(128)

(128)

அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே

இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுமுச்சி கொண்டதாலோ

வரவும்காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய

திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே.

பதவுரை

அரவு அணையாய்

–

சேஷசாயியானவனே!
ஆயர் ஏறே

–

இடையர்களுக்குத் தலைவனே!
நீ இரவும் உண்ணாத

–

நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல்
உறங்கிப் போனாய்

–

உறங்கிப்போய்விட
இன்றும்

–

இப்போதும்
உச்சி கொண்டது

–

(பொழுது விடிந்து) உச்சிப்போதாய்விட்டது;
ஆல்

–

ஆதலால்
அம்மம் உண்ண

–

முலையுண்பதற்கு
துயில் எழாய்

–

(தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்;
வரவும் காணேன்

–

(நீயே எழுந்திருந்து அம்மமுண்ணவேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்!

(உனக்குப் பசியில்லை யென்போமென்றா)

வயிறு அசைத்தாய்

–

வயிறுந்தளர்ந்து நன்றாய்;
வன முலைகள்

–

(எனது) அழகிய முலைகள் (உன்மேல் அன்பினால் நெறித்து)
சோர்ந்து பாய

–

பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
திரு உடைய

–

அழகை உடைய
வாய் மடுத்து

–

(உன்) வாயை வைத்து
திளைத்து

–

செருக்கி
உதைத்து

–

கால்களாலே உதைத்துக் கொண்டு
பருகிடாய்

–

முலையுண்பாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – (அரவணையாய்) எம்பெருமான் திருவனந்தாழ்வானாகிற படுக்கையைவிட்டு க்ருஷ்ணனாகத் தோன்றினாலும் சென்றாற் குடையாம் என்கிறபடியே அவ்வக்காலத்துக்கு ஏற்ற கோலங்கொண்டு அடிமை செய்பவனான கரத்திருவனந்தாழ்வான் கண்ணபிரானுக்குத் திருப்பள்ளி மெத்தையாய் இனிது தூங்குவதற்கு உதவுகின்றானென்க.  அம்ம முண்ண என்றது – கண்ணனுடைய குழந்தைப் பருவத்திற்குத் தக்கபடியாக யசோதை சொல்லியதாகும்.  சிங்கம் முதலியவற்றின் ஆணை யுணர்த்துகின்ற ஏறு என்ற பெயர் இலக்கணையால் ப்ரதாநன என்ற பொருளைத்தரும்.  இரண்டாமடியின் ஈற்றிலுள்ள ஆல் – ஆதலால்  என்பதன் சிதைவு; இனி ஆல் ஓ – இரண்டும் இரக்கப் பொருளைக் குறிப்பன வென்றுமாம்.  வயிறசைந்தாய் = நன்னூலார் சினை வினை சினையொடும் முதலொடுஞ் செறியும் என்றாராதலின் சினைவினை முதலோடு செறிந்ததென்க.  வனப்புமுலை என்கிறவிது – வனமுலை என்று விகாரப்பட்டதென்பர்; வனமே நீரும் வனப்பு மீமமுந் துழாயும் மிகுதியுங் காடுஞ் சோலையும் புற்றுமனவே புகலுமெண் பேரே என்ற நகண்டின்படி வனம் என்ற சொல்லோ அழகைக் குறிக்குமென்பதும் பொருந்தும்.

English Translation

O cowherd child, Lord who reclines on a serpent-bed, wake up to take suck.  Last night you went to sleep without supper, it is almost mid-day now.  I do not see you coming.  Your belly is flat, my heavy breasts are overflowing.  Place your auspicious lips and take suck, beating and kicking.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top