(1018)
கொங்கலர்ந்த மலர்க்குருந்த மொசித்த கோவல னெம்பிரான்*
சங்குதங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக்கண்ணினன் *
பொங்கு புள்ளினைவாய்பிளந்த புராணர்தம்மிடம் *
பொங்குநீர்ச் செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கட மடைநெஞ்சமே!
பதவுரை
கொங்கு அலர் ந்த மலர் குருந்தம் ஒசித்த | – | பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்தழித்த |
கோவலன் | – | கோபால க்ருஷ்ணனாய் |
எம்பிரான் | – | அஸ்மத்ஸ்வாமியாய் |
சங்கு தங்கு தட கடல் துயில் கொண்ட | – | சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற |
தாமரை கண்ணினன் | – | புண்டரீகாக்ஷனாய், |
பொங்கு புள்ளினை வாய் பிளந்த | – | செருக்குடன் கிளர்ந்து வந்த பகாஸூரன் வாயைக் கிழித்தெறிந்த |
புராணர்தம் இடம் | – | புராண புருஷனான ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கு மிடமாயும் |
பொங்கு நீர் | – | நீர்வளமுடையதாய் |
செம் கயல் திளைக்கும் | – | சிவந்த மீன்கள் களித்து வாழப்பெற்ற |
சுனை | – | சுனைகளையுடையதாயுமிருக்கிற |
திருவேங்கடம் | – | திருமலையை |
நெஞ்சமே அடை | – | நெஞ்சே! நீ அடைந்திடு. |
முதற்பத்து – எட்டாந்திருமொழி.
கொங்கலர்ந்த மலர்க்குருந்தம் அவதாரிகை
கீழ்த் திருமொழியில், “நின்ற செந்தீமொண்டு சூறை நீள் விசும்பூடிரிய” என்றும், “தேய்த்த தீயால் விண் சிவக்கும்” என்றும் “கனைத்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்” என்றும் சிங்கவேள் குன்றத்தின் நில வெம்மையை அநுஸந்தித்துப் பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! ‘தெய்வமல்லால் செல்ல வொண்ணா’ என்றும் “சென்று காண்டற் கரிய கோயில்’ என்றும் சொல்லிக்கொண்டு சிங்கவேள் குன்றத்திலே ஏன் துவளுகிறீர்? “தெழிகுரலருவித் திருவேங்கடம்” “சிந்து மகிழுந் திருவேங்கடம் (தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடம்”, “மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாழ்வரே ” என்று நெஞ்சு குளிரப் பேசும்படியான திருவேங்கடமா மலையிலே நாம் அனைவர்க்கும் எளிதாக ஸேவை ஸாதிக்கிறோம், அங்கே வந்து தொழுது ஆநந்தமடைவீர்’ என்றருளிச் செய்ய அங்கே போய் அநுபவிக்கத் தொடங்குகிறார். இத்திருமொழியும் இதற்கு மேலுள்ள மூன்று திருமொழி களும் ஆக நாற்பது பாசுரங்கள் திருவேங்கட மலை விஷயமானவை. தமிழ்ப் பாஷை நடையாடுகிறவிடத்திற்கு எல்லையாயிருக்குமிறே இத் திருமலை.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1018
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன், எம் பிரான்,
சங்கு தங்கு தடங் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்,
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர்-தம் இடம் –
பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் அடை, நெஞ்சமே! —(1-8-1)
* * * – (கொங்கலர்ந்த மலர்.) கொங்கலர்ந்த மலர்க்குருந்த மொசித்த கோவலனாய் எம்பிரானாய் சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினனாய் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணனான எம்பெருமானது இருப்பிடமாகிய பொங்கு நீர் செங்கயல் திளைக்குஞ்சுனைத் திருவேங்கடத்தை நெஞ்சமே! அடை என்கிறார்.
குருந்தமொசித்தவரலாறு:- கிருஷ்ணனைக் கொல்லும் பொருட்டுக் கம்ஸனால் ஏவப்பட்ட பல அசுரர்களில் ஒருவன் அக்கண்ணபிரான் மலர் கொய்தற் பொருட்டு விரும்பியேறும் பூத்த குருந்த மாமொன்றில் பிரவேசித்து, அப்பெருமான் வந்து தன் மீது ஏறும்போது தான் முறிந்து வீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக் கருதியிருந்தபோது, மாயவனான கண்ணபிரான் அம்மரத்தைக் கைகளாற்பிடித்துத் தன் வலிமை கொண்டு முறித்து அழித்தனனென்பதாம். குருந்தமரமே குந்தமரமென்றும் சொல்லப்படும். விபவாவதாரத்தில் விரோதிகளை ஒழித்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் விரோதிகளை ஒழிக்க வல்லன் என்று காட்டுகிறார் இதனால், கோவலன் = ‘கோபாலம்’ என்ற வடசொல் கோவல னெனத்திரிந்தது. இனி கோ-பசுக்களை மேய்ப்பதில், வலன்-வல்லன், ஸமர்த்தன் என்றும் உரைப்பர் சிலர்.
சங்குதங்கு தடங்கடல் துயில் கொண்ட = சங்கு என்று ஸாதாரணமான சங்குகளைச் சொல்லவுமாம், சங்கநிதி பத்மநிதி முதலிய நிதிகளைச் சொல்லவுமாம். சங்குகளையுடைய விசாலமான திருப்பாற்கடலிலே சயனித்திருக்கின்ற புண்டரீகாக்ஷன் “***”= “ஏஷ நாராயணச் ஸ்ரீமாந் ஹீரார்ணவ நிகேதா: நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரீம்” என்றபடி திருப்பாற்கடல் நாதனே கண்ணபிரானாக வந்து அவதரித்தான், அவனே திருவேங்கட முடையானாகவும் வந்து ஸேவைஸாதிக்கிறான் என்று ஐக்கியம் காட்டுகிறபடி.
புள்ளினைவாய்பிளந்த வரலாறு:- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவி லொருத்திமகனாயொளித்து வளர்கின்ற கண்ணபிரான் மீது கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியுமாறு நியமிக்கப்பட்ட ஓரஸ் ரன் கொக்கின் உருவங் கொண்டு சென்று யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றி கிழித்திட்டனன் என்பதாம்.
புராணர் என்றது பழையவர் என்றபடி. இப்படி விரோதிகளை யொழிப்பது இன்று நேற்று அல்ல; பழையகாலமே பிடித்து இப்படியே செய்து போருகிறவர் என்பது கருத்து. அப்படிப்பட்ட பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் பரமபோக்யமான திருமலை; அவ்விடத்துச் சென்று சேர் நெஞ்சே! என்றாராயிற்று . ….. …. …. ….. (1)
English Translation
My Lord Gopala who broke the fragrant blossoming Kurundu tree, my lotus-eyed Lord who reclines in the conch-filled ocean-deep, my Lord of the Puranas who ripped the jaws of the demon horse Kesin,- He resides amid tanks brimming with fish; in Tiruvenkatam, thitherward, O Heart!
