(தாயாகிய) நான்
விரும்பி

ஆதரங்கொண்டு
உன் வாயில்

உன் வாயிலே
அதனை

(நீ மண் உண்ட) அதை
நோக்கி

பார்க்கும்போது

(அவ்வாயில்)

மண் எல்லாம் கண்டு

லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி

என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று

‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்

தெரிந்து கொண்டேன்;

(உன்னுடைய காதிலே)

புண் ஏதும் இல்லை

புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்

(கடிப்பிடும்போது) உன் காது சிறிது மடங்கும்;

(அதை மாத்திரம்)

இறை போது

க்ஷணகாலம்
பொறுத்து இரு

பொறுத்துக்கொண்டிரு;
நம்பி

பூர்ணனே!
கண்ணா

கண்ணனே!
கார் முகிலே

காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா

கடல்போன்ற  திருநிறத்தவனே!
காவலனே

ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!

என் முலை உணாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – காதில் கடிப்பிட வேணுமென்று யசோதை அழைத்துக் கொண்டிருக்கவும் கண்ணன் வராதிருந்ததுமல்லாமல் மண்ணையும் தின்றானாக அதற்காக அவள் கோபங்கொண்டு அவனையடிக்க அப்போது அவன் தனது வாயைத் திறந்துகொண்டு ஆகாயமுழுதும் தொனிபரவும்படி அழ அது கண்டு யசோதை ‘இவன்  எவ்வளவு மண் தின்றிருப்பன்’ என்பதை வாயிலுள்ள மண்சுவட்டைக் கொண்டு தெரிந்துகொள்வோமென்று அவன் வாயை விரும்பிப் பார்க்கையில் அவன் வாயினுள்ளே உலகங்களை யெல்லாம் முன்போலக் கண்டு ‘இவனை நமது மகனென்றெண்ணி அடித்தோமே! இவன் ஸர்வேச்வரனன்றோ’ என்று அஞ்சியிருக்க கண்ணன் தன்னை யசோதை இப்படி வேறாக எண்ணினதைப் பொறாமல் அதனை அவள் மறந்து தன் பிள்ளையென்றே கொண்டு தழுவும்படி ஸமீபித்து நிற்க அப்போது அவள் காதில் கடிப்பையிடும்படி முயல, கண்ணன் அது கண்டு அம்மா! என் காது குத்தியதனால் புண்ணாயிருக்கிறது நோகும்; ஆதலால் அது எனக்கு வேண்டா என்று மறுக்க யசோதை  ‘உன் காதில் புண் ஒன்றுமில்லை ஆறிவிட்டது; இந்தக் குண்டலத்தை இடும்போது உன் காது சற்று மறியும்; அதை மாத்திரம் பொறுத்துக்கொள்ள வேணும்’ என்று சொல்ல கண்ணன் அதற்கு இசைந்து நிற்க யசோதை அவனைப் பலபடியாகக் கொண்டாடக் கடிப்பிடும்போது  உண்டாகும் நோவைப் பொறுப்பதற்காக  முலையுண்ண வேணுமென்று விரும்புகின்றாள்.  நோக்கி – நோக்க : எச்சத்திரிபு.  அஞ்சி – ‘இவனை நம்மகனென்றெண்ணி யடித்தோமே; இவன்றானிப்போது நாராயணனாயிராநின்றானே’ என்று அஞ்சினளென்க.  ???? நன்-‘மது’ என்ற அஸுரனைக் கொன்றவன்.  “என்றிருந்தேன்” என்பது மொருபாடம்.  ஆகாசம் சப்தகுணகமாதலால் “விண்ணெல்லாம் கேட்க” என்றது.

English Translation

O Madhusudana! When I pried open your mouth out of concern for you, your bawl was heard all over the skies; fear struck my heart when I saw all the worlds in it.  I realized you are the Lord.  See, this will not hurt one bit, your ears will heal, bear it for a wee moment, my dark-cloud Lord! My ocean-hued Lord! My protector, dear as my eyes! O whole One! Here take suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top