(3619)
எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில் மூவுல கும்நீயே,
அங்குயர் முக்கட் பிரான் பிரமன்பெரு மானவன்நீ,
வெங்கதிர் வச்சிரக் கையிந் திரன்முத லாத்தெய்வம்நீ,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யென்னுடைக் கோவலனே.
பதவுரை
|
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைகோவலனே |
– |
மதுவோடு கூடி மலர்ந்த செவ்வித் துழாயையணிந்த மயிர்முடியையுடையனாய் எனக்குப் பரம போக்யனான கோபாலக்ருஷ்ணனே!, |
|
எழில் மூ உலகும் நீயே |
– |
விலக்ஷ்ணமான மூவுலகமும் நீயிட்ட வழக்காயிருக்கும், |
|
அங்கு உயர் முக்கண் பிரான் |
– |
அந்த லோகத்திலே உயர்ந்தவனான சிவ பிரானும் |
|
பிரமன் பெருமான் அவன் |
– |
அப்படிப்பட்ட நான் முகக்கடவுளும் |
|
நீ |
– |
நீயிட்ட வழக்காயிருப்பர்கள். |
|
வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன முதலா தெய்வம் நீ |
– |
வெவ்விய பிரதாபம் பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீயிட்ட வழக்கே; |
|
(ஆனபின்பு) |
||
|
நான் எங்கு தலைப்பெய்வன் |
– |
நான் என் முயற்சியினாலேயே உன்னை வந்து கிட்டுவேனோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
(எங்குத் தலைப்பெய்வன்.) ஸர்வஸ்மாத்பரனாய் ஆசரிதபவ்யனாய் போக்யதை அளவிறந்திருப்பவனானவுன்னை அகிஞ்சநனான நான் எங்கே கிட்டுவதென்கிறார். எழில் மூவுலகும் நீயே-உலகத்தில அவ்வோபதார்த்தங்களுக்குள்ள உயர்த்தியெல்லாம் நீயிட்ட வழக்கு என்றபடி. இப்படியே மேலடிகளிலும் கொள்க. முக்கண்ணனுக்குள்ள ஏற்றமும் பிரமனுக்குள்ள எற்றமும் இந்திரனுக்கும் அவனைச் சேர்ந்த மற்றுமுண்டான தேவர்களுக்குமுள்ள எற்றமுமெல்லாம் நீயிட்ட வழக்கென்றபடி. பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்குண்டான ஜச்வரியமெல்லாம் பிரானே! உன்ன தீனமாக வன்றா விருப்பது; அப்படிப்பட்ட நீ என்னுடைய பிரதிபந்தகங்களையும் போக்கி என்னை யுன்திருவடிகளிலே சேர்த்தருளவேணுமென்று கருத்து.
English Translation
O My Gopala, wearing a honey-dripping cool Tulasi wreath! You are the three fair worlds. The three-eyed Siva is you, the Lord Brahma too is you. The thunderbolt-Indra and all the other gods are you. Where am I to meet you?
