(1021)
பார்த்தற்காயன்று பாரதம் கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்*
கோத்தங்காயர்தம் பாடியில் குரவைபிணைந்த வெங்கோவலன்*
ஏத்துவார்தம் மனத்துள்ளா னிடவெந்தை மேவிய வெம்பிரான்*
தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ் திருவேங்கடமடை நெஞ்சமே!
பதவுரை
அன்று | – | முற்காலத்தில் |
பார்த்தற்கு ஆய் | – | அர்ஜூநனுக்காக |
பாரதம் | – | பாரத யுத்தத்திலே |
கை செய்திட்டு | – | கையும் அணியும் வகுத்து |
வென்ற | – | வெற்றிபெற்ற |
பரம் சுடர் | – | பரஞ்சோதியானவனும், |
அங்கு ஆயர்தம் பாடியில் | – | அங்கே திருவாய்ப் பாடியிலே |
குரவை கோத்து பிணைந்த | – | ராஸக்ரீடை செய்தருளின |
எம் கோவலன் | – | நமது கோபாலனும், |
ஏத்துவார்தம் | – | தன்னைத் துதிப்பவர்களுடைய |
மனத்து | – | நெஞ்சிலே |
உள்ளான் | – | வஸிப்பவனும் |
இடவெந்தை | – | திருவிடவெந்தையிலே |
மேவிய | – | பொருந்திய |
எம்பிரான் | – | அஸ்மத் ஸ்வாமியுமானவன் எழுந்தருளியிருக்கப்பெற்றதும் |
தீர்த்தம் நீர் தட சோலை சூழ் | – | புண்ய தீர்த்தங்களாலும் பெரிய சோலைகளாலும் சூழப்பெற்றதுமான |
திருவேங்கடம் நெஞ்சமே! அடை | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1021
பார்த்தற்கு ஆய், அன்று, பாரதம் கைசெய்திட்டு வென்ற பரஞ்சுடர்,
கோத்து அங்கு ஆயர்- தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்,
ஏத்துவார்- தம் மனத்து உள்ளான், இடவெந்தை மேவிய எம் பிரான்,
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை, நெஞ்சமே!—(1-8-4)
* * *–(பார்த்தற்காயன்று.) பாண்டவர்களுக்காகப் பாரதயுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி ஆச்ரிதர்களுக்காகக் காரியஞ் செய்யப்பெற்றதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், இடைச்சிகளோடு ராஸக்ரீடை யென்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதே யிருப்பவனும், இடவெந்தை யென்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமானுடைய தாய், பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திரு வேங்கட மலையைச் சென்று சேர் மனமே!
கண்ணபிரான், பாண்டவர் துர்யோதநாதியர் என்ற இருவகுப்பினரையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதநாதியரிடம் தூதாகச் சென்று பாண்டவர்க ளும் நீங்களும் பகைமை கொள்ள வேண்டா; ராஜ்யத்தில் இருவர்க்கும் பாக முண்டு; ஆதலால் ஸமபாகமாகப் பிரித்துக்கொண்டு ஸமாதாநமாக அரசாட்சி செய்து வாழுங்கள்’ என்று பலபடியாக அருளிச் செய்ய, அந்தச் சொல்லுக்குச் சிறிதும் ஸம்மதியாமல் ‘பராக்ரமமிருந்தால் போர் செய்து ஜயித்துக்கொள்ளட்டும்; இந்தப் பூமி வீரர்க்கே உரியது’ என்று மிக்க செருக்குத் தோற்றச் சொல்லவே, தான் பாண்டவபக்ஷபாதியாயிருந்து எதிரிகளைத் தோற்பித்தன னென்க. பாரதம்கை செய்திடுதலாவது – பாரதயுத்தத்திலே அணிவகுத்தல் முதலிய வேண்டிய ஸஹாயங்களைச் செய்தல்.
ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்ரீ பாகவதம் முதலியவற்றில் ராஸக்ரீடை எனப் படுவது தமிழில் குரவைக் கூத்து’ எனப்படும்; “***” = “அங்கநாமங்கநா மந்தரே மாதவ மாதவம் மாதவஞ் சாந்தரே ணாங்கரா ” என்றபடி ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணபிரானாகப் பல உருவெடுத்துக் கை கோத்தாடும் கூத்து.
English Translation
The radiant Lord fought a victorious war for Arjuna. He is. The cowherd Lord Gopala who danced the Rasa with the Gopis. He resides in ldavendai and in the hearts of those who worship Him, and amid groves and holy springs in Tiruvenkatam,-thitherward, O Heart!
