(3617)
என்றுகொல் சேர்வதந் தோஅரன் நான்முக னேத்தும்,
செய்ய நின்திருப் பாதத்தை யான்நிலம் நீரெரி கால்,
விண்ணுயிர் என்றிவை தாம்முத லாமுற்று மாய்நின்ற எந்தாயோ,
குன்றெடுத் தாநிரை மேய்த்தவை காத்தவெங் கூத்தாவோ
பதவுரை
|
நிலம் நீர் எரி கால் விண் |
– |
பஞ்ச பூதங்களும் |
|
உயிர் |
– |
பிராணிவர்க்கமும் |
|
என்ற இவை தாம் முதல் ஆ |
– |
ஆகிய இவை முதலாக |
|
முற்றும் |
– |
ஸகல பதார்த்தங்களும் |
|
ஆய் நின்ற எந்தாய் ஒ |
– |
தானே யென்னலாம் படி நின்ற ஸ்வாமியே! |
|
ஆ நிரை மேய்தது |
– |
பசுக்களின் கூட்டங்களை மேய்த்து |
|
குன்று எடுத்து அவை காத்த |
– |
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து அப்பசுக்களை ரக்ஷித்தருளின |
|
எம் கூத்தா ஓ |
– |
குடக்கூத்து முதலிய கூத்துக்களில் வல்லவனான எம்பெருமானே! |
|
அரண் நான் முகன் ஏத்தும் |
– |
சிவனும் பிரமனும் துதிக்கும்படியான |
|
நின் செய்ய திரு பாதத்தை |
– |
உனது சேவடியை |
|
யான் சேர்வது என்று கொல் |
– |
யான் சேரப் பெறுவது எந்நாளோ? |
|
அந்தோ |
– |
ஜயோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மீண்டும் அதுவே வாய்வெருவுதலாய்ச் செல்லுகிறார். கீழ்ப்பாட்டில் ‘என்றுகொல்சேர்வது’ என்றாரே; அதற்கு ஒரு மறுமாற்றம் பெற்றிலர். அத்தோடு அந்தோ என்பதையுங் கூட்டியழுகிறார். நான் மூடிந்ததென்கிறார். திருவடிக்கு ‘அரண் நான்முகனேத்தும்’ என்ற அடைமொழி கொடுத்தது அவர்கள் துதிப்பதனால் திருவடிக்கு ஒரு பெருமை என்கைக்காகவன்று; அழிப்பதும் ஆக்குவதுமே தொழிபாயிருக்கின்ற அவர்களுங்கூட ஆசைப் படுந்திருவடியன்றோ; நான் ஆசைப் படச்சொல்லவேணுமோ வென்றவாறு. அவர்கள் ஏத்துவது ப்ரயோஜநாந்தரத்துக்காக; நான் ஏத்துவது ஸ்வயம் ப்ரயோஜநமாக என்றுணராய்.
நில நீரொஜீகால் என்று தொடங்கி, சேதநாசேதநாத்மகமான ஸமஸ்தவஸ் துக்களுக்கும் ஆத்மாவாயிருப்பவனே! என்கிறார். பிரானே! உலகில் எப்பொருளைக்கண்டாலும் அவற்றை நீயாகவே நினைத்து மகிழ்ச்சி கொள்ளும்படியானவனே நான்; ஆயினும் அஸாதாரணமான வுன் திருவடிகளைப் பெற்றாலல்லது என் ஆசை தீராதேயென்று காட்டுகிறபடி.
குன்றெடுத்து ஆநிரைமேய்த்து அவைகாத்த—ஆநிரைமேய்க்கைக்காகக் குன்றெடுக்க வேண்டிய அவசியமில்லையாதலால், ‘ஆநிரைமேய்த்து குன்றெடுத்து அவை காத்த’ என்று யோஜித்துக்கொள்வது.
English Translation
Alas, when am I to join your red lotus feet, fittingly worshipped by Siva and Brahma? O Lord who stands as Earth, Fire, water. Wind and sky! O My Dancer-Lord who protected the cows under a mount!
