(1340)

(1340)

கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன்

படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன் கோயில்,

படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடகத் தொலிபோய்,

அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே.

 

பதவுரை

முன் கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி

முன்பொருகால், மிகக் கொடிதான விஷத்தையுடைத்தான காளியநாகம் கிடந்த பொய்கையைக் கலங்கச்செய்து (அந்த நாகத்தை)

அலக்கழித்து

வருந்தும்படிபண்ணி

அவன் தன் படம் இற பாய்ந்து

அக்காளியனுடைய படங்களானவை முறியும்படியாக (கடம்ப மரத்தினின்று பாய்ந்து)

பல் மணி சிந்த

(படத்திலுள்ள) மணிகளெல்லாம் சிந்தும்படியாக

பல் நடம் பயின்றவன் கோயில்

(அப்படங்களின் மீது நின்று) பலவகை நர்த்தனங்களைப் பண்ணின பெருமான் ஸந்நிதி (எதுவென்னில்)

படம் அரவு அல்குல் பாவை நல்லார்கள்

படமெடுத்த பாம்போடொத்த நிதம்பத்தையுடையரான அழகிய மாதர்கள்

பயிற்றிய நாடகத்து

பழகிய நாடகத்தினுடைய

ஒலி

ஓசையானது

அடை புடை போய் தழுவி

அடுத்த பக்கங்களிலெங்கும் சென்று பரவி

அண்டம் நின்று அதிரும்

ஆகாசத்திலுஞ் சென்று அதிரப்பெற்ற

திருவெள்ளியங்குடி அதுவே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடைபுடை=அடை – அடுத்திருக்கிற, புடை – பக்கங்களிலெல்லாம் என்று பொருளுரைக்கப்பட்டது.  பெரியவாச்சான்பிள்ளை யருளிய வியாக்கியானத்தில் “ (அடைபுடைதழுவி) அஹோராத்ர மணைந்து ஆகாசத்திலே நின்று கோஷியா நிற்குமாய்த்து” என்று காணப்படுதலால் “அடைபுடை” என்பதற்கு ‘இரவும் பகலும்’ என்று பொருள் கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது; இச்சொல் இப்பொருளில் சில நாடுகளில் வழங்கப்படுவதாக இருந்ததுபோலும்.

 

English Translation

He who in yore went and disturbed the terrible venom-spitting Kaliya’s water haunt, leapt on his many heads, dancing his feet on it, spilling the gems from it, lives where thin-like-the-serpent-waisted good dames there practise the art of good dancing, the sound of their ensemble fills everywhere in Tiruvelliyangudi, that is it!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top