(1020)
நின்ற மாமருதிற்றுவீழ நடந்த நின்மலன் நேமியான்*
என்றும் வானவர்கைதொழு மிணைத்தாமரை யடியெம்பிரான்*
கன்றிமாரி பொழிந்திடக் கடி தாநிரைக் கிடர்நீக்குவான்*
சென்று குன்றமெடுத்தவன் திருவேங்கடமடை நெஞ்சமே!
பதவுரை
நின்ற | – | பேராமல் நின்று கொண்டிருந்த |
மா மருது | – | பெரிய மருதமரங்களிரண்டும் |
இற்று வீழ | – | முறிந்து விழும்படியாக |
நடந்த | – | நடைகற்ற |
நின்மலன் | – | நிர்மலனும், |
நேமியான் | – | திருவாழியை யுடையவனும், |
என்றும் | – | எப்போதும் |
வானவர் | – | நித்யஸூரிகள் |
கை தொழும் | – | ஸேவிக்கப்பெற்ற |
தாமரை அடி இணை எம்பிரான் | – | இரண்டு திருவடித் தாமரைகளை யுடைய ஸ்வாமியும், |
கன்றி | – | (இந்திரன்) கோபங்கொண்டு |
மாரி | – | மழையை |
பொழிந்திட | – | பெய்வித்தவளவிலே |
ஆ நிரைக்கு | – | பசுக்கூட்டங்களுக்கு |
இடர்நீக்குவான் | – | துன்பம் தொலைப்பதற்காக |
சென்று | – | போய் |
குன்றம் எடுத்தவன் | – | கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற |
திருவேங்கடம் நெஞ்சமே! அடை-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1020
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன், நேமியான்,
என்றும் வானவர் கைதொழும் இணைத் தாமரை அடி எம் பிரான்,
கன்றி மாரி பொழிந்திட, கடிது ஆ-நிரைக்கு இடர் நீக்குவான்,
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேங்கடம் அடை, நெஞ்சமே!—(1-8-3)
* * * -[நின்றமாமருது.] சயனித்தருளும்படியையும் நின்றருளும்படியையும் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்; நடந்தருளும்படியை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார். கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த யசோதை கிருஷ்ணனைத் திரு வயிற்றில் கயிற்றினால் கட்டி ஒருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வாலை இழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே எழுந்தருளியபொழுது அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில், முன் நாரதர் சாபத்தால் அம்ம ரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர். இந்த குபேரபுத்திரர்கள் முன்பு ஒரு காலத்தில் பல அப்ஸரஸ் ஸ்த்ரீகளுடனே ஆடையில்லாமல் ஜலக்ரீடை செய்துகொண்டி ருக்கையில் நாரதமாமுனிவர் அங்கு எழுந்தருள, மங்கையர் அனைவரும் நாணங்கொண்டு ஆடை யெடுத்து உடுத்து நீங்க, இந்த மைந்தர் மாத்திரம் மதுபான மயக்கத்தினால் வஸ்த்ரமில்லாமலேயிருக்க, நாரதர் கண்டு கோபங்கொண்டு “மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்” என்று சபிக்க, உடனே அவர்கள் வணங்கி வேண்டிக் கொண்டதற்கு இரங்கி நெடுங்காலஞ் சென்ற பின்பு “திருமால் உங்களருகே நெருங்குஞ் சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னைய வடிவம் பெற்று மீள்வீர்” என்று சாபவிடை கூறிப் போயினர். இப்படி சாபத்தினால் மரங்களான இவற்றில் கம்ஸனால் ஏவப்பட்ட இரண்டு அஸுரர்களும் ஆவேசித்துக் கிடந்தனர் என்று கொள்ளல் வேண்டும்; “ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை” என்றும், “பொய்ம்மாய மருதான வசுரரை” என்றும் பெரியாழ்வாரருளிச் செய்திருத்தலால்.
குன்றமெடுத்தவரலாறு வருமாறு:- கண்ணபிரானுடைய அதிமாநுஷ சீல வ்ருத்தவேஷங்களைக் கண்டு ஆயர்களனைவரும் இவனே நம் குலக்கொழுந்து; இவன் கட்டளைப்படியே நாம் நடக்க வேண்டும்’ என்று நிச்சயித்திருந்தனர்; இங்ஙனமிருக்கையில் சரத்காலம் வந்தது; அப்போது இடையர்கள் வருஷந் தோறும் நடத்துவதுபோல் வழக்கப்படி இந்திரனுக்குப் பூஜை செய்யப் பற்பல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜாதிரவ்யங்களுமாகிய இவற்றைச் சேகரிப்பதைக் கண்டு கிருஷ்ணன் “ஓ பெரியோர்களே! நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் ஜீவிக்கிறோமோ அதற்கே பூஜை செய்வது தகுதி; இக்கோவர்த்தநகிரியே பசுக்களுக்குப் புல்லுந் தண்ணீருங் கொடுத்துக் காப்பாற்றுகின்றது; இந்திரனால் நமக்கு என்ன பயனுண்டு? ஒன்றுமில்லை; ஆகையால் நீங்கள் இப்பூசனையனைத்தையும் இம்மலைக்கே இடுங்கள்” என்ன, இடையர்கள் இதைக் கேட்டு அங்ஙனமே செய்ய, கண்ணபிரான் தானே ஒரு தேவதா ரூபங்கொண்டு அவற்றை முற்றும் அமுது செய்தருள, அவ்விந்திரன் மிக்க கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களை ஏவி, கண்ணன் விரும்பி மேய்க்கிற இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழு நாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணபிரான் கோவர்த்தன மலையை யெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா வுயிர்களையுங் காத்தருளினன்.
மருதமரங்கள் இற்று முறிந்து விழும்படி நடைகற்றவனும், அப்போது தன்மேல் சிறிதும் தோஷம் தட்டாதபடி தான் குறையொன்றுமின்றிக்கே விளங்கினவனும், திருவாழியைக் கையிலேயுடையவனும், எப்போதும் நித்யஸூரிகள் வந்து தொழப்பெற்ற திருவடித்தாமரைகளை யுடையவனும், இந்திரன் பசிக் கோபங்கொண்டு மழை பெய்வித்த காலத்திலே ஆநிரைகளின் துன்பத்தை ஒரு நொடிப்பொழுதிலே போக்குவதற்காகக் கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்றவனுமான பெருமானுடைய திருவேங்கடமலையை நெஞ்சமே! அடைந்திடு என்றாராயிற்று.
English Translation
The twin Marudu trees broke and fell when the innocent child went between them. Celestials worship Him as discus wielder and bow to his twin lotus feet. He protected the cows against an angry hailstorm, by lifting the Govardhana Mountain. He reside in Tiruvenkatam,-thitherward, O Heart!
