(1019)
பள்ளியாவது பாற்கடலரங்கமிரங்க வன்பேய்முலை *
பிள்ளையா யுயிருண்டவெந்தை பிரானவன் பெருகுமிடம் *
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ண னென்றெண்ணி * நாடொறும்
தெள்ளியார் வணங்கும்மலைத் திருவேங்கடமடை நெஞ்சமே!
பதவுரை
வன் பேய் | – | கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள் |
இரங்க | – | கதறும்படியாக |
முலை | – | (அவளது) முலையை |
பிள்ளை ஆய் | – | சிறு குழந்தையாயிருக்கச் செய்தே |
உயிர் | – | உயிருடன் |
உண்ட | – | உறிஞ்சி அமுதுசெய்த |
எந்தை பிரான் | – | ஸ்ரீக்ருஷ்ணபகவான் |
பள்ளி ஆவது | – | பள்ளி கொள்ளுமிடமாவது |
பாற்கடல் அரங்கம் | – | திருப்பாற்கடலும் திருவரங்கமுமாம்; |
அவன் | – | அப்பெருமான் |
பெருகும் இடம் | – | வளருகிற இடமாயும், |
தெள்ளியார் | – | தெளிந்த ஞானிகள், |
வெள்ளியான் கரியான் மணி நிறம் வண்ணன் என்று எண்ணி | – | (கிருதயுகத்தில்) வெளுத்த நிறத்தனாயும் (கலியுகத்தில்) கறுத்த நிறத்தனாயும் (த்வாபரயு கதில்) சாமநிறத்தனா யுமிருப்பவன் என்று தியானித்துக் கொண்டு |
நாள் தொறும் | – | ஒவ்வொரு நாளும் |
வணங்கும் | – | வணங்கப்பெற்றதாயு முள்ள |
திருவேங்கடம் மலை | – | திருமலையை |
நெஞ்சே அடை | – | மனமே! ஆச்ரயி. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1019
பள்ளி ஆவது பாற்கடல், அரங்கம் ; இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான்-அவன் பெருகும் இடம் –
வெள்ளியான், கரியான், மணி நிற வண்ணன் என்று எண்ணி, நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை, நெஞ்சமே!—(1-8-2)
* * * -(பள்ளியாவது பாற்கடல்.) கம்ஸனால் ஏவப்பட்டு முலை கொடுக் கிற வியாஜத்தாலே ஸ்ரீ க்ருஷ்ண சிசுவை முடித்திடவேணுமென்று முலையிலே விஷம் தடவிக்கொண்டு தாய்போல வந்த பூதனையென்னும் பேய்ச்சியானவள் கதறும்படியாக அவளுடைய முலையையும் உயிரையும் உறிஞ்சியுண்ட பெருமான், பிரமன் முதலியோர்க்கு முகங்கொடுப்பதற்காகப் பள்ளி கொண்டருளுமிடம் திருப்பாற்கடல்; அவ்வளவு தூரம் சென்று கிட்டமாட்டாத ஸம்ஸாரிகளுக்கும் முகம்கொடுப்பதற்காகப் பள்ளிகொண்டருளுமிடம் திருவரங்கம் பெரியகோயில். (பூதனையை முடித்தது தொட்டில் பருவமாக இருந்த ஸமயத்திலாதலால் உட்காரவும் நிற்கவும் மாட்டாமல் சயனமேயான அந்த நிலைமையைத் திருப்பாற் கடலிலும் திருவரங்கத்திலும் ஸேவிக்கலா மென்கை. அதற்குப் பிறகு, நிற்கக் கற்ற நிலைமை திருவேங்கடமலையிலே காணத்தக்கதா பிராநின்றது என்கிறார் – அவன் பெருகுமிடம் திருவேங்கடம்மலை என்று. பெருகுதலாவது – முன்னின்ற நிலைமையிற்காட்டிலும் அபிவிருத்தி பெறுதல்; சயன நிலைமையிற்காட்டிலும் பெருக்கமடைகிற நிலைமை – தரையில் காலூன்றி நிற்கும் நிலைமையாதலால் இங்கே பெருகுமிடம் என்றது நிற்குமிட மென்றபடி. “தொட்டிற்பிள்ளை பேயுயிருண்டபின்பு நிற்கக் கற்றது திருமலையிவேயென்று கருத்து” என்றார் அரும்பதவுரைகாரரும்.
அந்தத் திருமலை எப்படிப்பட்டதென்னில்; நாள்தோறும் தெள்ளியார் வந்து வணங்கும்படியானது. தெள்ளியார் என்றது வேறொரு பலன்களை விரும்பாத ஸ்வரூபத் தெளிவுடைய பரமைகாந்திகளைச் சொன்னபடி. அவர்கள் எவ்விதமாக தியானித்துக்கொண்டு வணங்குகின்றன ரென்றால், 1. பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும்புறம் போலுநீர்மை’ இத்யாதியிற் சொல்லுகிறபடியே – கிருதயுகத்தில் வெளுத்த நிறத்தையுடையனாய், கலியுகத்தில் கறுத்த நிறத்தையுடையனாய் த்வாபரயுகத்தில் ச்யாமமான நிறத்தையுடையனா யிருப்பவன் என்று இவ்வடிவுகளை அநுஸந்தித்துக்கொண்டு வந்து வணங்குகின்றனராம். அப்படி அவர்கள் வந்து வணங்குதற்கிடமான திருமலையை நெஞ்சே! அடைந்திடு என்றாராயிற்று. … 1. திருச்சந்த விருத்தம் 44.
English Translation
He reclines in the milk-ocean and in Arangam. He lay as a child and sucked the poisoned breast of the ogress. He prospers amid sages who call him “White Lord”, “Black Lord”, and “Gem-hued’ Lord”, and worship him in the hill ;of Tiruvenkatam,-thitherward, O Heart!
