(1524)

(1524)

கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி

விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை

மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை

நட்டானை நாடி நறையூரில் கண்டேனே.

 

பதவுரை

கட்டு ஏறு நீள் சோலை

காவல் மிக்கிருப்பதும் நீண்ட சோலைகளையுடையதுமான

காண்டவத்தை தீ மூட்டி விட்டானை

காண்டவமென்னும் வனத்தை அக்நிக்கு இரையாக்கினவனும்

மெய்யம் அமர்ந்த பெருமானை

திருமெய்யத்தில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியும்

மட்டு ஏறு கற்பகத்தை

தேன் மிகுந்த கல்பவிருக்ஷத்தை

மாதர்க்கு ஆய்

(ஸத்யபாமைப்) பிராட்டிக்கா

வண் துவரை நட்டானை

(கொணர்ந்து) ஸ்தாபித்தவனுமான எம்பெருமானை

நாடி, நறையூரில் கண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காண்டவ வனமென்பது தேவேந்திரனுக்கு உரியதாய்ப் பூலோகத்திலிருந்த தொரு காடு.  ஒருநாள் அக்நிபகவான் ஒரு அந்தணவேடம் பூண்டு அர்ஜுநனும் கண்ணபிரானும் கூடியிருக்குமிடத்திலே வந்துசேர, அவ்வந்தணனைக் கிருஷ்ணார்ஜுநர்கள் நன்கு உபசரிக்க, அவன் உணவுவேண்ட, ‘வேண்டிய உணவையளிப்போம்’ என்று அவ்விருவரும் உறுதிமொழிகூற, உடனே அவ்வந்தணன் தான் இன்னானென்று உண்மைதெரிவித்துக் காண்டவ வனத்தைத்  தனக்கு இரையாக அளிக்குமாறுவேண்ட, அவர்கள் பல கொடிய அசுரர்களும் அரக்கர்களும் துஷ்டமிருகங்களும் நிரம்பியிருக்கு மிந்தக்காடு அழிந்தொழிவது மிக நன்றே’ என்று நிச்சயித்து அக்நிபகவானை நோக்கி ‘அங்ஙனமே உண்பாயாக’ என்று அநுமதி தந்ததின்பேரில் அக்நி அக்காடு முழுவதையும் ஆக்ரமித்துப் பூர்ணத்ருப்தியாக உண்டனன் என்ற கதை மஹாபாரத்தில் ஆதி பருவத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.  மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவனான கண்ணபிரான் தனது அன்பனான இந்திரன் வருந்தும்படி அவனது காட்டையழிக்க அநுமதித்தது அவதார ப்ரயோஜனம் நிறைவேறுதற்காகவென்க; அக்காட்டிலுள்ள அளவற்ற துஷ்டஜந்து ஸமூஹங்களைத் தொலைத்தொழிக்கும் முகத்தால் பூமியி்ன் பாரத்தைக் குறைத்தருளின னென்றுணர்க.  இவ்வனத்தின் தன்மையைப்பற்றி வில்லிபுத்தூரார் பாரதத்தில் காண்டவதகனச்சருக்கத்தில் “மிடைந்த நால்வகை மகீருகங்களு நெடுவெற்பினங்களுந்துன்றி, அடைந்த தானவரரக்கர் பேருரகருக்காலயங்களுமாகிக், குடைந்து சோரி கொள்வாளுகிரரி முதற்கொடு விலங்கினமிக்குக், கடைந்த கூரெயிற்றால தக்கனும் வாழ் கானனமதுகண்டீர்” என்றுள்ள செய்யுள் இங்குக் குறிக்கொள்ளத்தக்கது.

 

English Translation

The Lord who set fire to the Kandava forest and resides in Meyyam is a nectar-dripping kalpaka tree.  He built the beautiful Dvaraka for safyabhama. I have seen him in Naraiyur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top