(1038)
கண்ணார் கடல் சூழிலங்கைக் கிறைவன் தன் *
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்! *
விண்ணோர் தொழும் வேங்கட மாமலைமேய *
அண்ணா ! அடியே னிடரைக் களையாயே.
பதவுரை
கண் ஆர் கடல் சூழ் | – | விசாலமான கடலாலே சூழப்பட்ட |
இலங்ககைக்கு இறைவன் தன் | – | லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய |
திண்ஆகம் பிளக்க | – | திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக |
சரம் | – | அம்புகளை |
செல உய்த்தாய் | – | செலுத்தினவனே! |
விண்ணோர் தொழும் | – | (பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற |
வேங்கடம் மாமலை | – | திருமலையிலே |
மேய அண்ணா | – | எழுந்தருளி யிருக்கிற பெருமானே! |
அடியேன் இடரை களையாய் | – | என் துன்பங்களை நீக்கியருள வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1038
கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் – தன்
திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்!
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா ! அடியேன் இடரைக் களையாயே. [1-10-1]
* * * –[கண்ணார்கடல் சூழ்.] மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை; அவனும் இவனும் ஒருவனேயென்கிற ஒற்றுமை நயம் தோற்றுதற்காகவென்க. இராவணனாலே குடியிருப்பு இழந்து கிடந்த தேவர்களெல்லாரும் களித்து வந்து தொழும்படியான திருவேங்கட மலையிலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமானே! இவ்விருள் தருமாஞாலத்தில் இருப்பு-பெருந்துக்கம் என்றுணர்ந்த என்னுடைய இவ்விடரைப் போக்கியருளாய் என்கிறார்.
கண்ஆர்கடல் = வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும்படி யான (அழகிய) கடல் என்று முரைக்கலாம். ….. …. ……. (1)
English Translation
O Elder, Resident of Venkatam hills where the celestials offer. Worship! You rained arrows and rent the mighty chest of the kirig of ocean-hemmed Lanka. Rid me, your servant, of my grief.
