(1385)
ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய்,
தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே,
பதவுரை
|
வானும் மண்ணும் நிறைய புகுந்த ஈண்டி வணங்கும் |
– |
விண்ணுலகத்திலுள்ளாரும் மண்ணுலகத்திலுள்ளாரும் ஏராளமாக வந்து சேர்ந்து ஒன்றாகத்திரண்டு வணங்கப்பெற்றதும், |
|
நல் தேனும் பாலும் கலந்தன்னவர் |
– |
மதுரமான தேனும் பாலும் ஒன்றாகச் சேர்ந்தாற்போலே ஏகரஸராயிருக்கிற பக்தர்கள் |
|
சேர் |
– |
சேர்ந்திருக்கப்பெற்றதுமான |
|
தென் அரங்கம்; |
||
|
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய் |
– |
வராஹமாகவும் மத்ஸ்ய கூர்மமாகவும் நரஸிம்ஹமாகவும் வாமநனாகவும் திருவவதரித்தவனாய் |
|
தானும் ஆய |
– |
ஸ்ரீராமபிரானாகவும் திருவவதரித்தவனான |
|
தரணி தலைவன் |
– |
ஸர்வலோகேச்வரனுடைய |
|
இடம் என்பர் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இரண்டாமடியில், “தானுமாய” என்றது ஸ்ரீராமாவதாரத்தை யுட்கொண்டதேயாம். மேலே எட்டாம்பத்தில் தசாவதாரங்களையும் சேர்த்துச் சொல்லுகிற பாசுரத்தில் “மீனோடா மை கேழலாரி குறளாய் முன்னுமிராமனாய்த் தானாய்ப், பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கறிகியுமானான்றன்னை” என்றதில் ஸ்ரீராமனைச் சொல்லவேண்டு மிடத்துத் ‘தானாய்’ என்றதும் குறிக்கொள்ளத்தக்கது.
தேனும் பாலுங் கலந்தன்னவர் = தேனம் தேனும் கலந்தார்போலும் பாலும் பாலும் கலந்தாற்போலும் வேற்றுமையின்றியே ஏகரஸமாகக் கலந்திருக்கின்ற பரமரஸிகர்கள் என்றவாறு. ‘கலந்தாலன்னவர்’ என்பது ‘கலந்தன்னவர்’ எனத்தொக்கது.
இவ்விடத்து வியாக்கியானத்திலே பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காண்மின் :- “நித்யஸூரிகள் ஸம்ஸாரிகள் என்கிற வாசி தெரியாதே ஒரு நீராய்ப் பரிமாற நிற்பர்கள். தேசாந்தரங்களில் முன்பு கண்டறியாதார் வந்து போகப்புக்கால் ‘பிரிந்துபோகா நின்றோமே!’ என்று கண்ணுங் கண்ணீருமாயிறே யிருப்பது.” என்று.
English Translation
Oh, they say the Southern Arangam, -filled with milk-and-honey-sweet devotees from all over the Earth and Sky who throng to offer worship, -is the abode of the Lord of the Earth who came as a boar, a fish, a man-hon, a manikin and as himself.
