(1574)

(1574)

பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற பாலை யாகி யிங்கே புகுந்து,என்

கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான் கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள்,

விண்ணு ளார்பெரு மானையெம் மானை வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல்

வண்ணன் மாமணி வண்ணனெம் மண்ணல் வண்ண மேயன்றி வாயுரை யாதே!

 

பதவுரை

பண்ணின்

இராகங்களுக்குள்ளே

இன்

இனிமையான

மொழி

சொல்லையுடைய

யாழ்

வீணையினுடைய

நரம்பில்

தந்திகளில்

பெற்ற

உண்டான

பாலை ஆகி

பாலையென்கிற சிறந்த பண் போலே மிக இனியனாய்க் கொண்டு

இங்கே புகுந்து

என்னெஞ்சில் வந்து புகுந்து

என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்

எனது அவயவங்களைத் தனக்கு இருப்பிடமாக அங்கீகரித்தான்

கொண்டபின்

அப்படி அங்கீகரித்தபின்பு,-

மறையோர்

வைதிகர்களினுடைய

மனம்

மனத்தை

தன் உள்

தனது வாஸஸ்தானமாகவுடையவனும்

விண்ணுளார் பெருமானை

நித்யஸூரிகளுக்குநாதனும்

எம்மானை

எனக்கு ஸ்வாமியும்

வீங்கு நீர்

நிரம்பிய நீரையுடையதாய்

மகரம் திளைக்கும்

மீன்கள் துள்ளிவிளையாடா நி்ன்றுள்ளதான

கடல்

கடல் போன்ற

வண்ணன்

திருநிறத்தையுடையவனும்

மா மணி வண்ணன்

நீலமணி நிறத்தவனும்

எம் அண்ணல்

எமக்கு நாதனமான திருநறையூர் நம்பியீனுடைய

வண்ணமே அன்றி

ஸ்வபாவத்தையே யல்லது (மற்றொன்றை)

என் வாய் உரையாது

என் வாய் சொல்லமாட்டாது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னுடைய மனமொழி மெய்கள் அவனையல்லாது அறியா என்கிறார்.  எம்பெருமானடைய விலக்ஷணமான இனிமைக்கு அபூர்வமான த்ருஷ்டாந்தமொன்று இப்பாட்டில் கூறுகின்றார்; “பண்ணினின்மொழி யாழ் நரம்பிற்பெற்ற பாலையாகி” = பாலை யென்றது ஒரு சிறந்த பண்.  வீணையின் தந்தியிலே பாலையென்னும் பண்ணை இசைத்தால் எவ்வளவு இனிமையாயிருக்குமோ அவ்வளவு இனிமையாக என்னுள்ளே புகுந்தானென்கை.  “யாழ்பயில ரூபியைப் பாலையாகி யென்று விசேஷி்க்கையாலே” என்பது ஆசார்ய ஹ்ருதய ஸூக்தி.

இரண்டாமடியிலுள்ள ‘கொண்டபின்’ என்பதற்கு ஈற்றடியில் அந்வயம்; என் கண்ணையும் நெஞ்சையும் வாயையும் இடங் கொண்டானாதலால் என் வாயானது எம்மண்ணல் வண்ணமேயன்றி மற்றொன்றை யுரையாது என்கை.

இரண்டாமடியின் முடிவிலுள்ள ‘மனந்தன்னுள்’ என்பதற்கு ‘மனத்திலே’ என்று பொருளல்ல; அப்படியாகில் மேல் இயையாது; மறையோர் மனம் – வைதிகர்களின் திருவுள்ளத்தை, தன் – தனக்கு உரிய, உள் – உள்ளாக (இடமாக)க் கொண்டவன் என்க.

‘கடல்வண்ணன்’ என்று சொல்லிவிடாதே ‘வீங்குநீர்’ என்றும் ‘மகரந்திளைக்கும்’ என்றும் கடலுக்கு இரண்டு விசேஷணங்களிட்டதன் கருத்து யாதெனில்; கடல் நீர்நிரம்பப் பெற்றிருப்பதுபோல எம்பெருமான் லாவண்யம் நிறைந்தவனென்றும், கடலில் மீன்கள் திளைக்குமாபோலே மீன்போன்ற திருக்கண்கள் திகழப்பெற்றவ னென்பெருமான் என்றும் கொள்க.

வண்ணமேயன்றி = திருமேனி நிறத்தைச் சொன்னதாகவுமாம்; ஆச்ரித ஸௌலப்யம் முதலிய குணங்களைச் சொன்னதாகவுமாம்.

 

English Translation

Sweetness sounding from the well tempered Iyre Yal-string which plays on the Palai mode softly! Lord residing in hearts of the Vedic seer,s –he has come to my heart, eyes and lowly tongue.  He’s the lord of all gods in the sky above. He reclines in deep ocean with dancing fish.  He’s the dark-of-hue emerald an Master, my tongue knows to prate the name of no other god!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top