(1283)
தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,
கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,
மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,
தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
பதவுரை
|
மான் போலும் மென் நோக்கின் |
– |
மானின் நோக்குப்போன்ற அழகிய நோக்கையுடையராய் |
|
செய்ய வாயார் |
– |
சிவந்த அதரத்தையுமுடையரான பெண்கள் |
|
மரகதம் போல் |
– |
மரகதப்பச்சை போலே பசுமையாய் |
|
மடம் |
– |
அழகியதான |
|
கிளியை |
– |
கிளிப்பிள்ளையை |
|
கை மேல் கொண்டு |
– |
தங்கள் கைகளின் மேல்வைத்துக்கொண்டு |
|
தேன் போலும் மெல் மழலை |
– |
தேன் போலினியமிருதுவான பேச்சை |
|
புயிற்றும் |
– |
கற்பிக்கப்பெற்ற |
|
நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் |
||
|
செங்கண் மால்–;- |
||
|
தரணி ஆளன் தான் போலும் என்றுஎழுந்தான் |
– |
‘(இராமனென்கிற ஒரு சிறு மனிசன்) பூமியையெல்லாம் தானே ஆள்பலனாக நினைத்து அஹங்காரப்படுகின்றான்; |
|
அது கண்டு |
– |
அதை அறிந்தும் |
|
தரித்து இருப்பான் |
– |
(அந்த ராமனைத் தண்டியாமல்) பொறுத்திருப்பவன் |
|
அரக்கர் தங்கள் கோன்போலும் |
– |
ராக்ஷஸர்க்குத் தலைவனாவனோ’ |
|
என்று |
– |
என்றிப்படி நினைத்து |
|
எழுந்தான் |
– |
கிளர்ந்தவனான இராவணனுடைய |
|
குன்றம் அன்ன |
– |
மலைபோன்ற |
|
இருபது தோள் |
– |
இருபது தோள்களையும் |
|
உடன் |
– |
ஏககாலத்தில் |
|
துணித்த |
– |
அறுத்தொழித்த |
|
ஒருவன் கண்டீர் |
– |
தனிவீரன் காண்மின். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டின் முன்னடிகட்குப் பொருள் சொல்லுவது ஸூக்ஷம புத்திசாலிகளுக்கன்றி மற்றையோர்க்கு இயலாது. முற்காலத்தில், ஆப்பான் திருவழுந்தூரரையர் என்கிற ஒருஸ்வாமியும் இன்னுஞ்சில முதலிகளுமாக இதற்குப் பொருள் என்னவென்று ஆராயத் தொடங்கினர்; அவர்கட்குப் பொருள் தோன்றவில்லை; அப்போது பட்டர் மிகச் சிறுபிராயத்தவராயிருந்தார்; அப்போது அருளிச்செயல் மூலம் ஓதியிந்தாரல்லர் பட்டர்; ஆனாலும், பட்டர் சிறுபிராயமே தொடங்கி எல்லாவழிகளிலும் தமது ஸூக்ஷமபுத்தியைச்செலவிட்டுப் பலவகையான அர்த்த விசேஷங்களை வெளியிட்டுக்கொண்டு ஆச்சரியமாக விளங்கி வந்தமையால் பல பெரியோர்களும் பட்டரைப் பணிந்து அர்த்தங்கள் கேட்பதுண்டு; அப்படியே கீழ்ச்சொன்ன அரையர் மதலானாரும் பட்டரிடம் சென்று ‘ இப்பாட்டுக்குப் பொருள் என்ன?’ என்று கேட்டனர்; அப்போதே பட்டர் ‘பாசுரத்தை விளங்கச்சொல்லுங்கள்’ என்று சொல்லி ஒருகால் பாசுரத்தைக் கேட்டவாறே, “தான்போலும் என்றெழுந்தான் தரணியாளன் அதுகண்டு தரித்திருப்பானரக்கர் தங்கள் கோன்போலும்” என்கிற வரையில் இராவணன் வார்த்தையின் அநுவாதம் – என்று சொல்லிப் பொருளை விளக்கிக்காட்டினர். இங்கே வியாக்கியான வாக்கியம் வருமாறு :- “ஆப்பான் திருவழுந்தூரரையரும் மற்றுமுள்ள முதலிகளுமாக ‘இப்பாட்டிற் சொல்லுகிறதென்?’ என்று பட்டருக்கு விண்ணப்பஞ்செய்ய, ஒருகால் இயலைக் கேளா, ‘ராவணன் வார்த்தைகாண்’ என்றருளிச் செய்தார். (தான்போலுமித்யாதி) ஒரு க்ஷத்ரியன்போலே எதிரியென்று வந்தான்; அதுகண்டு தரித்திருப்பான் ராக்ஷஸராஜனாம் – என்று கிளர்ந்தெழுந்த ராவணனுடைய மலைபோலேயிருக்கிற இருபது தோளையும் துணித்த தனிவீரன்கிடீர்” என்று.
இப்பொருளை விவரித்துக் காட்டுவோம்; – திருத்தெற்றியம்பலத் தெம்பெருமான் யாவனென்னில், இராவணனுடைய மலைபோன்ற இருபது தோள்களையும் துணித்த தனிவீரன்; அந்த இராவணன் எப்படிப்பட்டவனென்னில்; மிகவும் அஹங்காரந்தோற்றச் செருக்கி வார்த்தை சொல்லிக்கொண்டே போர்க்களத்தில் கிளர்ந்தவன்; அப்படி அவன் செருக்குடன் சொன்னவார்த்தை ஏதென்னில்; தான் போலுமென்றெழுந்தான் தரணியாளன் அதுகண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும்’ என்கிற இவ்வார்த்தையாம். இவ்வார்த்தைக்கு அர்த்தமேதென்னில்; இராமனென்று ஒரு பயல் தான் பெரியவொரு க்ஷத்ரியன் போல எதிரியென்று வருகிறதாம்; அதைக்கண்டு ஒருவன் பொறுத்திருக்கிறதாம்; அப்படி பொறுத்திருப்பவன் ராக்ஷஸர்கட்குத் தலைவனென்று பெயர் சுமந்திருப்பதாம்; என்று வெகுஅற்பமாகச்சொல்லி யுத்தத்திற்குக் கிளம்பினானென்கை. இதனால், இராமன் தனக்கு எதிரியென்று புறப்படுவதற்கும் தகுதியற்றவன் என்பதும், இராமன் போர்க்கு வரச்செய்தேயும் தான் ஆறியிருப்பது தன்பெருமைக்குத் தகாதென்பதும் தெரிவிக்கப்பட்டனவாம்.
English Translation
“Are you any match for me?”, the strong Rakshasa king challenged, whereupon the Valiant Earth-ruler Lord returned the challenge, and destroyed the twenty arms and all of the Rakshasa, see, he is my senkankal, residing of Nangur, -where tawn-eyed red-lipped dames hold their emerald-like pretty parrots on their hands and teach them to speak honey-sweet tender cajolling words, -in his temple of Tirutetri Ambalam.
