(1045)
சேயனணிய னெனசிந்தையுள் நின்ற
மாயன் * மணிவா ளொளி வெண்டரளங்கள் *
வேய்விண்டுதிர் வேங்கடமா மலைமேய *
ஆய னடியல்லது மற்றறியேனே.
பதவுரை
சேயன் | – | (பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும் |
அணியன் | – | (பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும் |
என சிந்தையுள் நின்ற மாயன் | – | என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும், |
வேய் விண்டு | – | மூங்கில்களானவை பிளவுபட்டு |
ஒளி வெண்தரளங்கள் | – | பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும் |
வாள்மணி | – | ஒளியுள்ள ரத்னங்களையும் |
உதிர் | – | உதிர்க்குமிடமான |
வேங்கடம் மா மலை மேய | – | திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான |
ஆயன் | – | ஸ்ரீக்ருஷ்ணனுடைய |
அடி அல்லது | – | திருவடிகளையொழிய |
மற்று | – | வேறொன்றையும் |
அறியேன் | – | அறியமாட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1045:
சேயன், அணியன், என சிந்தையுள் நின்ற
மாயன், மணி வாள், ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது, மற்று அறியேனே. [1-10-8]
* * * – [சேயனணியன்.] இப்படி என்னெஞ்சிலே நப்பின்னைப்பிராட்டியோடுங்கூட வந்து புகுந்தானானபின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுகையொழிய வேறொன்றும் நானறியேன் என்கிறார்.
எம்பெருமான் சிலர்க்குச் சேயன், சிலர்க்கு அணியன்; சேயனென்றால் தூரத்திலிருப்பவனென்கை; அணியனென்றால் ஸமீபத்திலிருப்பவனென்கை.தன்னை உகவாதார்க்கு அவன் எட்டாதவன்; தன்னை உகந்தார்க்கு அவன் கையாளாயிருப்பவன். துரியோதநாதியர் திறத்திலும் பாண்டவர் திறத்திலும் இதனைக்காணலாம். சிறிது பக்தியுடையார்க்கும் அவன் அணியன் என்பதை என்னைக்கொண்டேயறியலாமென்பவர் போல என் சிந்தையுள் நின்றமாயன் என்கிறார். என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து நித்யவாஸம்பண்ணுகிற ஆச்சரிய சீலன் அணியனென்பது சொல்லவேணுமோ வென்கை.
மணிவாளொளிவெண்தரளங்கள் வேய்விண்டுதிர் என்பது திருவேங்கட மலைக்கு விசேஷணம். யானைகளின் கும்பஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்களும் மணிகளும் உண்டாவதாக நூல்கள் கூறும். வேய்களானவை விண்டு விரிந்து, வாள் (ஒளி) பொருந்திய மணிகளையும், ஒளியும் வெண்ணிறமும் பொருந்திய தரளங்(முத்து)க்களையும் உதிர்க்குமிடமான திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸர்வஸுலபனுடைய திருவடிகளைத் தவிர வேறொன்றுமறியேன்.
தரளம் – முத்து ; வடசொல். ….. … … (8)
English Translation
Lord near, Lord afar, wonder-Lord who stays in my thoughts,-he is the resident of mighty Venkatam hills where bamboos burst and spill brilliant gems and lustrous pearls. Other than the lotus feet of the cowherd Lord, I have no refuge.
