(1391)
தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் தோடணையாள் தடமென் கொங்கை
யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட பெருவயிற்றன் பேசில் நங்காய்,
மாமாய னென்மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கி லேனே.
பதவுரை
|
நங்காய்!, மங்கைமீர்!-; |
||
|
தாய் வாயில் சொல் கேளாள் |
– |
தாயாகிய என்னுடைய வாய்ச் சொல்லை (என்மகள்) கேட்பதில்லை; |
|
தன் ஆயத்தோடு அணையாள் |
– |
தனது தோழிமார்களுடன் கூடுவதில்லை; |
|
தட மென் கொங்கையே ஆர சாந்து அணியாள் |
– |
பருத்து மெல்லிதான (தனது) முலைகளையும் அழகாக சந்தனத்தினால் (முன்பு போல) அலங்கரிக்கின்றாளில்லை |
|
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் |
– |
‘என் ஸ்வாமி யெழுந்தருளியிருக்கிற திருவரங்கம் எங்கே?’ என்கிறாள்; |
|
பேய் மாய முலை உண்டு |
– |
பேய்ச்சியான பூதனை முடியும் படியாக (அவளது) முலைப் பாலைப் பருகி |
|
இ உலகு உண்ட பெருவயிற்றன் |
– |
இவ்வுலகங்களையும் அமுது செய்த பெரிய திருவயிற்றையுடையனான |
|
மா மாயன் |
– |
மிகக் ஆச்சர்ய பூதன் |
|
என் மகளை செய்தனகள் |
– |
என் பெண்பிள்ளைக்குச் செய்தவற்றை |
|
பேசில் |
– |
சொல்லப்புகுந்தால் |
|
மதிக்கிலேன் |
– |
அளவிட்டுச் சொல்ல மாட்டுகின்றிலேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நேற்றுவரையில் இவளுடைய போதுபோக்கு ஒருவகையாயிருந்தது; இன்று வேறுபட்டுவிட்டது. என் வார்த்தையில் இவள் வைத்திருந்த மதிப்பு சொல்லிமுடியாது; நான் காலாலே ஏவினதைத் தலையாலே செய்து தீரும்படி அவ்வளவு கௌரவம் என் பேச்சில் வஹித்திருந்த விவள் இன்று என் வார்த்தையைச் செவி தாழ்த்துக் கேட்பதுஞ் செய்கின்றிலள். என்னிலும் மிக்க அன்பு பாராட்டி யிருந்தாள் தோழிமார் பக்கல்; அவர்களைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியாதிருந்த விவளக்கு இப்போது ‘தோழிமார்’ என்றால் விஷமாயிராநின்றதே. ஆகவே, தோழிமாரைக்கொண்டு இவளைத்திருத்திக் கொள்வோம் என்று நினைக்கவும் அவகாசமில்லையாயிற்று. ஆயம் – தோழியர்.
தடமென்கொங்கையே ஆரச்சாந்தணியாள் = அழகுபெறத் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் விருப்பமற்றாள். ‘நமது கணவன் நம்மை இப்படி உபேக்ஷரித்திருக்க நமக்கு அலங்காரமேதுக்கு? என்று வெறுப்புற்றுக் கிடக்கிறாளென்கை. எம்பெருமான் திடீரென்று தன்னோடு ஸம்ச்லேஷிக்க வந்து சேர்ந்தால் அப்போது அவனது திருவுள்ளமுகக்கும்படி முன்னாடியே முலைத்தடங்களை அலங்கரித்து வைத்துக்கொள்ள வேண்டியிருந்தும் விரஹவ்யஸநத்தினால் அது செய்யமாட்டாதே கிடக்கிறாளென்கை. மென்கொங்கை = ஸ்தநங்களுக்கு வன்மை இலக்கணமாயிருக்க மென்மையையிட்டுக் கூறினதென்? என்னில், இங்குச்சொன்ன மென்மையாவது விரஹத்தைப் பொறுத்திருக்கமாட்டாமை. ‘இவன் ஸுகுமாரன்’ என்றால் ‘பசி பொறுக்கமாட்டாதவன்’ என்று பொருள்படுதல்போல. (இரண்டாமடியின் முதலிலுள்ள ஏகாரம் – பாதம் பூரிப்பது.)
பேய்மாயமுலையுண்டு = பேய்ச்சியினுடைய மாயமுலையை – விஷந்தடவப்பெற்று க்ருத்ரிமமான முலையை, என்றுமுரைக்கலாம். எம்பெருமானால் தன் மகளுக்கு நேர்ந்த நிலைமைகளை முதலில் ஒருத்தியோடே சொல்லத் தொடங்கி ‘நங்காய்’ என ஒருமையாக விளித்துச் சொல்லிக்கொண்டிருக்கையில் க்ரமேண பல மாதர் வந்து கூடி நின்றமையால் ‘மங்கைமீர்!’ எனப்பன்மையாக விளித்து முடித்தாள் திருத்தாய்.
English Translation
She does not heed my words nor talks to her girl-friend nor sandals her Risen breast, only asks “Where is my Lord’s abode, Tiruvarangam?” Sucker of ogress breast, Swallowed of all the world in a gulp. Wonder Lord, how can I accept what he did to my daughter frail!
