(3616)
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ,
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ,
தாமரைக் கண்ணாவோ. தனியேன் தனியா ளாவோ,
தாமரைக் கையாவோ. உன்னை யென்றுகொல் சார்வதுவே?
(3617)
என்றுகொல் சேர்வதந் தோஅரன் நான்முக னேத்தும்,
செய்ய நின்திருப் பாதத்தை யான்நிலம் நீரெரி கால்,
விண்ணுயிர் என்றிவை தாம்முத லாமுற்று மாய்நின்ற எந்தாயோ,
குன்றெடுத் தாநிரை மேய்த்தவை காத்தவெங் கூத்தாவோ
(3618)
காத்தவெங் கூத்தாவோ! மலையேந்திக் கன்மாரி தன்னை,
பூத்தண் டுழாய்முடி யாய்! புனைகொன்றையஞ் செஞ்சடையாய்,
வாய்த்தவென் நான்முகனே! வந்தென் னாருயிர் நீயானால்,
ஏத்தருங் கீர்த்தியினாய்! உன்னை யெங்குத் தலைப்பெய்வனே?
(3619)
எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில் மூவுல கும்நீயே,
அங்குயர் முக்கட் பிரான் பிரமன்பெரு மானவன்நீ,
வெங்கதிர் வச்சிரக் கையிந் திரன்முத லாத்தெய்வம்நீ,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யென்னுடைக் கோவலனே.
(3620)
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக்கரு மாணிக்கமே,
உன்னுடை யுந்தி மலருலகம் அவைமூன் றும்பரந்து,
உன்னுடைச் சோதிவெள் ளத்தகம் பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு,
என்னுடை யாருயிரார் எங்ஙனே கொல்வந் தெய்துவரே?
(3621)
வந்தெய்து மாறறி யேன்மல்கு நீலச் சுடர்தழைப்ப,
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு மாணிக்கம் சேர்வதுபோல்,
அந்தர மேல்செம்பட் டோடடி உந்திகை மார்வுகண்வாய்,
செஞ்சுடர்ச் சோதி விடவுறை என்திரு மார்பனையே.
(3622)
என்திரு மார்பன் தன்னையென் மலைமகள் கூறன்தன்னை,
என்றுமென் நாமக ளையகம் பால்கொண்ட நான்முகனை,
நின்ற சசிபதி யைநிலங் கீண்டெயில் மூன்றெரித்த,
வென்று புலம்துரந் தவிசும் பாளியைக் காணேனோ.
(3623)
ஆளியைக் காண்பரி யாயரி காண்நரி யாய்,அரக்கர்
ஊளையிட் டன்றிலங்கைகடந் துபிலம் புக்கொளிப்ப,
மீளியம் புள்ளைக் கடாய்விறல் மாலியைக் கொன்று,பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த் தானையும் காண்டுங்கொலோ?
(3624)
காண்டுங்கொ லோநெஞ்சமே! கடியவினை யேமுயலும்,
ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக் கன்குலத் தைத்தடிந்து,
மீண்டுமவன் தம்பிக்கே விரிநீரி லங்கையருளி,
ஆண்டுதன் சோதிபுக் கவம ரர்அரி யேற்றினையே?
(3625)
ஏற்றரும் வைகுந்தத் தையருளும் நமக்கு, ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு மாயங்க ளேயியற்றி,
கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க் காயக்கொடுஞ் சேனைதடிந்து,
ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ் சோதிபுக் கஅரியே.
(3626)
புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,
மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,
தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே.
