(1375)

(1375)

முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த,

அன்ன மாகியன் றருமறை பயந்தவ னேஎனக் கருள்புரியே,

மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்,

தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே!

 

பதவுரை

மன்னு கேதகை சூதகம் என்ற இவை

–

மாறாதே பூத்திருக்கிற தாழைகளென்ன மாமரங்களென்ன இத்யாதி வ்ருக்ஷங்களை யுடைத்தான

வனத்து இடை

–

சோலைகளின் நடுவே

சுரும்பு இனங்கள்

–

‘சுரும்பு’ என்னுஞ்சாதி வண்டுகளின் கூட்டம்

தேன்ன என்ன

–

‘தென்னதென்ன’ என்றுபாட,

வண்டு

–

(சாதாரண) வண்டுகளானவை

இன் இசை முரல்

–

இனிமையான இசைப் பாட்டுக்களைப் பாடாநிற்கப்பெற்ற

திருவெள்ளறை, நின்றானே!;

முன் இ ஏழ் உலகு உணர்வு இன்றி

–

முன்பொருகால் இவ்வுலகங்களெல்லாம் அறிவு கெட்டு

இருள் மிக

–

அஜ்ஞாநாந்தகாரம் மேலிட்ட வளவிலே

உம்பர்கள் தொழுது ஏத்த

–

தேவர்கள் வணங்கித் துதிக்க

அன்று அன்னம் ஆகி அரு மறை பயந்தவனே

–

அப்போது ஹம்ஸரூபியாகி அருமையான வேதங்களை ஸம்பாதித்துக் கொடுத்தவனே!

எனக்கு அருள்புரி–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சுரும்பு என்பதும் வண்டு என்பதும் பரியாயமென்று பலர் நினைத்திருப்பதுண்டு: பரியாயமென்று கொள்ளலாமாயினும் ஜாதிபேதமுண்டு.  இதனை யறியாமல், இப்பாட்டில் மூன்றாமடியில் ‘சுரும்பினங்கள்’ என்று வந்திருக்க, மீண்டும் நான்காமடியில் ‘வண்டு’ என வருவது ஒவ்வாதென்றெண்ணிச் சிலர் பாடத்தை மாறுபடுத்தினர் – “தென்னதென்னவென்றின்னிசை முரல்” எனத் திருத்தினர்.  அதுவேண்டா; “தென்னவென்ன, வண்டின்னிசை முரல்” என்ற ஆன்றோர்பாடமே கொள்ளத்தக்கது. சுரும்பு சாதி வேறு, வண்டுசாதிவேறு என்க.  கீழ் (5-1-1) “அறிவதரியான்” என்ற பாட்டில் “நறிய மலர்மேல் சுரும்பாதுக்க…சிறை வண்டிசைபாடும்” என வந்ததும் குறிக்கொள்ளத்தக்கது.

கேதகை, சூதகம் – வடசொல் விகாரங்கள்

 

English Translation

O Lord residing in Tiruvellarai, amid screwpine-lined fields and Mango orchards where bees hum “Tena Tena’ and bumble-bees sing songs over the drone!  In the yore when the seven worlds were enveloped by the darkness of ignorance, you came as a swan worshipped by the celestials, and created the precious Vedas.  Pray grace me!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top